For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலைகள் 86, கொள்ளைகள் 110, வழிப்பறி 13: ஜெ. இதையும் கொண்டாடலாம்..கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளைக் கொண்டாடினார்கள். இந்த 100 நாட்களில் நடந்த கொலைகள் 86, கொள்ளைகள் 110, சங்கிலி பறிப்பு 38, வழிப்பறிக் கொள்ளைகள் 13. இவற்றையும் 100 நாள் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கட்சியினர் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் வட சென்னை மாவட்ட திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் தங்கசாலை மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.

இதில் பேசிய கருணாநிதி, தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் இங்கு கண்டன கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த தலைப்பில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். ஜனநாயகமே இல்லாத சட்டசபையில், ஜனநாயகம் படும்பாடு என்று எப்படி கூற முடியும்?.

ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் இனி தமிழ்நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை. கொலை, கொள்ளை, திருட்டுகள், தாலி சங்கிலி பறிப்புகள் இதற்கெல்லாம் இடமில்லை.
இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டார்கள் என்று கூறினார்.

ஆனால், இப்போது அதிமுக ஆட்சி பொறுப்பேற்று 100வது நாளைக் கொண்டாடினார்கள். இந்த 100 நாட்களில் நடந்த கொலைகள் 86, கொள்ளைகள் 110, சங்கிலி பறிப்பு 38, வழிப்பறிக் கொள்ளைகள் 13. இவற்றையும் 100 நாள் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கட்சியினர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நான் இன்று சட்டமன்றத்துக்கு சென்றேன். அங்கு என் கையெழுத்து பதிவாகாவிட்டால் எம்.எல்.ஏ. பதவி பறிபோய்விடும். நான் தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன் என்று எனக்கு வாக்களித்த திருவாரூர் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக எம்.எல்.ஏ. என்ற முறையில் கடமையாற்ற பழைய சட்டமன்றத்துக்கு சென்றேன்.

புதிய சட்டசபைக்கு அல்ல. அதுதான் பூட்டப்பட்டு கிடக்கிறதே. காரணம் அதை நாம் கட்டியதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்ததற்காக, திறப்பு விழாவில் நம்முடைய சோனியா காந்தி முன்னிலை ஏற்றதற்காக. அந்த கட்டிடம் எதற்கும் உதவாது என்கிறார் ஜெயலிலதா.

ஆனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை அங்கு அமைக்கப்படும் என்று அம்மையார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், தமிழுக்கு மரியாதை கொடுக்க மாட்டோம் என்று கூறுகிற ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் சில கட்சிக்காரர்களும் இருக்கிற காரணத்தால், சட்டப்பூர்வமாக நாங்கள் நிறைவேற்றியுள்ளவற்றை எல்லாம் மாற்றி அமைக்கிறார். உலகில் 6 மொழிகள் தான் செம்மொழியாக்கப்பட்டன. தமிழ் செம்மொழி ஆவதற்கு முதல் குரல் கொடுத்தவர் பிராமணர் குலத்தில் உதித்த சூரிய நாராயண சாஸ்திரி.

அவர் எழுப்பிய குரலை எழுப்பித்தான் 100 ஆண்டாக தமிழ்மொழி செம்மொழியாக வேண்டும் என்று நாங்கள் மட்டுமல்ல. பொதுவுடமை கட்சியினர், கம்யூனிஸ்டு கட்சியினர் என இன்னும் எத்தனையோபேர் குரல் கொடுத்தனர். இந்த நிலையில் சோனியா காந்தி அம்மையாரை பலமுறை சந்தித்து, தமிழுக்கு செந்தமிழ் தகுதி தந்தாக வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இதைத்தொடர்ந்து, அவர் உத்தரவுப்படி, மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கும், புலவர்கள், அறிஞர்கள், மொழி வல்லுனர்கள் ஆகியோருடன் கலந்து பேசி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இது குறித்து, சோனியா காந்தி எனக்கு கடிதம் எழுதினார். உங்களால்தான் தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தை நான் பத்திரமாக வைத்துள்ளேன்.

நான் மறைந்த பிறகு அதை எனது கருவூலத்தில் வைக்கும்படி கூறியிருக்கிறேன். ஆனால், செம்மொழி என்ற வார்த்தையை ஏற்க இந்த ஆட்சி மறுக்கிறது. சமச்சீர் புத்தகத்தில் எங்கெல்லாம் செம்மொழி என்ற வார்த்தை இருக்கிறதோ அவை, பேனா கொண்டும், மை கொண்டும் அழிக்கப்படுகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது அதை கருணாநிதி பெற்று தந்தார் என்று எழுதப்பட்ட வாசகத்தை அழித்து இருக்கிறார்கள்.

புத்தகத்தில் உள்ள வாசகத்தை வேண்டும் என்றால் அவர்கள் அழித்து விடலாம். ஆனால், தமிழர்களின் இதயத்தில் எழுதப்பட்ட வாசகத்தை எந்தக்கொம்பன் வந்தாலும் அழிக்க முடியாது.

மறைமலை அடிகளாரும், 500 தமிழ் புலவர்களும் பச்சையப்பன் கல்லூரியில் கூடி தமிழர்களுக்கு தனி ஆண்டு இல்லையே என்று ஆராய்ந்து, விவசாயிகளின் அறுவடை காலம், நெல்மணிகள் குவியும் காலம் இவைகளையெல்லாம் பார்த்து, பொங்கல் நாள் என்ற அறிவித்து, தை முதல் தேதி தமிழர் புத்தாண்டு பிறக்கிறது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதம் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று முடிவு செய்யப்பட்டது.

அதை திமுக ஆட்சியில் சட்டமாக இயற்றி 2, 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா அதை மாற்றி, சித்திரை முதல் தேதிதான் மீண்டும் தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில், அதிமுக ஆட்சியில், ஜனநாயகத்துக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்தையும், தமிழையும், தமிழ் உணர்வுள்ள அனைவரும் காப்பாற்ற வேண்டும். தமிழ் வாழ உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நமது இளைஞர் பட்டாளம் உள்ள வரையில், தமிழை யாரும் அழிக்க முடியாது என்றார் கருணாநிதி.

English summary
Flaying the AIADMK government for reversing the previous DMK regime's decision to advance the Tamil New Year to January, DMK president M Karunanidhi today said the present situation not only posed a "danger" to democracy but also to the Tamil language. The reversal of the DMK government's decision was an attempt by "certain people around (Tamil Nadu Chief Minister) Jayalalithaa who feared that the Tamil New Year starting with 'Thai' (in January) would erase Aryan culture (from the Tamils) Karunanidhi alleged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X