For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துளைகளை அடைக்கவிடாமல் கேரள அரசு தடுத்துக்கொண்டே இருந்தால்...: வைகோ எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் போடப்பட்ட துளைகளை அடைக்கவிடாமல் தமிழக பொறியாளர்கள் தடுக்கும் கேரள அரசின் செயலுக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உச்ச நீதிமன்றத்தின் உயர்மட்ட அதிகாரக் குழுவான நீதி அரசர் ஆனந்த் தலைமையிலான குழு அறிவித்த ஆய்வுக்காக, தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையில் செங்குத்தாக எட்டு ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு, மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்தத் துளைகளில் தண்ணீர் தேங்கினால், அணையில் நீர்க்கசிவுக்கும் வலு இழப்பதற்கும் காரணமாகி விடக் கூடாது என்பதால், துளைகளை அடைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சட்டப்படியும், உரிமையின்படியும் தமிழக அரசு இந்தப் பணிகளைச் செய்ய முற்பட்டபோது கேரள அரசின் அதிகாரிகளும், காவல்துறையினரும், அதைச் செய்ய விடாமல் கடந்த சில மாதங்களாகத் தடுத்து வந்தனர்.

கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு 660 கோடி ரூபாய் ஒதுக்கியது மட்டும் அல்லாமல், அணையை உடைப்பதற்கு ஐம்பது கோடி ரூபாயையும் ஒதுக்கி உள்ளது. அதற்காக வெடிமருந்துகளையும் சேகரித்து வைத்து உள்ளது. எனவே, அணையின் ஆய்வுக்குப் போடப்பட்ட துளைகளை அடைக்கவிடாமல் கேரள அரசு முயன்றதில், வஞ்சகமான உள்நோக்கமும், சதியும் உள்ளது என அப்போதே நான் எச்சரித்தேன்.

அணையில் துளைகளை மூடுவதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து கேரள அரசை வற்புறுத்த வேண்டும் என்றும், அந்தக் கடமையைச் செய்யாத நிலையில், தமிழக அரசு காவல்துறையை அனுப்பி, துளைகளை மூடுகின்ற பணிகளில் ஈடுபடும் என்றும் நியாயமான எச்சரிக்கையைத் தெரிவித்து தமிழக முதல்வர், இந்தியத் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.

நிலைமை விபரீதமாகிவிடும் என்பதை உணர்ந்துகொண்ட கேரள அரசு, தனது எதிர்ப்பில் இருந்து பின்வாங்கியது. இப்போது துளைகளை அடைக்கும் பணி நடந்து வருகின்றது. அதற்காக தமிழகத்தில் இருந்து சிமெண்ட் கொண்டு சென்ற லாரிகளை கேரள அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். சிமெண்ட் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி உள்ளனர்.

உயர் தொழில்நுட்பத்தோடு துளைகளை அடைக்கும் வேலை முறையாக நடக்கின்றது. ஆனால் இது அணையைப் பலப்படுத்தும் வேலை என்று சொல்லி, கேரளம் ஆட்சேபிப்பது, அக்கிரமம் ஆகும். ஏனென்றால், நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு, உச்சநீதிமன்றத்துக்குக் கொடுத்து உள்ள அறிக்கையில், 105, 107ஆகிய பக்கங்களில், முல்லைப்பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை, மத்திய நீர்வள ஆணையமே முன்னின்று, தமிழக அரசுசெய்ய வேண்டும் எனத் தெளிவாகக் கூறி உள்ளது.

1886ல் போடப்பட்ட முல்லைப்பெரியாறு ஒப்பந்தத்திலேயே, அணையின் 8000 ஏக்கர் பரப்பில், தமிழகத்துக்கு முழு உரிமை உண்டு என்றும், அணை கட்டும்போதும், பராமரிப்பதற்கும், பொருள்களைக் கொண்டு செல்லவும், திரும்பி வரவும் அனைத்து உரிமைகளும் உண்டு என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

எனவே, தற்போது துளைகளை அடைக்கும் பணி முழுமையாக நடைபெற தேவையான பொருள்களைத் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்வதைத் தடுக்க கேரள அரசு முயல்வது கண்டனத்துக்கு உரியதாகும்.

எனவே, நமக்கு உரிமை உள்ள அணையில் துளைகளை அடைப்பதற்கும், சேதம் நேராதவாறு பாதுகாத்துக் கொள்வதற்கும், தொடர்ந்து கேரள அரசு முட்டுக்கட்டை போடுமானால், தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு, தமிழகக் காவல்துறையை அங்கு அனுப்பி, துளைகளை அடைக்கும் வேலையை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko condemns Kerala government's action of stopping TN engineers from filling the holes in the Mullai Periyar dam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X