இடைத் தேர்தலில் வெல்ல முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை கையில் எடுத்த கேரள கட்சிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mullaperiyar Dam
திருவனந்தபுரம்: கடந்த ஒரு மாதம் வரை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைதி காத்து வந்த கேரள காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க் கட்சிகளும் திடீரென அந்த விவகாரத்தைக் கிளப்பியுள்ளதற்கு அந்த மாநிலத்தில் நடக்கவுள்ள இடைத் தேர்தலே காரணம் என்று தெரியவந்துள்ளது.

டேம்999 படம் மூலமாக திடீரென இந்தப் பிரச்சனைக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தந்தது கேரளா. இடைத் தேர்தலை மனதில் வைத்து படத்தையும் அதை ஒட்டி ரிலீஸ் செய்து தங்களது 'கேரள விவரத்தை' காட்டி வருகின்றனர் அந்த மாநில அரசியல்வாதிகள்.

இத்தனை நாளாய் சும்மா இருந்த சங்கை காங்கிரஸ் கட்சியும் அந்த மாநில மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஊதிப் பெரிதாக்குவதற்குக் காரணமே, எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கவுள்ள இடைத் தேர்தல் தான் என்று தெரிகிறது. இந்தத் தொகுதி முல்லைப் பெரியாறு அணைக்கு அருகாமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீர் பிரவம் தொகுதி வழியே ஓடும் மூவாற்றுப் புழை ஆற்றின் வழியாகத் தான் செல்கிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பிரவம் தொகுதி உள்பட எர்ணாகுளம் மாவட்டமே மூழ்கிவிடும் என்ற டுபாக்கூர் பிரச்சாரத்தை அந்த மாநில கட்சிகள் கிளப்பி விட்டுள்ளன.

மேலும் நடக்கப் போவது வெறும் இடைத் தேர்தல் மட்டுமல்ல. இந்தத் தொகுதியில் வெல்லப் போவது யார் என்பதை வைத்து தான், கேரளத்தில் காங்கிரஸ் அரசு நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதே உறுதியாகப் போகிறது.

பலவீனமாக உள்ள முல்லைப் பெரியாறு அணை உடைந்து இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் மாவட்டங்களே நீரில் மூழ்கிவிடும் என்று கேரளா அரசு கூறுகிறது. ஆனால், இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான அரசு மூழ்கிவிடும் என்பது மட்டும் தான் உண்மை.

2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 72 இடங்களையும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளின் முற்போக்குக் கூட்டணி 68 இடங்களையும் கைப்பற்றின.

இதில், கேரள காங்கிரஸ் கட்சியின் (ஜேக்கப் பிரிவின்) தலைவர் டி.எம். ஜேக்கப், எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் சட்டப் பேரவைத் தொகுதியில் வென்றார். 5வது முறையாக இதே தொகுதியில் வென்ற இவர் காங்கிரஸ் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சரானார். ஆனால், கடந்த அக்டோபர் மாதம் அவர் மரணமடைந்தார்.

இதையடுத்து பிரவம் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.

140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டசபையில் ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 72 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. டி.எம். ஜேக்கப் மறைவுக்குப் பிறகு 71 ஆகக் குறைந்துவிட்டது.

இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவினால் சட்டசபையில் இடதுசாரி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட சமமாகிவிடும்.

மேலும் கடந்த தேர்தலில்தான் டி.எம். ஜேக்கப் வெறும் 157 வாக்கு வித்தியாசத்தில்தான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளரை தோற்கடித்தார். இதனால் இந்தத் தொகுதியில் இந்தமுறை காங்கிரஸ் வெல்வது சந்தேகமே.

இதனால் தான் கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்த அணை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்.

அணையை வைத்து காங்கிரஸ் ஓட்டு வாங்குவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?. அதனால், தான் சமீபத்தில் எர்ணாகுளத்துக்கு வந்த முன்னாள் முதல்வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன், புதிய அணையைக் கட்டுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனில்ட் கட்சி விரைவிலேயே பொது மக்களிடம் நிதி திரட்டும் பணியைத் தொடங்கும். இங்கே அணையைக் கட்டுவதற்காக மத்திய அரசிடமோ, தமிழக அரசிடமோ நாம் ஏன் உதவி கேட்க வேண்டும்?. அணையைக் கட்ட மத்திய அரசோ அல்லது உச்ச நீதிமன்றமோ அனுமதி மட்டும் தந்தால் போதும், நிதியை நாங்களே மக்களிடம் திரட்டிக் கொள்வோம் என்று பேசிவிட்டுச் சென்றார்.

1979ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் முல்லைப் பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறத் தொடங்கியது கேரள அரசு. அதை நம்பிய தமிழக அரசும் நீரின் அளவை 136 அடிக்குக் குறைத்தது. அதையடுத்து, அணையின் நீரின் அளவை 142 அடியாக உயர்த்த 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கேரளா இன்று வரை நிறைவேற்றவில்லை.

இந்த அழகில் தான், நாங்கள் புதிய அணையைக் கட்டினாலும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவோம் என்று உறுதியளிக்கிறார் உம்மன் சாண்டி. இவரது உறுதிமொழியை எப்படி நம்புவது?

இதற்கிடையே இந்த அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தனது முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.

அதில், அணை பலமாகவே உள்ளது என்று கூறப்பட்டிருந்தால், இடைத் தேர்தல் நேரத்தில் அது தங்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் கேரள காங்கிரஸ் அரசு கருதுகிறது. இதனால் இப்போதே இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The congress and left parties of Kerala, in the campaign to reclaim the Piravom by-poll has stirred up local sentiments against Tamil Nadu and created fear among the lakhs of people living in three districts by stating that the Mullai periyar dam is on the verge of being broken.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற