For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா 40 தொகுதிகளிலும் போய் பேசினாரே? என்ன ஆச்சு?... விஜயகாந்த்

Google Oneindia Tamil News

Vvijayakanth
திருச்சி: பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தார்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் திருச்சியில் உள்ள ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், பெட்ரோல் விலையை உயர்வை உடனடியாக குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது, பெட்ரோல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி லிட்டரின் விலையை ரூ.80 ஆக ஆக்கிவிட்டனர்.

பெட்ரோல் விலையை எவ்வளவு தான் உயர்த்தினாலும் மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக பெட்ரோல் கிடைக்கவில்லை என்ற தட்டுப்பாடு நாடகம் ஆடுகிறார்கள். ரூ.100 ஆனாலும் பெட்ரோல் கொடுங்கள் என்று மக்கள் கேட்க கூடிய நிலைக்கு ஆளாக்குகின்றனர்.

இதனை தவிர்க்க இந்தியா முழுவதும் பெட்ரோலுக்கு ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழகத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆகவோ அல்லது ரூ.60 ஆகவோ நிர்ணயம் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெட்ரோல் விலை உயர்வை அமல்படுத்தலாம்.

மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்திவிட்டு போராட்டங்கள் நடப்பதால், குறைப்பது போல் ரூ.1.60 குறைக்கின்றனர். பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.

மாநில அரசையும் சேர்த்து கண்டித்துத்தான் இந்த ஆர்ப்பாட்டம். முதலில் தமிழ்நாட்டை ஒழுங்காக ஆளுங்கள்; பிறகு இந்தியாவை ஆளலாம். மக்கள் வரிப்பணத்தில் இந்தியா முழுவதும் தமிழக அரசு விளம்பரம் செய்கிறது. இது யாருடைய பணம்? உங்க அப்பன் வீட்டு காசா? கட்சி பணமா? இல்லை. மக்களின் வரிப்பணம்.

சட்டசபையில் யாரோ அமைச்சர் மூனுசாமியோ முனுசாமியோ பேசினாராம், ’உங்க தலைவர் ஊரே சுத்தி வந்து பேசினாரு. எங்கம்மா ஒரு நாள் வந்து பேசுனதுக்கே சங்கரன்கோவிலில் ஜெயிச்சுட்டோம்’ என்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் உங்க அம்மா ஒரு தொகுதி விடாம அனைத்திலும் பேசினாரே? என்ன ஆச்சு? 40 தொகுதியிலும் தோத்தீங்க!.

தமிழகத்தில் மின்கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது என்று கேட்டால் நாங்கள் உயர்த்தவில்லை. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியுள்ளது என்கிறார்கள். மக்கள், ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஓட்டு போட்டார்களா, அதிமுகவுக்கு ஓட்டு போட்டார்களா?.

பெட்ரோல் விலையைப் பற்றி கேட்டால் எண்ணெய் நிறுவனங்களைக் காட்டுகிறார்கள். நாம் ஒழுங்குமுறை ஆணையத்துக்கோ, எண்ணெய் நிறுவனங்களுக்கோ வாக்களிக்கவில்லை.

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போலத்தான் இருக்கிறது மக்களின் நிலை. மாநில அரசு ஏன் பெட்ரோல் மீதான வரியைக் குறைக்கக் கூடாது?.

பெட்ரோல் விலை உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்களும் ஏறிவிட்டன. அடுத்து டீசல், சமையல் எரிவாயு விலையும் ஏறப்போகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதுதான் தேர்தல்.

நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்க இந்தியா முழுவதும் புதிய கட்சிகள் வர வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் கூறியதால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தேன். ஆனால் அந்த கூட்டணியினால் எந்த பயனும் ஏற்படவில்லை.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 32 அமைச்சர்கள் களத்தில் இறங்கினார்கள். இப்போது புதுக்கோட்டையில் அமைச்சர்கள் உள்பட 52 பேர் அடங்கிய குழுவினர் தேர்தல் வேலை செய்து வருகிறது. அவர்களுக்கு பயம் அதிகரித்திருக்கிறது. எனக்கு எந்த பயமும் இல்லை.

மாநில அரசை எதிர்த்து பேசினால் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி என்கின்றனர். திமுக ஆட்சியில் இருந்தபோது அவர்களை விமர்சித்தேன். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது அவர்களை விமர்சிக்கிறேன். நல்லது செய்தால் வணக்கம் செய்வேன்.

விஜயகாந்த் சட்டப் பேரவைக்கு வரவில்லை என்கிறார்கள். வந்தால் விலைவாசியைக் குறைப்பார்களா? பெட்ரோல் விலை குறையுமா?

சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் பேச முடியவில்லை. எந்த கேள்விக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொல்வதில்லை. எல்லாவற்றுக்கும் 110 விதியின் கீழ் ஜெயலலிதாவே அறிக்கை படித்து விடுகிறார். ஜெயலலிதா பேசும் போது அமைச்சர்கள் மேஜையை மட்டும் தட்டுகிறார்கள்.

இலவசங்களை வாரி வழங்குகிறார்கள். இதனால் ஏழ்மை குறைந்ததா? கவர்ச்சித் திட்டங்கள் வேண்டாம், வளர்ச்சித் திட்டங்கள்தான் வேண்டும். இலவசங்களால் ஏழ்மை குறைந்தால் தலை வணங்கி ஏற்கிறேன். ஆண்கள் குடிக்க டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டு, வீடுகளில் பெண்களுக்கு இலவசப் பொருள்களை வழங்குகிறார்கள். வேருக்கு விஷமும், இலைக்கு தண்ணீரும் ஊற்றுகிறார்கள்.

நிலம் மூலம் கொள்ளையடித்தவர்களை உள்ளே தள்ளியுள்ளீர்கள். அதே நிலை தான் நாளை உங்களுக்கும் திரும்பும்.

இன்றைக்கு வெயில் காலம் முடிந்தும் வெயில் குறைந்ததா?. 2004ல் சுனாமி வந்தபோது, திருச்சியில் திருமண மண்டபம் எரிந்தபோது, கும்பகோணத்தில் பள்ளி எரிந்து குழந்தைகள் இறந்தபோது யாரோட ஆட்சி நடந்தது? இப்ப பூமி அதிர்வு, நில அதிர்வு வருகிறது. இப்ப யாரோட ஆட்சி நடக்குது? நல்லவங்க ஆட்சி இருந்தா இதெல்லாம் நடக்காது என்றார் விஜய்காந்த்.

ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அதில் பலரையும் கவர்ந்த கோஷங்கள்..

''அண்டா திருடன் மத்திய அரசு
குண்டா திருடன் மாநில அரசு

முன்னே போனால் கடிக்குது
பின்னே வந்தால் உதைக்குது

மத்திய அரசு கடிக்குது
மாநில அரசு உதைக்குது

கழுதைக்கு தெரியாது கற்பூர வாசனை
இவர்களுக்கு புரியாது மக்களின் வேதனை'' ஆகியவை.

English summary
DMDK leader Vijayakanth has requested the central and state government to decrease the petrol price immediately. DMDK party people conducted a protest against petrol hike in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X