For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவிலில் நடை திறப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சபரிமலை: கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு மண்டல பூஜை விழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளன்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை-மார்கழி மாதங்களில் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டின் மண்டல காலம், கார்த்திகை 1ம் தேதியான இன்று தொடங்குகிறது.

இதனை ஒட்டி கோவில் நடை புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி எழிக்கோடு சசி நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து மேல்சாந்தி எழிக்கோடு சசிநம்பூதிரி 18ம் படி இறங்கி வந்து ஆழியில் தீபம் ஏற்றினார். அதைத் தொடர்ந்து, பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டனர். நடை திறக்கப்பட்டதையொட்டி, நேற்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதிய மேல்சாந்திகள்

இதன் பின்னர் புதிய மேல்சாந்திகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மூத்த தந்திரி செங்கன்னூர் தாழமண்மடம் கண்டரரு மகேஸ்வரரு புதிய மேல்சாந்திகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்துவைத்தார்.

தொடர்ந்து, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கான புதிய மேல்சாந்தி என்.பாலமுரளி நம்பூதிரியை அய்யப்பன் கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்று, சாமியின் மூல மந்திரத்தை அவரது காதில் சொல்லிக் கொடுத்தார்.

இதைப்போல மாளிகைப்புரத்து அம்மன் கோவிலுக்கான மேல்சாந்தி டி.கே.ஈஸ்வரன் நம்பூதிரியை மாளிகைப்புரத்து அம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்று அம்மனின் மூலமந்திரத்தை சொல்லிக் கொடுத்தார்.

இவர்கள் இருவரும் வியாழக்கிழமை முதல் அய்யப்பன் கோவிலிலும், மாளிகைப்புரத்து அம்மன் கோவிலிலும் நடையை திறந்து பூஜைகள் செய்கின்றனர்.

இந்த ஆண்டு, கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் மற்றும் நெய் அபிஷேகம் செய்யும் வகையில், கோவில் நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனமும் தொடர்ந்து கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜை- வழிபாடுகள் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. 1 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

பின்னர், பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜை- வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து, அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 11.45 மணிக்கு நடை அடைக்கப்படும். டிசம்பர் 27-ந் தேதி பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றுடன் மண்டல பூஜை திருவிழா காலம் நிறைவடைகிறது.

மகரவிளக்கு பூஜை

பின்னர், மகரவிளக்கு பூஜை திருவிழாவுக்காக டிசம்பர் 30-ந் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு 2012 ஜனவரி 15-ந் தேதி புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 20-ந் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள்- வழிபாடுகள் நடைபெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரி்மலையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

சபரிமலை யாத்திரை சீசன் இன்று தொடங்கும் நிலையில் ஐயப்பன் கோவிலில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தேவஸ்தான கமிஷனர் வாசு கூறியதாவது,

சபரி்மலை மீது வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து தான் நிறைய பக்தர்கள் வருகின்றனர். ஒரு அளவுக்கு மேல் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க முடியாது என்பதால் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்தித் தர முடியவில்லை. கடந்த ஆண்டு மகர ஜோதியின் போது புல்மேட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 102 பக்தர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். அது போன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில பாதைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளன. பக்தர்கள் வழக்கமான பாதையான மரக்கூட்டம்-சரம்குத்தி வழியாக மலைக்கு வரவேண்டும். ஆனால் திரும்பும் போது சஸ்திரநந்தன் சாலை வழியாக செல்ல வேண்டும். பக்தர்களின் வசதிக்காக மாளிகைபுரம் வளாகத்தில் பிரசாத கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. துறை சார்ந்த வாகனங்கள் தவிர பிற வாகனங்கள் 4 மைல் தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்படும்.

தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் வண்டிபெரியார் வழியாக சபரிமலை வருகின்றனர். இது அடர்ந்த வனப்பகுதி என்பதால் புலி, சிங்கம் போன்ற ஆபத்தை மிருகங்கள் அதிக அளவில் நடமாடும். எனவே, இந்த பாதையை தவிர்க்குமாறு பக்தர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்றார்.

English summary
Lord Ayyapa temple in Sabarimala will open its doors for the two-month long pilgrimage season on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X