For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீதம் கொடுத்தது திமுகதான்-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது திமுக அரசு மட்டுமே என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதம்:

1996-ல் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு, தமிழ்நாட்டில் முதல் முறையாக மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடுகளை அமல்படுத்தி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தியது. அதே அடிப்படையில் 2006 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலிலும் ஏறத்தாழ 40 ஆயிரம் மகளிர் நான்கு மாநகராட்சி மேயர் பொறுப்பு உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களாகவும், உறுப்பினர்களாகவும் பொறுப்பேற்று மக்களாட்சி தத்துவத்தின் வெற்றி முத்திரைகளாக விளங்குகின்றனர்.

பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு அக்டோபர் 2006ல் வெற்றிகரமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற கிராம ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் கிராம சமுதாயத் தலைவர்கள் ஆகியோரை அழைத்து சென்னையில் 13.11.2006 அன்று சமத்துவப் பெருவிழா நடத்தி சிறப்பிக்கப்பட்டது.

விவசாயிகளின் வரிச்சுமையை குறைத்திட 2009 டிசம்பரில் சட்டம் இயற்றப்பட்டு தலவரி மற்றும் தலமேல் வரி வசூலிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. பல உறுப்பினர் வார்டுகளை ஓர் உறுப்பினர் வார்டுகளாக மாற்றம் செய்தல்-கிராம ஊராட்சிகளில் நடைமுறையில் இருந்த பல உறுப்பினர் வார்டுகளை நீக்கம் செய்து, அவற்றிற்கு பதிலாக ஓர் உறுப்பினர் கொண்ட வார்டுகளாக மாற்றி 2009-ல் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

பாரம்பரியமாக, சிறு குளங்களை ஊராட்சி ஒன்றியங்களே பராமரித்து வந்தன. குட்டை பராமரிப்புப் பணிகளைக் கிராம ஊராட்சிகளுக்கு சட்டரீதியாக ஒப்படைத்திடவும் குளங்களின் பராமரிப்புப் பணிகளை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒப்படைத்திடவும் 2009-ல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் விளம்பர பலகைகளுக்கான உரிமம் வழங்குவதற்கான வழிமுறைகளை வலுப்படுத்தவும், விளம்பர பலகைகள் நிறுவுதலைக் கண்காணிக்கவும், நகர்ப்புற சட்டத்திற்கு இணையாக, விளம்பர பலகை நிறுவ உரிமம் வழங்குதல் மற்றும் விளம்பர வரி விதிப்பு செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வழங்கி, 18.5.2009 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊராட்சிகள் திறமையாகவும் பொறுப்பாகவும் செயல்படுகின்றன என்பதற்காக மத்திய அரசின் ஊராட்சி அமைச்சகத்தினால் 2006-க்குப்பின் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சிறப்பான மற்றும் புதுமையான முயற்சிகளைச் செயல்படுத்தும் 15 கிராம ஊராட்சிகளைத் தேர்ந்தெடுத்து "உத்தமர் காந்தி ஊராட்சி விருது'' வழங்கும் திட்டம் 2006 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு; விருது பெறும் கிராம ஊராட்சிகளுக்கு கேடயமும், ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசும், கிராம ஊராட்சித் தலைவர்களுக்குப் பதக்கமும் நற்சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களது சமூகப்பொறுப்பின் ஒரு பகுதியாக பாராட்டத்தக்க வகையில், பல்வேறு சமூக பொருளாதார மேம்பாட்டுப்பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் 2007-08-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும், ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், நற்சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

மாநில அரசின் சொந்த வரி வருவாயிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதி 2007-2008-ம் ஆண்டில் 8 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகவும் மேலும் இது நடப்பு நிதியாண்டில் 2009-2010-ல் 9.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு 2010-2011-ம் ஆண்டில் 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி 2006-07-ம் ஆண்டில் ரூ.1,225 கோடியிலிருந்து 2010-11-ம் ஆண்டிற்கு ரூபாய் 2,674.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குடிநீர் வழங்குதல், சுகாதாரம், சாலைகள் மற்றும் தெருவிளக்குகளை பராமரித்தல் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவு செய்யும் பொறுப்பு கிராம ஊராட்சிகளைச் சார்ந்தது. ஆனால் பல கிராம ஊராட்சிகள் போதிய நிதி வசதியின்றி அடிப்படை வசதிகளை நிறைவு செய்ய சிரமப்படுவதால், இந்நிலையினை சரிசெய்ய பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

2007-08-ம் ஆண்டிலிருந்து மாநில நிதி ஆணைய நிதிப் பகிர்வில், கிராம ஊராட்சிகளின் பங்கு 47 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நிதிப் பங்கீடு செய்யப்படும்போது, பல சிறிய ஊராட்சிகளுக்கு போதுமான நிதி கிடைப்பதில்லை. இந்நிலையினை மாற்ற மாநில நிதிக்குழு மான்யத்திலிருந்து அனைத்து ஊராட்சிகளுக்கும் குறைந்தபட்ச நிதியாக தலா ரூபாய் 3 லட்சம் வீதம் சமமாக வழங்கவும், மீதமுள்ள தொகையை மக்கள் தொகை அடிப்படையில் வழங்கவும் ஆணையிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சமச்சீராக நிதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், 2008-09-ம் ஆண்டு முதல் மாநில நிதிக்குழு மான்யத்திலிருந்து விடுவிக்கப்படும் நிதியில் குறைந்தபட்ச நிதியாக தலா ரூ.30 லட்சம் வீதம் சமமாக வழங்க ஆணை வெளியிடப்பட்டு அதன்படி நிதி விடுவிக்கப்படுகிறது.

மத்திய அரசிடமிருந்து பெறப்படும் பன்னிரெண்டாவது நிதிக்குழு மான்யம் முழுமையையும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது 2006-07-ம் ஆண்டு இரண்டாவது அரையாண்டு முதல் ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், 2010-11-ம் ஆண்டிற்கான பதிமூன்றாவது நிதிக் குழு மான்ய நிதி 286 கோடி ரூபாய் கிராம ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

தலவரி, தலமேல் வரி, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் கேளிக்கை வரி இவை மூலமான வருவாய் இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சி தலைவர்களால் மாவட்ட அளவில் தொடர்புடைய ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கணக்குகளுக்கு ஈடு செய்யப்பட்டது.

ஒருமுகப்படுத்தப்பட்ட ஒப்படைக்கப்பட்ட வருவாய் கீழுள்ள சிறப்பு திட்டத்தின்கீழ் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களுக்கு 385 வாகனங்களும், 664 வாகனங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், செயற் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர், புதிதாக தோற்று விக்கப்பட்ட உபகோட்டங்களின் உதவி செயற் பொறியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மிகவும் பழுதடைந்துள்ள 87 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களுக்குப் பதிலாக ஒவ்வொரு கட்டடமும் 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மிகவும் அவசியமான சாலைப் பணிகள், ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள், தெரு விளக்குகள், பாலங்கள் போன்ற பணிகள் இந்நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிசைகளில்லாக் கிராமப்புறங்கள், குடிசைப்பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து ஓலைக்குடிசை வீடுகளையும் கான்கிரீட் மேற்கூரையுடன் கூடிய நிலையான வீடுகளாக மாற்றும் "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்'' 2010-11 முதல் 2015-16 வரையிலான 6 ஆண்டு கால திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கான முதலாம் ஆண்டில் 3 லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பயனாளி ஒருவருக்கு மாநில அரசு 75 ஆயிரம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. 28.2.2011 வரை 75,000 கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 31.3.2011-க்குள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கான்கிரீட் வீடுகளும், 15.4.2011-க்குள் 2 லட்சம் கான்கிரீட் வீடுகளும் கட்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு இதுவரை 1082 கோடி அரசு செலவிட்டு உள்ளது. மேலும், 12 லட்சம் பயனாளிகளுக்குத் தகுதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக, மேலும், 3 லட்சம் குடிசைகள் இத்திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்டு, 2011 பிப்ரவரியில் பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி 2007-ம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டமே மாநில அரசுத் திட்டங்களில் மிகப்பெரிய திட்டமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் குளம், நூலகம், விளையாட்டு மையம், சுடுகாடு - இடுகாடு, குடிநீர்த் திட்டப் பணிகள் ஆகிய கட்டாயப்பணிகளும், தெரு விளக்குகள், மீன் வளர்ப்பு குளங்கள், சிமெண்ட் சாலைகள், கிராமச்சந்தைகள் ஆகிய பணிகள் உள்ளூர் தேவையின் அடிப்படையிலும் எடுக்கப்படுகின்றன.

இத்திட்டத்திற்காக 12 ஆயிரத்து 618 கிராம ஊராட்சிகளுக்கும் மொத்தம் 2,548 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டதுடன் மாநில அரசின் வேளாண் துறை, கல்வித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை போன்ற பிற முக்கிய துறைகளின் பணிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளில் கிராம ஊராட்சி அனைத்திலும் 12 ஆயிரத்து 746 கோடியே 19 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்ச் செலவில் 31 லட்சத்து 20 ஆயிரத்து 320 பணிகள் நிறைவேற்றப்பட்டு கிராம ஊராட்சிகள் வளம் பெற்றுள்ளன என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி முன்னிலையில் முஸ்லீம் லீக்குடன் இணைந்தது தேசிய லீக் கட்சி

இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி முன்னிலையில், நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன், தமிழ் மாநில தேசிய லீக் கட்சி இணைந்தது. கருணாநிதியின் முயற்சியால் இந்த இணைப்பு நடந்து்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் கருணாநிதி முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில், தமிழ் மாநில தேசிய லீக் கட்சி இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த 2 இயக்கங்களின் தலைவர்களையும், முதல்வர் கருணாநிதி தொடர்பு கொண்டு பேசியதின் தொடர்பாக இருவரும் ஒப்புக்கொண்டு, 2 கட்சிகளையும் ஒன்றாக இணைப்பதென்று முடிவெடுத்தனர்.

இணைப்புக்குப் பின்னர் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் கூறுகையில்,

முதல்வர் கருணாநிதியினுடைய பெரும் முயற்சியின் காரணமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், முன்னணியினரும் இணைவதை திறந்த மனதோடு வரவேற்று மகிழ்கிறேன்.

ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் அவர்கள் அனைவரையும் வரவேற்பதோடு, இதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைத்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தி.மு.க. பெருந்தலைவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

6 மாதங்களுக்கு முன்பாகவே முதல்வர் கருணாநிதி, முஸ்லிம் சமுதாயதத்தை சேர்ந்தவர்கள், பல்வேறு இயக்கங்களில் இருப்பவர்கள் எல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் ஒன்றுபட வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார்கள். அந்த வாக்கினை இன்று நடைமுறைப்படுத்துகின்ற வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியோடு தமிழ் மாநில தேசிய லீக் கட்சியை இணைத்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
CM Karunanidhi has elaborated his govt's schemes for Women. In a letter he said that, only DMK govt implemented the 33% quota for women in panchayats. DMK govt is implementing various schemes for women from its first govt, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X