For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படித்தவர் பாமரராகலாமா? - முதல்வர் கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: படித்தவர்களாலேயே பல இடங்களில் வன்முறைகள் ஏற்படுவதும், படித்தவர்களாலேயே பல இடங்களில் அராஜகங்கள் மலிவதும் அன்றாட நிகழ்ச்சிகளாக ஆகிவிட்டிருக்கின்றன, என்றார் முதல்வர் கருணாநிதி.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகக் கட்டிடம் ரூ.11 கோடியே 54 லட்சத்தில் சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக கட்டிடம் மேலக்கோட்டையூரில் ரூ.8 கோடியே 74 லட்சத்திற்கு கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற கட்டிடம் ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில் சென்னையில் காமராஜர் சாலையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த 3 கட்டிடங்களின் திறப்பு விழா மற்றும் அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் 836 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா ஆகியவை மொத்தமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார். முதல்வர் கருணாநிதி புதிய கட்டிடங்களை திறந்துவைத்து, உதவி பேராசிரியர்களுக்கான பணி ஆணைகளை வழங்கி பேசியதாவது:

"திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் திறப்பு விழா என்ற காரணத்தினாலோ என்னவோ சொற்பொழிவாளர்களில் சிலர்- என்னைத் தவிர எல்லோருமே- திறந்த நிலையிலேயே பல விஷயங்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நான் எடுத்துச் சொல்கின்ற செய்திகளுக்கு சுவர் உண்டு, கதவு உண்டு, மேலே கூரை உண்டு.

அவர்கள் எடுத்துச் சொன்னதைப் போல, திறந்த நிலையிலே இருக்கக் கூடியவைகள் அல்ல என்பதை முதலிலேயே சொல்ல விரும்புகிறேன். படிப்பு என்பது பாமரத் தன்மையைப் போக்கக் கூடியது, பாமரர்களுக்கு படிப்பு ஒரு விளக்கு என்ற கருத்தை இங்கே வரவேற்புரையாற்றிய நேரத்தில் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

படித்தவர் பாமரரானால்....

பாமரன் படித்த பிறகு, அவன் படிப்பாளியாக ஆனபிறகு இப்பொழுது நாட்டிலே படித்தவன் பாமரனாக ஆகிவிடுகிறான். பாமரன் படித்தவனாக ஆகிய அதே நேரத்தில் படித்தவன் பாமரனாக ஆகிவிடுகிறான் என்பதை மறந்து விடக்கூடாது. அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் சொல்கின்ற இந்த ஒரே வரி எத்தனையோ நிகழ்ச்சிகளை உங்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடும்.

படித்தால் பண்பு ஏற்படும், அடக்கம் ஏற்படும், அறிவு வளரும், அமைதியான வாழ்க்கையை அவர்கள் வாழ்வார்கள், அமளி இல்லாத நாடு, வன்முறை இல்லாத நாடு எழும் என்றெல்லாம் சொல்வோம். ஆனால் படித்தவர்களாலேயே பல இடங்களில் வன்முறைகள் ஏற்படுவதும், படித்தவர்களாலேயே பல இடங்களில் அராஜகங்கள் மலிவதும் அன்றாட நிகழ்ச்சிகளாக ஆகிவிட்டிருக்கின்றன.

இன்றைக்கு காலையிலே கூட படித்தவர்கள் சில பேர் ஊர்வலமாக வந்து நம்முடைய தலைமைச் செயலகத்திற்குள்ளேயே நுழைவதற்கு ஆயத்தம் செய்து, காவல் துறையினர் அவர்களை கடுமையாகவும், கனிவாகவும் கேட்டுக்கொண்டு வெளியே அனுப்பியிருக்கிறார்கள். அவர்களை அழைத்து மாலையிலே நான் பேசினேன். காலையிலே ஏன் அப்படி நடைபெற்றது, படித்தவர்கள் இப்படி செய்யலாமா என்று நான் அழைத்துப் பேசினேன். அவர்கள் அதற்கு காரணம் சொன்னார்கள்.

வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளமா?

அய்யா, எங்களுக்கு வேலை இடையிலே பிடுங்கிக்கொள்ளப்பட்டு விட்டது. அந்த வேலையைத் திரும்பத் தர வேண்டுமென்று கேட்டு போராடிக்கொண்டிருந்தபோது- அந்த வேலையை நீங்கள் தான் தந்தீர்கள் என்றார்கள். சரி, அதற்கென்ன என்றேன். கடந்த கால ஆட்சியிலே வேலை எங்களை விட்டுப்போனது. அந்த வேலை போன பிறகு- அந்த வேலையை மீண்டும் எங்களுக்குத் தர வேண்டுமென்பதற்காக நீங்கள் போராடி- நாங்கள் அந்த வேலையைப் பெற்றோம். எந்த வேலையிலே இருந்தீர்கள், எப்படி போனது என்று மீண்டும் நான் கேட்டேன். நாங்கள் எல்லாம் சாலைப் பணியாளர்களாக உங்கள் ஆட்சியிலேதான் பணி அமர்த்தப்பட்டோம்.

நாங்கள் எல்லாம் ஓரளவிற்கு படித்தவர்கள். வெறும் கூலி வேலை செய்பவர்கள் அல்ல, படித்தும் இருக்கிறோம். உங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் எங்களை வேலையிலிருந்து அனுப்பிவிட்டார்கள். ஆனால் நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் எங்களை மீண்டும் வேலையிலே அமர்த்தி விட்டீர்கள் என்றதும், சரி பிறகு என்னதான் பிரச்சினை என்று கேட்டேன். கடந்த ஆட்சியிலே எங்களை வேலையிலிருந்து துரத்தினார்களே, அப்படி துரத்தப்பட்ட காலம் முதல், மறுபடியும் நீங்கள் எங்களை வேலைக்கு அமர்த்தினீர்களே, அந்த காலம் வரை சுமார் நாற்பது மாத காலம் நாங்கள் வேலை இல்லாமல் இருந்தோமே, அந்த காலத்திற்குரிய சம்பளத்தை தரவேண்டும்.

அந்த காலத்தை பணி செய்த காலமாக கணக்கிலே கொள்ள வேண்டும் என்பதற்காக போராடுகிறோம் என்றார்கள். அவர்களை பணியிலே சேர்த்தது நான், அந்தப் பணியிலிருந்து அவர்களை அனுப்பியது வேறு யாரோ? அனுப்பியவர்களை மீண்டும் பணியிலே சேர்க்க வேண்டுமென்பதற்காகப் போராடி- மற்ற கட்சிகளோடு இணைந்து பாடுபட்டு- அந்த போராட்டத்திலே வெற்றி பெற்று- அந்தச் சாலைப் பணியாளர்களுக்கு அப்போது வேலை கிடைக்காமல், 41 மாதங்கள் அவர்கள் வீட்டிலே இருந்து விட்டு, மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தபிறகு- அவர்களையெல்லாம் வேலையிலே அமர்த்தினால்- அவர்கள் சொல்கிறார்கள்- சரி, மகிழ்ச்சி, நன்றி- எங்களை வேலைக்கு அமர்த்திவிட்டாய், இடையிலே 41 மாத காலம் பழைய ஆட்சியில் நாங்கள் வேலையில்லாமல் இருந்தோமே, அந்த மாதங்களுக்கு, அந்த இடைவெளிக்கு இந்த ஆட்சியிலே சம்பளம் கொடுக்க வேண்டும், அந்த காலத்தையும் கணக்கிலே எடுத்துச்கொள்ள வேண்டுமென்று போராடுகிறார்கள் என்றால் இது படிப்பினால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாமா? கூடாது. படிப்பும் தேவை- நாம் என்ன காரியங்களை ஆற்றுகிறோம் என்று பக்குவமாக எண்ணிப்பார்க்கக் கூடிய பகுத்தறிவும் தேவை. படித்தால் மாத்திரம் போதாது.

பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும்...

பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். அந்தப் பகுத்தறிவு போதனையைத்தான் தந்தை பெரியார் அவர்கள், அண்ணா அவர்கள், இந்த இயக்கத்திலே உள்ள தலைவர்கள் எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அந்த மக்கள் சமுதாயத்தினுடைய ஒரு பிரிவாக- எதிர்காலச் சமுதாயத்தை ஒளி மிக்க சமுதாயமாக ஆக்கக் கூடிய கதிர்களாக- சுடர்களாக இருப்பவர்கள் தான் மாணவர்கள். அந்தச் சுடர்களை மீண்டும் ஒளிபொருந்திய விளக்குகளாக ஆக்கக் கூடிய- அதைத் தூண்டி விடக் கூடிய நிலையிலே உள்ளவர்கள்தான் ஆசிரியர்கள்.

அந்த ஆசிரியர்கள்தான் இன்றைக்கு 800 பேர் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. இந்தக் கருத்துகள் மாணவர்கள் மத்தியிலே பதிய வைக்கப்பட வேண்டும். அப்படி பதிய வைக்கப்படுகின்ற காரணத்தால் நாடு அமைதியான முறையிலே, அறிவார்ந்த வழியிலே உரிமைப் போராட்டம் என்றாலும் கூட அதற்காக வழிமுறைகள் என்ன என்பதை யோசித்து அந்த வகையிலே போராடக்கூடிய- அந்த வகையிலே பாடுபடக் கூடிய நிலைமையிலே மாணவ சமுதாயமும், அந்த மாணவ சமுதாயத்திற்குப் போதனை செய்யக் கூடிய- பாடம் கற்பிக்கக் கூடிய ஆசிரிய சமுதாயமும்- இந்த இரண்டு சமுதாயங்களும் இருக்கின்ற இந்தத் தமிழ்ச் சமுதாயமும் என்றென்றும் தன்னுடைய கடமைகளை- தன்னுடைய ஆர்வமான உழைப்பை- தன்னுடைய பணிகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி அமைத்துக்கொண்டால்தான் இது போன்ற பல்கலைக் கழகங்கள், கல்விக் கூடங்கள் இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்திலே மரத்தடியிலே, ஆசிரமங்களிலே படித்து அங்கிருந்து கல்வி கற்று- அங்கிருந்து பெற்ற அறிவை வலுப்படுத்தி- அதைப் பயன்படுத்தி எத்தனையோ அற்புதங்களை நாட்டிலே மனிதர்கள் விளைவித்திருக்கிறார்கள்.

நம்முடைய பொன்முடி இங்கே எடுத்துக்காட்டியதைப் போல் பல வகையான விளைவுகள்- பல வகையான உதவிகள்- விஞ்ஞான ரீதியான ஆக்கப்பூர்வமான வசதிகள்- வாய்ப்புகள்- இவைகளோடு கூடிய படிப்பு இன்றைய படிப்பு. இதையெல்லாம் பயன்படுத்தி நாம் பெற வேண்டிய பயன்கள் பெரும் பயன்கள், அந்தப் பயன்களைப் பெறுவதற்கு இன்றைக்கு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களும் உழைக்க வேண்டும். அந்த ஆசிரியர்களுக்கு அன்போடு நடந்து அவர்களுக்கு உற்சாகம் தரக் கூடிய வகையிலே மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

திராவிடத்துக்கு உரியவர்கள்...

இந்த இருவருடைய ஒத்துழைப்புதான் எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கக் கூடியது, நல்ல நிலையிலே வாழ வைக்கக் கூடியது, வளப்படுத்தக்கூடியது. மாணவச் செல்வங்கள், ஆசிரியப் பெருமக்கள் நீங்கள் இருவரும் இணைந்து புதியதோர் சமுதாயத்தை உருவாக்கவும், இருக்கின்ற சமுதாயத்திற்கு இழிவு நேராமல் பார்த்துக்கொள்ளவும் பாடுபட வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, சமுதாய ரீதியில், இன ரீதியில் நாமெல்லாம் ஓரினம்- எந்த இனம் என்பதை இங்கே எடுத்துச் சொல்லி- அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை- இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் ஒரு இனம், அந்த இனத்தைத் தான் இங்கே பாடிய "நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்'' என்ற இந்தப் பாடலில் "திராவிடம்'' என்ற சொல் வந்ததே, அந்த "திராவிடத்திற்கு'' உரியவர்கள் நாம். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய பாட்டில் வருகின்ற சொல்தான் "திராவிடம்''.

அந்த "திராவிடத்தின்'' செல்வங்களாக- திராவிடச் சமுதாயத்தினுடைய தீரர்களாக- திராவிடச் சமுதாயத்தினுடைய திரு விளக்குகளாக நீங்கள் எல்லாம் வாழ வேண்டும், வாழ வேண்டுமென்று வாழ்த்தி - என்னுடைய மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் தெரிவித்து- இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்," என்றார் முதல்வர் கருணாநிதி.

விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கல்யாணி அன்புச்செல்வன், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க.வைத்தியநாதன், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற துணைத்தலைவர் பேராசிரியர் ஏ.ராமசாமி உள்பட பலர் பேசினார்கள்.

தமிழக துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

English summary
Chief Minister Karunanidhi told that the literates sometimes behave like illiterates. Due to this most of the violence things happened in the country. Yesterday he attended the inauguration of TN open university new building and advised the teachers community to behave always like literates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X