For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் தொகை அடிப்படையில் 100% இடஒதுக்கீடு-பாமக தேர்தல் அறிக்கை

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 100% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாமக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தலையொட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மாதம்தோறும் நிதி உதவி வழங்கப்படும். குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்புவோர், பிறந்தது முதல் 6 வயது வரை இலவச தடுப்பூசி போடுவோர், சொட்டு மருந்துகள் அளிப்போர், மருத்துவப் பரிசோதனைகள் செய்வோர், கர்ப்பிணிகள் எனில் உரிய தடுப்பூசிகள், மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்பவர்கள் ஆகியோருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் வெளியிடப்படும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த பாமக துணை நிற்கும். மக்கள் தொகை அடிப்படையில் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க பாமக குரல் கொடுக்கும்.

நீதித் துறையில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற உச்சவரம்பையும், கிரீமி லேயரையும் நீக்குதல், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தை மாநிலங்களே முடிவு செய்து கொள்ள தேவையான சட்ட திருத்தம் செய்வது ஆகியவற்றுக்காக பாமக பாடுபடும்.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதியை சமூகநீதி நாளாக அறிவிக்க குரல் கொடுப்போம்.

இட ஒதுக்கீடு வழங்குவதில் மதம் ஓர் அடிப்படையாகக் கருதப்படக் கூடாது என்கிற வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும். வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

அனைத்து வளர்ந்த நாடுகளிலும் உள்ளதுபோல பள்ளிக் கல்வியானது முழுக்க முழுக்க அரசினால் நடத்தப்படும் நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். பொதுப் பள்ளி முறை, அருகாமை பள்ளி முறை கொண்டு வரப்படும்.

6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்பது 3 முதல் 14 வயது வரை என்று மாற்றியமைக்கப்படும்.

பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தொடக்கக் கல்விக் துறையை பிரித்து தனித் துறை உருவாக்கப்படும். பள்ளிகளில் தமிழ் இசை ஒரு பாடமாக சேர்க்கப்படும். நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும்.

தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்படுத்தப்படும். தொழிற்கல்வி நிறுவனங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். தாலுகாவுக்கு ஓர் அரசுக் கல்லூரியும், ஒன்றிய அளவில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும், மாவட்டம்தோறும் தமிழிசைக் கல்லூரியும் தொடங்கப்படும்.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் பாமக பாடுபடும்.

ஒரே தடுப்பூசி மூலம் பல நோய்களைத் தடுக்கும் கூட்டுத் தடுப்பூசி முறை கொண்டு வரப்படும். தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது 15 சதவீத இலவச சிகிச்சை அளிக்க உறுதி செய்யப்படும். புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.100 கோடியில் தனி சுழல் நிதி உருவாக்கப்படும்.

பூரண மதுவிலக்கை செயல்படுத்துவது பாமகவின் தலையாய நோக்கமாக இருக்கும். குட்கா, பான் மசாலா, மெல்லும் வகை புகையிலை பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும்.

சென்னை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்படும்.

6 எம்.எல்.ஏ. தொகுதிக்கு ஒரு மாவட்டம் உருவாக்கப்படும்.

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் பனை மரங்கள் நடப்படும். உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே பனை மரத்தை வெட்ட முடியும் என்கிற சட்டம் கொண்டு வரப்படும். தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும்.

100 நாள் வேலை திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும்.
மீனவர்களின் உயிர், படகு, கட்டுமரங்களை ஒட்டுமொத்தமாக காப்பீடு செய்ய திட்டங்கள் வகுக்கப்படும். மீன் பிடிக்கத் தடை இருக்கும் காலங்களில் மாதம் ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வருமானம் என்ற அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்.

சென்னை மாநகரில் ஓடும் பஸ்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும். குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ளது போல பேருந்து விரைவுப் போக்குவரத்து முறை கொண்டு வரப்படும்.

அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற வேண்டுமானால் 33 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை 20 ஆண்டுகளாக குறைக்க வழிவகை செய்யப்படும்.

சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் தமிழை கொண்டுவர வழிவகை செய்யப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப் படும்.

இலங்கையில் தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும். கடைசி கட்ட போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்யவும், கச்சத் தீவை மீட்கவும் பாமக பாடுபடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
PMK has assured Rs 1500 for poor every month in its elections manifesto. It also supports DMK's grand plan of establishing satellitte Chennai city
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X