For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவை காப்பி அடித்த அதிமுக தேர்தல் அறிக்கை-சொல்வதை செய்வாரா ஜெ?

By Siva
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்களை விரிவாக்கி, இடையிடையே சில புது விஷயங்களை சேர்த்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது அதிமுக. பார்க்க கவர்ச்சிகரமாக இருந்தாலும் ஜெயலலிதா சொல்வதை செய்வாரா என்ற அவ நம்பிக்கையும் கூடவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நேற்றுவரை திமுக இலவசங்கள் கொடுப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது என்று அறைகூவல் விடுத்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆனால் இன்று திமுகவையே மிஞ்சும்படி போதும், போதும் என்ற அளவுக்கு இலவசங்களை அறிவித்துள்ளார். இன்னும் சொல்லப் போனால், அதிமுகவினரே இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லை என்று கேட்கும்படி உள்ளது ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை.

திமுகவின் இலவசத் திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டு காலமாக கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக இப்போது திமுக பாணியில் ஏகப்பட்ட இலவசங்களை வாரியிறைத்திருப்பது ஜெயலலிதா மீதான நம்பிக்கையை சீர்குலைப்பதாக உள்ளது.

மேலும், திமுகவின் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர் ஜெயலலிதா. இப்போது இவரே 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்கப் போவதாக கூறுகிறார். இது நிச்சயம் பொன்னி அரிசியாகவோ அல்லது சீரக சம்பா அரிசியாகவோ இருக்க வாய்ப்பே இல்லை. எனவே இதை மட்டும் எப்படி ஜெயலலிதா நியாயப்படுத்துவார் என்பது தெரியவில்லை.

மிக்சி அல்லது கிரைண்டர் தருவதாக திமுக கூறுகிறது. ஆனால் இந்த இரண்டையும் சேர்த்துத் தருவதோடு கூடவே மின்விசிறியும் தருவோம் என்கிறது அதிமுக. இது நிச்சயம் திமுகவுக்கு ஏட்டிக்குப் போட்டி அறிவிப்பாகவே பார்க்கப்படும்.

இப்படி, திமுகவின் 'கதாநாயகி'யை தூக்கி விழுங்கும் அளவிற்கு உள்ளது அதிமுக அறிக்கை என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் கடந்த கால ஜெயலலிதாவின் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் பார்க்கும்போது, நினைக்கும்போது இந்த தேர்தல் அறிக்கை பல கேள்விகளை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

இலவசங்கள் தருவோம் என்று அறிவிப்பது கூட தேர்தல் விதிமீறல் தான். அதனால் திமுக மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் முன்பு அதிமுக பேசியது. ஆனால் இன்றோ திமுகவை விட அதிக அளவிலான இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது அதிமுக.

இந்த அறிக்கையை படிக்கும் ஏழைகள் அம்மா ஆட்சிக்கு வந்தால் நம் வாழ்கைத் தரம் உயரும் என்று எண்ணத்தூண்டும். ஆனால் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவைகளை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றுமா அல்லது காற்றில் விடுமா என்பதுதான் இங்கு கேள்விக்குறியாகும்.

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவர் கருணாநிதி என்ற பெயரை திமுக ஏற்கனவே வாங்கி விட்டது. அதேசமயம், சொன்னதைக் கூட நிறைவேற்றத் தவறியவர் என்ற பெயரை ஜெயலலிதா வாங்கி விட்டார்.

அதற்கு ஒரே ஒரு உதாரணம் - அதிமுக கூட்டணி. அந்தக் கூட்டணியை அமைக்க அவர் செய்த காரியங்கள், ஆனால் எல்லாம் கூடி வந்த பின்னர் பானையைப் போட்டு நடு ரோட்டில் உடைப்பது போல அவர் நடந்து கொண்ட விதம், மதிமுகவை எந்த அளவுக்கு டார்ச்சர் செய்து வெளியேற்றினார் என்பதையெல்லாம் பார்க்கும்போது எந்த அளவுக்கு நம்ப முடியாதவராக, கணிக்க முடியாதவராக ஜெயலலிதா இருக்கிறார் என்பதை உணரலாம்.

நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு அதிமுகவில் பல கட்சிகள் இணைந்தன. ஏன் தேமுதிகவே ஓடி வந்தது. ஜெயலலிதாவுக்கு ஆதரவு அலை தெரிகிறது. கூட சேர்ந்தால் லாபம் பெறலாம் என்ற ஒரே எதிர்பார்ப்புதான் இதன் பின்னணிய்ல இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் போக்கால் மூன்றாவது அணி அமைக்கும் அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன ஜெயலலிதாவின் போக்கால்.

ஜெயலலிதாவின் இந்த அந்தர்பல்டியை பற்றி சுப்பிரமணியம் சாமி கூறும்போது, ஜெயலலிதா இன்னும் சசிகலாவின் குடும்பத்தார் பிடியில் தான் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது என்றார்.

கருணாநிதி முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் என்று குறைகூறும் ஜெயலலிதாவின் பேச்சு தான் அவ்வாறு உள்ளது. சினிமாத் துறையில் சூப்பர்ஹிட் நாயகி இருந்தால் நிச்சயம் அவருக்கு போட்டியாக குறைந்தது ஓரிருவராவது இருப்பார்கள். அது போன்று தான் திமுக நாயகிக்கு போட்டியாக வந்துள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை.

திமுக கூறி விட்டதே என்பதற்காக அவசரம் அவசரமாக பல இலவசங்களை தனது அறிக்கையில் சேர்த்துள்ளார் ஜெயலலிதா என்பது அறிக்கையைப் பார்த்தாலே தெரிகிறது. அதிமுகவின் முத்திரையை இதில் காண முடியவில்லை, திமுகவின் சாயலே தெரிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

நிறைய சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. இருப்பினும் இதையெல்லாம் செய்வாரா, இவர் சொல்வதை நம்பலாமா என்பதுதான் தெரியவில்லை.

English summary
ADMK chief Jayalalitha has released the election manifesto which has more freebies than DMK. The question is whether she will fulfil all her promises if she comes to power. In fact, ADMK's election manifesto has some schemes which are already there in the DMK's election manifesto. Does that mean that she accept DMK is right?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X