For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாடாய் படுத்திய பன்னீர்செல்வம்!

By Shankar
Google Oneindia Tamil News

Panneer Selvam
சசிகலா நீக்கத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே தமிழக அரசு வட்டாரத்தில் பரபரப்பாக அடிபட்ட பெயர் ஏ எஸ் பன்னீர்செல்வம்.

சசிகலா இப்போது போயஸ் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டதற்கே இவர்தான் முக்கிய காரணம் எனும் அளவுக்கு சர்ச்சைக்குரிய ஐஏஎஸ் அதிகாரி.

யார் இந்த பன்னீர் செல்வம்?

ஒரு சாதாரண மக்கள்தொடர்பு அலுவலராக பணியாற்றி, தமிழக அரசின் பரிந்துரையில் ஐஏஎஸ் அதிகாரியாக பணி உயர்வு பெற்றவர் இந்த பன்னீர் செல்வம். ஆரம்ப காலத்திலிருந்தே சசிகலா மற்றும் அவர் கணவர் ம.நடராஜனின் தீவிரமான விசுவாசி இவர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது தென் மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின்னர், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டார். அதுவும் சாதாரண அதிகாரியாக அல்ல, கிட்டத்தட்ட தலைமைச் செயலருக்கு நிகரான அதிகாரம் பெற்றவராக. காரணம்... சாட்சாத் சசிகலா.

பன்னீர் செல்வத்துக்கு தரப்பட்ட பொறுப்பு 'முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறையின் சிறப்பு அதிகாரி'. சாதாரண பதவிதான்... ஆனால் சர்வ அதிகாரமிக்க ஒரு பதவியாக இதனை மாற்றிய பெருமை சசிகலாவைச் சேரும்.

கிட்டத்தட்ட தலைமைச் செயலருக்கு நிகரான செல்வாக்குடன் வலம் வந்த இவரது அறைக்கு வராத துறைச் செயலர்களே இல்லை. சில நேரங்களில் தலைமைச் செயலரே வந்து கலந்தாலோசனை செய்தார் என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள் (சசிகலா விவகாரம் வெட்டவெளிச்சமான பிறகு வெளியாகும் பல தகவல்களில் ஒன்று). கிட்டத்தட்ட அமைச்சரவைக் கூட்டம் மாதிரி ஜேஜே என ஐஏஎஸ் அதிகாரிகளால் நிரம்பி வழியும் இவரது அறை.

எந்த முடிவையும் எடுக்கும் முன் துறைச் செயலர்கள் இவரது இறுதி வார்த்தையைக் கேட்காமல் போனதில்லையாம்.

பன்னீர் செல்வத்தைச் சுற்றி ஒரு அதிகார மையம் உருவாகியிருப்பதை இரு மாதங்களுக்கு முன் ஜெயலலிதா முழுமையாக அறிந்திருந்தாலும், சசிகலாவின் நிழலில் அவர் நின்றதால் கொஞ்சம் யோசித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.

பன்னீர் செல்வம்- நடராஜன் - சசிகலாவின் 'முக்கூட்டு'தான் ஆட்சியை வேறு பாதைக்கு இட்டுச் செல்வதை ஜெயலலிதாவுக்கு உணர வைத்தது. இந்த மூவரையுமே அருகில் வைத்திருப்பது மக்களை ஆட்சிக்கு எதிராக உடனடியாக திரும்பவைக்கும் என்ற எச்சரிக்கையை தக்க நேரத்தில் தந்தவர் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி நேரங்களிலெல்லாம் கைகொடுக்கும் அந்த 'மூத்த பத்திரிகையாளர்'தான்!

அரசுத் துறையில் பன்னீர் செல்வத்துக்கிருந்த அதே செல்வாக்கு கிட்டத்தட்ட இந்த பத்திரிகையாளருக்கும் உண்டு. என்ன...இவர் தலைமைச் செயலகம் போய் நேரடியாக எதிலும் தலையிடமாட்டார்... உத்தரவு போட மாட்டேரே தவிர, அரசில் என்ன நடக்கிறது என்பதன் ஜெராக்ஸ் அப்போதைக்கப்போதே இவருக்கும் கிடைத்துவிடும். எனவே பன்னீர் செல்வத்தின் ஆதிக்கம், சசிகலா நடராஜன் தொடர்புகள், இதனால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், வசூலிக்கப்பட்ட தொகைகள் குறித்து தனக்கு வந்த தகவல்களை இவரே உரிய நேரத்தில் ஜெயலலிதாவிடம் ஆதாரப்பூர்வமாகச் சொன்னதாக கூறுகிறார்கள் (சசி நீக்கப்பட்டார் என்றதும் இவரையும் வாழ்த்தி கோஷமெழுப்பினர் அதிமுகவினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!).

இதற்கெல்லாம் சிகரம் வைத்தமாதிரி அமைந்த நிகழ்வு, அதிமுக எம்எல்ஏக்களை தனிப்பட்ட முறையில் பன்னீர் செல்வம் அணுகியது. ஜெயலலிதாவுக்கு பதில் நடராஜனை முதல்வராக்கும் லாபியை அவர்கள் மத்தியில் வெகு லாவகமாகப் பரப்பி, அவர்களை சசிகலாவின் முழு விசுவாசிகளாக்கும் அசைன்மெண்டை ஆரம்பித்த தருவாயில்தான் ஜெயலலிதா முழுமையாக எச்சரிக்கையடைந்தார்.

இதன் விளைவு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏ எஸ் பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார் ஜெயலலிதா. அதற்கும் முன்பே, சசிகலாவுக்கு மிக நெருக்கமாக இருந்த உளவுத்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் போன்றவர்களையும் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டார் ஜெயலலிதா. சசி ஆதரவு அதிகாரிகள் மாற்றம் இனி வரும் நாட்களில் இன்னும் வேகமாகத் தொடரும் என்கிறார்கள்.

அடுத்து அமைச்சரவையில் சசிகலாவின் விசுவாசிகளை ஓரங்கட்டும் காட்சியும் அரங்கேறப் போகிறது. 'பார்த்துக் கொண்டே இருங்கள்... விரைவில் ஐந்தாவது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் என்ற செய்தி வரப்போகிறது...' என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்!

நடப்பவை நல்ல மாற்றங்களாக இருந்தால் சந்தோஷமாகப் பார்க்கலாம்!!

English summary
Panneer Selvam is a conferred IAS officer who was holding the office of special officer in implementing CMs election promises wing. According to the sources, this Sasikala loyal IAS officer is the main reason for the troubles faced by the govt and the CM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X