For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா அமைச்சரவையில் எளிமையான அமைச்சர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா அமைச்சரவையா இது என்று அத்தனை பேரும் ஆச்சரியப் பார்வை பார்க்கும் வகையில் படு அட்டகாசமான அமைச்சரவையை அமைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் கம்யூனிஸ்ட் சாயலை இந்த அமைச்சரவையில் காண முடியும்.

வழக்கமாக பெரும் பெரும் கோடீஸ்வரர்கள்தான் ஜெயலலிதா அமைச்சரவையில் நிரம்பியிருப்பார்கள். ஆனால் இந்த முறை குப்பன், சுப்பன், ஏழை, பாழைகளும் நிறைந்து உள்ளனர்.

குறிப்பாக சமூக நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள செல்வி ராமஜெயத்தின் குடும்பச் சூழ்நிலை பார்க்க படு எளிமையானதாக உள்ளது. ஏன், அவர் குடியிருக்கும் வீடே ஒரு சாதாரண ஓட்டு வீடுதான்.

பரங்கிப்பேட்டையில் உள்ளது அமைச்சர் செல்வியின் பரம்பரை வீடு. மிகச் சாதாரணமான ஓட்டு வீடு அது.

செல்வி ராமஜெயத்தின் கணவர் ராமஜெயம். இவர் அதிமுகவின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளராக இருந்தவர். கடந்த 1985ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அரசியலுக்கு வந்தார் செல்வி. பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் தலைவராக இருமுறை செயல்பட்டவர்.

ஊர் முழுக்க இவருக்கு நல்ல பெயர். இவரைப் பற்றி ஒருவர் கூட அதிருப்தியாக எதுவுமே சொல்வதில்லை. அப்படி ஒரு நல்ல பெயர் இவருக்கு. அமைதியானவர், எளிமையானவர். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிப்பவர் என்றுதான் இவரைப் பற்றிச் சொல்கிறார்கள்.

கணவர் ராமஜெயத்திற்கு நல்ல வசதியுடன் கூடிய வீடு உள்ள போதிலும், அங்கு வசிக்காமல் தனது தாய் வழி பூர்வீக வீடான இந்த ஓட்டு வீட்டில்தான் வசித்து வருகிறார் செல்வி.

கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வேட்பாளர் தேவதாஸ் படையாண்டவரை இவர் தோற்கடித்தார். மீண்டும் தற்போது அதே தொகுதியில் பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வனை 13,117 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

யார் எந்த விழாவுக்குக் கூப்பிட்டாலும் ஆள் பார்க்காமல், வசதி பார்க்காமல், பாகுபாடு பார்க்காமல் போய் வருபவர் செல்வி ராமஜெயம்.

கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல பெயருடன் இருக்கும் செல்வி ராமஜெயம், இந்தப் பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதோடு, நல்ல அமைச்சர் என்ற பெயரையும் எடுக்க வேண்டும் என்று தொகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தாம்பரம் சின்னையா

இதேபோல இன்னொரு எளிமையான அமைச்சராக வலம் வருகிறார் தாம்பரம் தொகுதியிலிருந்து தேர்வாகி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான டி.கே.எம்.சின்னையா.

தாம்பரத்தில்தான் இவர் பிறந்து வளர்ந்தார். இருப்பினும் இவரைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு அமைதியானவராக, ஆர்ப்பாட்டம் இல்லாதவராக இருக்கிறார் சின்னையா.

தாம்பரத்தில், படப்பை சாலையில் உள்ள இவரது வீடும் மகா எளிமையாக காட்சி தருகிறது. மிக மிக சாதாரணா வீடாக காட்சி அளிக்கும் சின்னையா இந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். தற்போதுதான் அரசு சார்பில் கொடுக்கப்படும் புதிய வீட்டுக்கு மாறுகிறார். அதாவது தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஒரு பெரிய வீட்டுக்கு இப்போதுதான் அவர் குடி போகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பதவி கிடைத்ததால் ஏற்பட்ட பதட்டத்திலிருந்து இன்னும் சின்னையா விலகவில்லை என்கிறார்கள் அவரது தரப்பினர்.

வழக்கமாக கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் படு எளிமையாக, படு சாதாரணமாக இருப்பார்கள். ஆட்டோவில்தான் போவார்கள், வருவார்கள், பஸ்களில் சாதாரண ஜனங்களோடு சகஜமாக பயணிப்பதும் இவர்கள் மட்டுமே. ஆனால் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அதே பாணியிலான அமைச்சர்களும் இடம் பெற்றிருப்பது மிகவும் வித்தியாசமானதாக மட்டுமல்லாமல், வியப்பாகவும் உள்ளது.

English summary
One can see the shadow of Communists in CM Jayalalitha's ministry. There are more new comers in the ministry. Among them Selvi Ramajeyam and Tambaram Chinnaiah are following a very simple life. They live in very simple houses. They are simple and have earned good name in their respective constituencies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X