For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விரட்டப்பட்டோரே, துரத்தப்பட்டோரே வருக, வருக-வைகோவுக்கு கருணாநிதி மறைமுக அழைப்ப

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்-

என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

முதல்வர் விடுத்துள்ள இந்த அழைப்பு மதிமுகவினருக்கும், வைகோவுக்கும்தான் என்று அரசியல் அரங்கில் வர்ணிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திரஜித்தனைக் காணவில்லை!

தேர்தல் களம் புகுந்திட பல்வேறு கட்சிகளின் பாசறைகள் ஏறத்தாழ தயார் நிலையில் அமைக்கப்பட்டுவிட்டன. எதிர்வரிசையில் நிற்கக்கூடிய அணி தேர்ப்புரவி ஆட்பெரும் படையை உற்றுப் பார்க்கிறேன்.

எதிர்வரிசையில் இந்திரஜித்தனைக்காண முடியாத காரணத்தை உணர்ந்து கொண்டவுடன்- களத்தில் அந்த யோசனைக்கு இடமளிப்பது நமது குறியை குலைத்துவிடும் என்பதால் அதைப்பற்றி அதிகமாக கவலைப்படாமல், ஒருசில நிமிடங்கள் அதுபற்றிய சிந்தனையிலே ஈடுபட்டேன்.

5000 ஆண்டுக்கு மேலான வரலாறு கொண்ட திராவிட உணர்வு பட்டுப்போகாமல் காப்பாற்றி வந்த பெரியாரெனும் பேருருவில்- பிரிவுக்கணைகள் புகுந்து- இரு இயக்கமானோம். அவற்றில் ஓர் இயக்கம் அண்ணா தலைமையில் இன உணர்வு பகுத்தறிவு இயக்கமாகவும்-பிறிதொரு இயக்கம் பகுத்தறிவு கவலையின்றி; ஆனால் பண்பாடு காத்திடும் இயக்கமாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையிலும் இயங்கிய ஏற்றமிகு நிலைகண்டு- அதன் எழிலை குறைத்திட எத்தனையோ சதிகள், சாகசங்கள்! அத்தனைக்கும் ஈடுகொடுத்து ஒன்றை ஒன்றுவென்றும்-ஒன்றால் ஒன்று வீழ்ந்தும்- அவ்விரு திராவிட இயக்கங்களும் தேசத்தை ஆளும் சக்தியாக செழித்து வளர்ந்தது கண்டு- அவ்விரண்டையும் அழித்தொழிக்க ஐதீகப்படை திரண்டது.

வலை பின்னத் தொடங்கிய சிலந்திகள்

இரு படைகளும் ஒரு படையாய் இருந்து- செறு பகை வீழ்த்திட அணி வகுப்போம் வாரீர் என்று வடக்கிருந்து பறந்து வந்த சமரச புறாவையும்-அதன் சிறகொடித்து விரட்டிவிட்டனர் சதிகாரர்கள். அதன்பிறகும் அமைதியில்லை-சகோதர யுத்தம் தொடரட்டுமென்றும்-அப்போதுதான் சர்க்கரை தம் வாய்க்கு நிறைய கிடைக்குமென்றும் எண்ணியோர் கண்ணியம் துறந்த காரியத்தில் ஈடுபட்டதால்-திண்ணியராம் திராவிட தலைவர்கள் உருவாக்கிய இயக்கம், சிதைந்து சிதறுண்டு போக சிலந்திகள் வலைபின்னத்தொடங்கின.

அந்த வலையில் சிக்காத இயக்கம்தான் அண்ணா உருவாக்கிய தி.மு.க. எனும் இந்த தீரர்கள் மிகு இயக்கம். அதனால்தான் வலை அறுந்திடவும் இல்லை-விலை போகவும் இல்லை-நிலை குலையாத நேர்மை, நியாயம், நீதி, உண்மை, உறுதி, வாய்மை அனைத்தும் கொண்டு வலிமை சேர் இயக்கமாக அறப்போர் வாள் தூக்கி அணி வகுப்பில் முந்தி நிற்கிறது.

நம் வரிசையினர் என்று போற்றுவோம்

எந்தவொரு இயக்கமும் ஜனநாயக வழித்தடத்தில் தேர்தலை சந்திக்க களம் இறங்கிவிட்டால்- ஜனநாயகத்தை கட்டிக்காக்க வேண்டிய பொதுமக்கள் மாத்திரமல்லாமல், அந்த பொதுமக்களிடத்திலே- தமது கட்சிக்காக ஆதரவு திரட்டக்கூடிய தொண்டர்கள், தோழர்கள் அணி வகுத்துக் குவிந்திடுவது இயல்பேயாகும். அவர்கள் எந்த வரிசையினராயினும் நம் வரிசையினர் என்றே போற்றிப்புகழ்வோம்.

எதிரெதிர் அணியிலே அவர்கள் நிற்க நேரிட்டாலும் அவர்களும், நாமும் சேர்ந்து ஜனநாயக கோவில் திருப்பணியை நடத்தவே- நடத்தி முடிக்கவே- அதில் எழிலும் ஏற்றமும் கண்டு களிக்கவே- நாம் சேர்ந்துள்ளோம் இந்த இயக்கத்தில் என்ற நினைப்போடு பணியாற்றினால் மாண்பு காத்திட- மனித நேயம் போற்றிட-நாம் பிறந்த மண்ணின் புகழ் பெருக்கிட-நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டவர்களாவோம்.

நம் வியர்வையால் கிடைக்கும் வெற்றியைப்போற்றிடவும்- நமது அயர்வினால் அதனை விடுத்து அதற்காக ஜனநாயக மாண்பினையே தாக்கிடவுமான நிலைக்கு நம்மை நாமே தள்ளிக் கொள்ளாமல் இருக்கத்தான்- காற்றடிக்கும் நேரத்திலேயே பதர் போக்கி-பயன் விளைக்கும் தானிய மணிகளை குவித்து வைத்ததுபோல் நமது படையின் வீரர்களை அணிவகுத்து வைத்திருக்கிறோம்.

சோடை போகாத படை:

சோர்வறியாத படை - சோடை போகாத படை - சொர்க்கம் அழைக்கிறது வா என்றாலும், அதில் சொக்கிப்போய் சொன்னது ஒன்று செய்வது ஒன்றாக - போரிடுவது போன் போலிப்படையல்ல இப்படை; "இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?'' என நம் அண்ணா அடிக்கடி சொல்வாரே பெரியாரை விட்டுப்பிரியாமல் இருந்திருந்தால்-இடையில் இப்படை பெறும் வெற்றிதான் இமாலய வெற்றியாகும்- இமாலயத்தை வளைக்கும் வெற்றியாகும்.

சிதறிப் போன தம்பிமார்:

எனினும் "என் தலைவர் இருந்த நாற்காலி காலியாகவே இருக்கிறது'' என மொழிந்து- பெரியாரின் தொண்டனாக- அவரின் சீடனாக-அவரின் கொள்கை நாதமாக விளங்கிய அண்ணா-நமையெல்லாம் ஒருங்கிணைத்து-பொருதடக்கை வாள் கொடுத்து-"ஜனநாயக அறப்போரில் வென்றிடுக தம்பிகாள்!'' என்று அனுப்பி வைத்தார். அவர்களில் ஓரிரு தம்பிமார்கள் எங்கெங்கோ சிதறிப்போயினர் என்றாலும்- அங்கெல்லாம் அலைந்து திரிந்து அவர்களையும் ஒன்றிணைக்க- அரும்பாடுபட்டவனின் கரம்தான் இந்தக் கரம்.

சேர்ந்து சுவைப்போம் வா:

இந்தக்கரம் தழுவும் உணர்விலே கட்டுண்டு-வாரீர் அனைவரும் ஒருங்கிணைந்து களம் காண்போம் என்றழைக்கும் வேளை இது! திராவிடர்கள் நெல்லிக்காய் மூட்டை என எதிரிகள் துள்ளிக்குதிக்கும் நிலைதனை மாய்ப்போம். விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- படை பலம் போதாது என்பதால் அல்ல! இருக்கின்ற படை இன்னும் வலிமையாய்-உறுதியாய்- நிச்சயம் வாகை சூடுவதாய் அமைய வேண்டும் என்பதற்காக! என்னரும் உடன்பிறப்புக்காள்! என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக என்று முதல்வர் எழுதியுள்ளார்.

அதிமுக அணியிலிருந்து துரத்தப்பட்டு பெரும் அவமானத்திற்குள்ளாகியுள்ள மதிமுகவினரையும், வைகோவையும் திமுக அணிக்கு ஆதரவாக திரும்புமாறு மறைமுகமாக குறிப்பிட்டுத்தான் முதல்வர் இவ்வாறு கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

English summary
CM Karunanidhi has indirectly called Vaiko and his party cadres to join DMK front. In a statement he has invited the 'abandoned soldiers' from the 'enemy camp'. And also he has blasted the 'enemies' for degrading the Tami valour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X