For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகை, பணத்தைப் பறித்த கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டிப் பிடித்த பெண்!

Google Oneindia Tamil News

Rajalakshmi
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வீடு புகுந்து நகை, பணத்தைப் பறித்துச் சென்ற இரு கொள்ளையர்களை அந்த வீட்டைச் சேர்ந்த பெண் மண்வெட்டியால் தலையில் அடித்து துணிகரமாக அவர்களில் ஒருவரைப் பிடித்தார். இன்னொருவன் தப்பி ஓடி விட்டான். இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் ஐவரை போலீஸார் என்கவுண்டர் மூலம் கொன்றது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் சிதம்பரம் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்ற கொள்ளையர்களை ஒரு பெண் மண்வெட்டியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்புச் சம்பவம் குறித்த முழு விவரம் இதோ...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அருகே உள்ளது பூ.உடையூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி ராஜலட்சுமி. 37 வயதான இவருக்கு ஜெயசித்ரா (19), சிவரஞ்சனி (16) ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

தாமோதரன் தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக சென்னை போயுள்ளார். வீட்டில் ராஜலட்சுமியும், 2 மகள்களும் தனியாக இருந்தனர். அவர்களுக்கு துணையாக தாமோதரனின் அண்ணன் மகன் மோகன் (22) வீட்டுக்கு வந்து படுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 கொள்ளையர்கள் வீட்டின் மாடி வழியாக கிரில் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். வீட்டுக்குள் வந்த அவர்கள் மளிகைக் கடைக்குள் முதலில் சென்று அங்கிருந்த ரூ. 10,000 பணத்தை எடுத்துக் கொண்டனர். பின்னர் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு ஹாலில் ராஜலட்சுமி தனது மகள்களுடன் படுத்திருந்தார்.

நைசாக அவர்கள் அருகே வந்த கொள்ளையர்கள், முதலில் ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர். இதனால் விழித்தெழுந்த ராஜலட்சுமி திருடர்கள் நிற்பதைப் பார்த்து அலறினார். இதையடுத்து அவரது 2 மகள்களும் விழித்தெழுந்தனர். அதேபோல சத்தம் கேட்டு மோகனும் ஓடி வந்தார்.

அவர்கள் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களோ, அனைவரையும் அடிக்கத் தொடங்கினர். இதனால் கோபம் கொண்ட ராஜலட்சுமி வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து ஒங்கி ஒரு போடு போட்டார். இதில் ஒரு கொள்ளையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் குபுகுபுவென கொட்டியது. இதனால் அவன் கீழே விழுந்து விட்டான். இதைப் பார்த்த மற்றவன் பயந்து போய் தப்பி ஓடி விட்டான்.

இதையடுத்து கீழே விழுந்தவனை நான்கு பேரும் சேர்ந்து மடக்கிப் பிடித்து தப்ப விடாமல் செய்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அனைவரும் சேர்ந்து அந்த நபரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் சிதம்பரம் போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து திருடனைப் பிடித்தனர். அவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கடலூர் அரசு மருத்துவனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

ராஜலட்சுமியின் துணிகச் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர். நடந்தது குறித்து ராஜலட்சுமி கூறுகையில், தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ கழுத்தில் கை வைப்பது போல தெரிந்து திடுக்கிட்டு விழித்தேன். அப்போதுதான் 2 பேர் நிற்பதைப் பார்த்தேன். அவர்கள் எனது கழுத்தில் கிடந்த நகையைப் பறித்து விட்டனர். உடனே நான் சத்தம் போட்டு அருகில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த மோகனை அழைத்தேன்.

அவன் ஓடி வந்தான். அதேபோல எனது மகள்களும் திருடர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் திருடர்கள், உருட்டுக் கட்டையால் என்னைத் தாக்கினர். மோகன் மற்றும் எனது மகள்களையும் தாக்கினர்.

அப்போது ஒருவன் என்னை கத்தியால் குத்த வந்தான். மேலும் தலைமுடியைப் பிடித்து இழுத்து எனது காதில் இருந்த தோட்டையும் பறிக்க முயன்றான். அதை எனது மகள்கள் தடுக்க முயன்றபோது அந்தத் திருடர்கள் இருவரும் எனது மகள்களை அடித்தனர். இதனால் எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. இதையடுத்து கீழே கிடந்த மண்வெட்டியை எடுத்துத் தாக்கினேன் என்றார்.

இந்த களேபரத்தில் ராஜலட்சுமி, அவரது மகள்கள், மோகன் ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கொள்ளையர்களை ராஜலட்சுமி குடும்பத்தினர் துணிகரமாக எதிர்கொண்டு தாக்கி ஒருவனைப் பிடித்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A Woman from Chidambaram hacked a robber with sickle after he snatched her chain and cash from her house. The robber was admitted in Cuddalore GH for treatment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X