For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பெட்ரோல்': மத்திய ஆட்சியில் இருந்து விலகுவோம் என்று சொல்லவில்லை: கருணாநிதி பல்டி!

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை குறைக்காவிட்டால் மத்திய அரசிலிருந்து வெளியேறுவோம் என்று கூறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இன்று திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கருணாநிதி பேசுகையில், பெட்ரோல் கட்டணம் கிட்டத்தட்ட 7.50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அந்தக் கொடுமையான உயர்வினை கண்டித்து எதிர்க்கட்சிகள் மாத்திரமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திரமல்ல, நாம் மாத்திரமல்ல, மத்திய சர்க்காரிலே அமைச்சராக இருக்கின்ற, பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்ற ஏ.கே. அந்தோணியே அதைக் கண்டித்து இருக்கிறார்.

இந்த விலை உயர்வை ஏற்றுக் கொள்ள இயலாது என்ற கருத்தை அறிவித்திருக்கிறார். ஆகவே நான் சொல்வதை கேட்காவிட்டாலும், எதிர்க்கட்சிகள் சொல்வதைக் கேட்காவிட்டாலும் நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங், அவருடைய அமைச்சரவையிலே இருக்கின்ற பாதுகாப்பு அமைச்சர்- மிகப் பாதுகாப்பாக சொல்லியிருக்கின்ற இந்த கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் அரசின் காதுகளில், ஏழையெளிய மக்களின் கூக்குரலும், நடுத்தர மக்களுடைய கூக்குரலும் விழுமேயானால், அந்தக் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை மத்திய அரசும், மாநில அரசும் உணர்ந்து நடந்து கொள்ளுமேயானால், இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று பொருள்.

இப்போது ஒரு போட்டி- மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும்- இவர்களும் விலைகளை உயர்த்தியிருக்கிறார்கள்- அவர்களும் உயர்த்தியிருக்கிறார்கள். இதிலே மக்களுடைய நல்ல எண்ணத்தைப் பெறப் போகிறவர்கள் யார்? மத்திய அரசா? மாநில அரசா? யார் இந்தக் குரலுக்குச் செவி சாய்க்கிறார்களோ அவர்கள் மக்களுடைய குரலை மதித்தார்கள் என்று பொருள்.

அந்தக் காரியத்தைச் செய்ய மாநில அரசு, மத்திய அரசு இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு முன் வர வேண்டுமென்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் மத்திய அரசோடு கூட்டணியிலே இருந்தாலுங்கூட கூட்டணி வேறு, அதே நேரத்தில் மக்களுக்கு விரோதமான காரியங்கள் நடைபெறும்போது அதைத் தடுக்கின்ற நிலையில் செயல்படுவது வேறு.

நாங்கள், திராவிட முன்னேற்றக் கழகம், பா.ஜ.கவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு- வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு- எந்த இடத்தில் இருந்தாலும் நம்முடைய பிரதான, அடிப்படை கொள்கைகளுக்கு மாசு வருமேயானால் அதைச் சுட்டிக்காட்டி, அதைத் தீர்க்கக் கூடிய, தீர்த்து வைக்கக் கூடிய பெரும் பொறுப்பை மத்தியிலே உள்ளவர்களுக்கு அளித்து, அந்தப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றாவிட்டால், எதிர்ப்புக் குரலை உயர்த்தி, அவர்களோடு இருக்கிற வரையிலே இருந்து, முடியாவிட்டால் நாம் தனியாகப் பிரிந்து, நம்முடைய கொள்கைகளைத் தான் நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

அதற்கு இடம் தராத வகையில் மத்திய அரசும், மாநில அரசும் நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இதில் மாநில அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதெல்லாம் நான் மாநில ஆட்சியின் முதலமைச்சராக இருந்தபோது, பெட்ரோல் விலையினால் மக்கள் கஷ்டப்படக் கூடாது, நடுத்தர மக்கள் சிரமப்படக் கூடாது, தொழில்களுக்கு தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக பெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்திய போது, பெட்ரோலுக்கான வரியைக் குறைத்து அந்த வரிக் குறைப்பினால் ஏழையெளிய மக்கள் பயன் பெறுகின்ற அளவிற்கு செய்து கொடுத்த பெருமையும், உரிமையும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு உண்டு என்றார் கருணாநிதி.

அப்படியா சொன்னேன்?:

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று என்னுடைய பேச்சில் எங்கேயாவது இருக்கிறதா? என்னிடம் ஆடியோ பதிவு செய்யப்பட்டது இருக்கிறது.

கடந்த காலத்தில் பா.ஜ.கவோடு கூட்டணியிலே இருந்து கொண்டு, வி.பி. சிங் பிரதமராக இருந்த போதும் அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டு, எந்த இடத்தில் இருந்தாலும் என்று சொல்லி எங்களுடைய கொள்ளைகளில் ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந்தது என்று கடந்த காலத்தைத் தான் சொல்லியிருக்கிறேன். இப்போது வெளியேறுவோம் என்று சொல்லவில்லை.

பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என்று கூற முடியாது. திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால், மத்தியில் வரவிருக்கின்ற ஆட்சி பிற்போக்கான ஆட்சியாக மாறி விடலாம். மதவாத சார்புடைய ஆட்சி வரலாம் என்றார் கருணாநிதி.

திமுகவுக்கு 18 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்சியில் நீடிக்க 277 எம்பிக்கள் தேவை என்ற நிலையில், திமுக ஆதரவை வாபஸ் பெற்றால் மத்திய அரசு தப்பிட்ட 13 மற்ற கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும்.

அதே போல மம்தாவின் திரிணமூல் காங்கிரசிடம் 19 எம்பிக்கள் உள்ளனர். அவரும் மத்திய அரசை அவ்வப்போது மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதமருடன் டிஆர்.பாலு சந்திப்பு:

முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு, பெட்ரோல் விலை உயர்வை மறுபரிசீலை செய்ய வேண்டும் என்று கருணாநிதி சார்பில் கோரிக்கை விடுத்தார்.

பெட்ரோல் விலை உயர்வு எல்லா தரப்பு மக்களையும் குறிப்பாக விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் கருணாநிதி ஏமாற்றமடைந்ததாகவும், இதனால் திமுக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் பிரதமரிடம் டிஆர்.பாலு எடுத்துரைத்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்றும் நுகர்வோர் மீதான பளுவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததாக டிஆர்.பாலு நிருபர்களிடம் தெரிவித்தார்.

திமுகவை பேசி சமாளிப்போம்-காங்கிரஸ்:

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரேணுகா செளத்ரி கூறுகையில், கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்கு நாங்கள் எப்போதும் மதிப்பளித்து வந்துள்ளோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் கிடையாது. கருணாநிதி மீது நாங்கள் பெரிதும் மரியாதை வைத்துள்ளோம் என்றார்.

English summary
Stepping up pressure for rollback of petrol price hike, UPA ally DMK chief M Karunanidhi today threaten to pull out of centre
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X