புதுச்சேரியில் 6 மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரி: 6 மாத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ளாட்சிகளின் பதவிக்காலம் 7-7-2011 அன்று முடிவடைந்தது. ஆனால் இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் (6 மாதம்) தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் புதுச்சேரி அரசோ மாநில தேர்தல் ஆணையரை நியமிக்காமலும், தேர்தலை நடத்தாமலும் காலம் கடத்தி வந்தது.
உயர் நீதிமன்ற விதித்த காலக்கெடு முடிய ஒரு வாரம் இருக்கையில்(பிப்ரவரி மாதம்) கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி புதுச்சேரி அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மார்ச் 8ம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.
இவ்வழக்கில் ஆஜரான புதுச்சேரி அரசு வழக்கறிஞர், ஆளுநர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் தேர்தல் ஆணையரை நியமிக்க முடியவில்லை என்று கூறினார். உடனே மார்ச் 15ம் தேதி விசாரணைக்கு வரும்போது தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது உதித்ட் ரே மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் அதற்கான அத்தாட்சியை தலைமை நீதிபதி இக்பால் முன்னிலையில் தாக்கல் செய்து விட்டு தேர்தல் நடத்த கால அவகாசம் கேட்டார். இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவி்ககப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் புதுச்சேரியில் 6 மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்திவிட்டு அதற்கான முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications