For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் நடுரோட்டில் துடிக்க துடிக்க வாலிபர் கொலை: வேடிக்கை பார்த்த மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

Man beaten to death in Coimbatore
கோவை: கோவையில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை வைத்து கொலையாளிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த கொடுமையான சம்பவத்தில் குற்றத்தைத் தடுக்க முன்வராமல் பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர் என்பதுதான் மிகவும் வேதனையானது.

கோவை சாய்பாபா காலனி பெரியார் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் ( 29). பெயிண்டிங் தொழிலாளி. அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் கடையில் மது குடிக்கையில் அவருக்கும் ரத்தினபுரியைச் சேர்ந்த கிருஷ்ணன், முருகன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பாரில் இருந்து கிளம்பிய சந்தோஷ்குமார் மேட்டுப்பாளையம் ஏ.ஆர்.சி. சிக்னல் அருகே செல்கையில் அவரை கிருஷ்ணன், முருகன் உள்பட 4 பேர் வழிமறித்து சரமாரியாக அடித்தனர்.

கீழே கிடந்த கல்லை எடுத்து சந்தோஷ்குமாரின் தலையில் போட்டு கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்து விழுந்தார் சந்தோஷ்குமார். குடிபோதையில் அந்த நான்கு பேரும் வெறித்தனமாக பொதுமக்கள் முன்னிலையில் பட்டப் பகலில் நடந்து கொண்ட இந்த வெறிச்செயலைத் தடுக்க முன்வரவில்லை யாரும்.

மாறாக, ஏதோ சர்க்கஸைப் பார்ப்பது போல சாலையில் போனவர்களும், நின்றிருந்தவர்களும் அப்படியே அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்து விட்டார்.

இதற்கிடையே சிக்னலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவில் இந்த கொடூரச் சம்பவம் பதிவாகியிருந்தது. அதை வைத்துக் கொண்டு போலீசார் கிருஷ்ணன், ராமச்சந்திரன், முருகன், கணேசன் ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்கள் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சந்தோஷ்குமார் இறந்ததைத் தொடர்ந்து கொலை வழக்காக அது மாற்றப்பட்டது.

இந்தக் கொடூரச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ்குமாரின் மனைவி சரோஜா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பிணத்தை வாங்க மறுத்து மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து அவர்களை கலைந்துபோகச் செய்தனர். உடனே அவர்கள் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சரோஜாவுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சந்தோஷ்குமார் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

English summary
A man was beaten to death in the broad daylight near a signal in Coimbatore. This horrible incident was caught in the CCTV camera fixed in the signal. Based on this video, police had identified the culprits and arrested them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X