For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுதாவூர் நிலத்தை மீட்டுத் தர ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Google Oneindia Tamil News

மதுரை: சிறுதாவூர் கிராமத்தில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் முதல்வர் ஜெயலிலதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டம், சிறுதாவூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு 1967ம் ஆண்டு நிலமற்ற 20 ஏழை குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலமும், 10 சென்ட் மனைப்பட்டாவையும் வழங்கியது.

ஆனால் காலப் போக்கில் இந்த நிலம் செல்வாக்கு மிக்கவர்களால் அபகரிக்கப்பட்டது. இது குறித்து 2006ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய முதல்வரிடம் நேரில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகார் மனுவினை ஏற்று நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை 2010ம் ஆண்டு மார்ச் மாதம் அரசிடம் அளித்தது. அறிக்கையை பெற்ற திமுக அரசு, விசாரணைக் கமிஷனின் பரிந்துரைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக காலம் கடத்தியது. முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து வற்புறுத்திய பிறகும் கூட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

சிவசுப்பிரமணியன் கமிஷன் தனது அறிக்கையில், சிறுதாவூரில் அமைந்துள்ள சொகுசு பங்களாவுக்கு அருகில் 1967ம் ஆண்டு தலித் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலம் அரசியல் செல்வாக்குள்ளவர்களால் பறிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிலத்தை மீட்டு, அந்த கிராமத்தில் உள்ள நிலமற்றவர்களுக்கு வழங்கிடலாம் என அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.

இதே பங்களாவின் காம்பவுண்டுக்குள் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 32 ஏக்கர் உள்ளதாகவும் அந்த நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்றும் அதிகாரிகள் விசாரணை கமிஷன் முன்பு உறுதி அளித்தனர்.

பங்களா வளாகத்திற்குள் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதை ஏற்றுக் கொண்டதுடன், நில ஆக்கிரமிப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆட்சேபனை இல்லை என
அவர்களுடைய வழக்கறிஞர் சித்ரா கமிஷன் முன்பு தெரிவித்ததை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

எனவே, மேற்கண்ட இரண்டு வகையான நிலங்களையும் மீட்டு சிறுதாவூர் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் நிலமற்ற ஏழைகள் அனைவருக்கும் வழங்குவதுடன், ஏற்கனவே நிலத்தை இழந்த 20 பயனாளிகளுக்கும் சேர்த்து நிலத்தை வழங்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu famers association has requested the ADMK government to recover the Siruthavur land and hand it over to the poor and landless people there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X