For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திராவிட இயக்கத்துக்கு முன் நிலவிய பிராமணர்கள் ஆதிக்கம்: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: 1912ல் திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பிராமணர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர் பிராமணர்கள். 1496 பொறியாளர்களில் 1096 பேர் பிராமணர்கள். 3 சதவீதம் இருந்த பிராமணர்கள் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள். இந்த அநியாயத்துக்கு விடிவு காலம் ஏற்படுத்தவே திராவிட இயக்கம் தோன்றியது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடந்தது. விழாவில் கருணாநிதி பேசுகையில்,

நூறாண்டு முடிகின்ற தருவாயில் நம்முடைய இயக்கம் இன்றைக்கு திராவிட இயக்கம் என்ற பெயரால் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. திராவிடன் என்றால் யார்? தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கட்டுரைகள் எழுதினாலும், அல்லது நம்முடைய கழகக் கூட்டங்களில் பேசினாலும் பேச்சின் இறுதியில் "நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள்'' என்று சொல்லி வந்ததை நினைவு கூர்ந்தால், தமிழை அகற்றி விட்டு திராவிடத்திற்குள் நாம் நுழைந்து விட்டோம் என்று பொருள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நாம் திராவிடர்கள் என்று திராவிட இயக்கம் என்பதற்கு ஆண்டு விழா நடத்துகிறோம் என்று சொல்கிற காரணத்தால், தமிழனை மறந்துவிடவில்லை. தமிழ் மொழியை மறந்து விடவில்லை. நம்முடைய இனத்தை இங்கே மறக்காமல் இருக்கிறோம் என்பதற்காகத்தான் இதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அது மாத்திரமல்ல; 8.3.1942ல் அண்ணா "திராவிட நாடு'' இதழைத் தொடங்கியபோது ஐந்து நாட்கள் ஒரு தொடர் தலையங்கம் எழுதினார். அந்தத் தலையங்கத்தில், "தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறிதுமில்லாமல் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. அன்றியும் "திராவிடமே தமிழ் என்று மாறிற்று என்றும், தமிழே திராவிடம் என்று மாறிற்று'' என்றும் சரித்திர ஆசிரியர்கள் முடிவு கண்டதாகக் குறிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏராளமாக இருக்கின்றன.

பழங்காலத்து அகராதிகளும் அப்படியே சொல்லுகின்றன. உதாரணமாக, 1926ல் டி.ஏ.சாமிநாதய்யர் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஜெம் டிக்ஷனரியில் "திராவிட'' என்பதற்கு "தமிழ்நாடு'' என்று ஆராய்ச்சி நூல்களும், தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம்- திராவிடர்கள் என்றுதான் கருதப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை'' என்று அப்போதே விளக்கம் அளித்துள்ளார்.

நான், கடந்த சில நாட்களாக இங்கு பேசுவதற்கான ஆதாரங்களை திரட்ட முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு போன்ற நூல்களைப் படித்தேன். இந்த நூல்களை இளைஞர்கள் படித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை திராவிட இயக்கம், நீதிக்கட்சி வரலாற்றை தமிழக இளைஞர்கள் அறிந்து கட்டிக்காக்க வேண்டும். அண்ணா 1962ல் மாநிலங்களவையில் நான் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றார்.

திராவிடர் என்ற சொல் நாங்கள் கண்டுபிடித்த சொல் அல்ல. நாங்கள் தவறான பாதையில் மக்களை இழுத்துக்கொண்டு செல்வது போல சில ஏடுகளில் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. திராவிட இயக்கத்தை தலையெடுக்க விடாமல் செய்து விடலாம் என்ற நம்பிக்கை இன்னும் அவர்களிடம் இருக்கிறது. நாங்கள் அவர்களை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இது சாதாரண இயக்கமல்ல, நூறாண்டுகள் கடந்த இயக்கம் என்று சொன்னார்களே, இன்னும் சொல்லப் போனால் 1885ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கியது என்றால், அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே 1847ம் ஆண்டிலேயே திராவிட தீபிகை'' என்ற தமிழ் இதழ் தமிழகத்திலே நடத்தப்பட்டிருக்கிறது. ஆக, "திராவிட'' என்கின்ற சொல், நானோ, பேராசிரியரோ, மேடைகளிலே இருக்கின்றவர்களிலே யாரோ ஒருவர் கண்டுபிடித்த சொல் அல்ல.

தேசிய கீதம் யார் எழுதிய பாட்டு? இது நான் எழுதிய பாட்டா? இல்லை ரவிந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதம். அந்தப் பாடலிலே இருக்கிறது, "திராவிட'' என்கின்ற சொல். நாங்கள் யாரும் புதிதாகக் கண்டுபிடித்தது அல்ல. பழைய வார்த்தை. பழைய இனம் பற்றிய வரலாற்று வரி.

இன்னும் சொல்லப் போனால் கடற்கரைச் சாலையிலே நடந்து போகிறபோது, அங்கே மாநிலக் கல்லூரி வாசலில் ஒரு கல் இருக்கிறது. அந்தக் கல் ஒரு சிலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. உ.வே.சாமிநாத அய்யருடைய சிலை. அந்தக் கல்லிலே என்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? சாமிநாத அய்யரைப் பற்றி எழுதியிருக்கிறது. யார் அவர்? "திராவிட வித்யாபூஷண உ.வே.சாமிநாத அய்யர்.'' நல்ல காலம்; நாளைக்கு அந்தக் கல்லை யாரும் அகற்றாமல் இருக்க வேண்டும்.

ஏனென்றால் திராவிடம், தமிழ், செம்மொழி என்றால், அதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். இந்த விழா, ஆட்சி மாற்றத்துக்காகவோ அல்லது நாம் பதவிக்கு மீண்டும் வரவேண்டும் என்பதற்காகவோ, இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்காகவோ நடத்த வில்லை. இன உணர்வு புதைக்கப்பட்டால் மீண்டும் எழ எவ்வளவு காலம் ஆகும் என்ற கவலையில், அதை தூக்கி நிறுத்த இந்த விழா நடத்தப்படுகிறது.

தமிழர்களைத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறோம் என்றும் திராவிட இனம் தலையெடுக்கக்கூடாது என்றும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சிலர் வருகின்றனர். அவர்களைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

1921ம் ஆண்ட நடந்த பொது தேர்தல் முடிவு பற்றி இந்திய அரசு எழுதும்போது தாழ்த்தப்பட்ட, கீழ் ஜாதி மக்கள் மத்தியில் மகத்தான மாற்றம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் பழிவாங்க தொடங்கி விட்டார்கள். அதன் அடையாளம்தான் இந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளது. இவ்வளவு காலம் நாம்பட்ட அநீதி, இழிவுக்கு பழிவாங்க திராவிட இயக்கம் காத்திருக்கிறது. பழி வாங்கினால் தான் முன்னேற முடியும்.

அல்லது பொட்டுப்பூச்சி, புன்மைதேரை, புழுக்களாக இருக்க நேரிடும். நாம் புலிகளாக, பந்தைய குதிரைகளாக மாறி எதிரிகளை வீழ்த்த வேண்டும். இந்த நிகழ்ச்சி உங்களை வீறுகொண்டு எழச்செய்ய, நம் வரலாறுகளை புரட்டிப்பார்க்க நடைபெறுகிறது. இந்த முழக்கம் நாடு முழுவதும் கேட்க வேண்டும். அந்த அளவுக்கு நாம் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

1912ல் திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது. அதற்கு முன் 5700 பட்டதாரிகளில் 4,074 பேர் பிராமணர்கள். 3,650 வழக்கறிஞர்களில் 2686 பேர் பிராமணர்கள். 1496 பொறியாளர்களில் 1096 பேர் பிராமணர்கள். 3 சதவீதம் இருந்த பிராமணர்கள் பட்டதாரிகள் 70 சதவீதம், சட்டம் படித்தவர்களில் 74 சதவீதம். பொறியாளர்களில் 71 சதவீதம். ஆசிரியர்களில் 74 சதவீதம் இருந்தார்கள்.

இந்த அநியாயத்துக்கு விடிவு காலம் ஏற்படுத்தவே திராவிட இயக்கம் தோன்றியது. நாம் நடத்திய போராட்டத்தால் அடிபட்டு, உதைபட்டு, சிறை சென்று சமூக நீதிகண்டு பாடுபட்ட காரணத்தால், இன்று ஓரளவு நிமிர்ந்து நிற்க முடிகிறது. இதையும் பறிக்க இன்று எல்லா பக்கத்தில் இருந்து பயமுறுத்தல், அச்சுறுத்தல் தினம் தினம் வருகிறது. அது பற்றி கவலைப்படாமல் பெரியார், அண்ணா வழியில் நாம் இயக்கம் நடத்தி வருகிறோம். தொடர்ந்த இந்த இயக்கத்தை நடத்த இளைஞர்கள் முன்வரவேண்டும். அதற்காக தொண்டாற்ற வேண்டும்.

இது எழுந்த இனம்- திராவிட இனம். இன்றைய தினம் அந்த வரலாற்றுப் புகழை மறந்து விட்டு, புதைக்கப்படுமேயானால் மீண்டும் எழுவதற்கு எத்தனை ஆண்டுக் காலம் ஆகும் என்ற அந்தக் கவலையினால்தான் இப்பொழுதே தூக்கி நிறுத்த இந்த நூறாம் ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கும் நாம் பட்ட பாட்டால், நாம் நடத்திய போராட்டங்களால், நாம் உருவாக்கிய கிளர்ச்சிகளால், நாம் அடிபட்டு, உதைபட்டு சிறைச்சாலைகளுக்குச் சென்று பெரியாரும், அண்ணாவும், சமூக நீதிக் காவலர்களும் தங்களை இந்த இயக்கத்திலே மாத்திரமல்ல, இந்த இனத்திற்காக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களினுடைய உயர்வுக்காக பாடுபட்டு பணியாற்றியதன் காரணமாகத்தான் இன்றைய தினம் ஓரளவு நாம் நிமிர்ந்திருக்க முடிகிறது.

அப்படி விழித்தெழுந்த இனம் இப்போது அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக பழி வாங்க காத்திருக்கிறது. திராவிட இனத்தை புழுக்களாக கருதுபவர்களை புலிகளாக மாறி நாம் விரட்டமாட்டோமா தமிழர்கள் இப்போது ஓரளவு நிமிர்ந்து நிற்கின்றனர்.

இதையும் அழிப்பதற்கு, இன்றைய தினம் எல்லா பக்கமிருந்தும் நமக்கு பயமுறுத்தல்கள், நமக்கு அச்சுறுத்தல்கள் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாம், நம்முடைய வழியில் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

தொடர்ந்து இந்த இயக்கத்தை நடத்துவதற்கு இளைஞர்கள் முன்வரவேண்டும், அதற்கு இன்றுள்ள கட்சியினுடைய காவலர்கள் உடனடியாக தொண்டாற்ற தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

தொடங்கி விட்டோம் தோழர்களே! தொடர் போராட்டம் தொடங்கிவிட்டோம். ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே'' என்று பரணி பாடிய கருணாநிதி; 13 வயதிலே இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக- ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த இந்தி ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக- தமிழ்க் கொடி பிடித்து தெருக்களிலே ஊர்வலம் நடத்தியவன் கருணாநிதி. இன்றைக்கும் அந்த கருணாநிதியினுடைய பரம்பரை கருணாநிதியினுடைய வழித்தோன்றல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்கள் இருக்கின்ற காரணத்தால்தான் ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் நிச்சயமாக உங்களுக்காக உழைக்க, தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க, அப்போது கேட்ட திராவிட நாடு திராவிடர்க்கே என்ற குரல் மீண்டும் ஒலிக்காமல் இருக்க நாம் நிச்சயமாக வெற்றியை ஈட்டுவோம் என்றார் கருணாநிதி.

English summary
The Dravidian movement will continue to flourish in spite of "threats and intimidation" from many sides, DMK president M Karunanidhi said. In his address at a function to mark the centenary of the Dravidian movement, he said, "Today, we are facing so much threat and intimidation from many sides. Undeterred by all these, we would continue walking the steps of (rationalist leader EVR) Periar and (DMK founder) C N Annadurai." Even if one Karunanidhi goes, another will come (to take the movement forward) and the legacy would continue," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X