கொடுமுடி அருகே உள்ள தீண்டாமை சுவரை அகற்றாவிட்டால் கோட்டை நோக்கி பேரணி: தலித் விடுதலை இயக்கம்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையத்தில் உள்ள தீண்டாமை சுவரை உடனே அகற்றாவிட்டால் சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என தலித் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரோட்டில் தலித் விடுதலை இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள நகப்பாளையம் என்ற கிராமத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் காலத்தில் கூட அந்த காலம் போல் தீண்டாமை கொடுமை நடைபெற்று வருகின்றது என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட இந்த சுவரின் மீது கண்ணாடிகள் பதிக்கப்பட்டு யாரும் இதைத் தாண்டி செல்ல முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சுவருக்கு இந்த பக்கம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் 10 அடி தூரத்தில் உள்ள கோயிலுக்கும், பள்ளிக்கூடத்திற்கும் செல்ல கிலோ மீட்டர் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவலத்தை மாவட்ட கலெக்டரே நேரில் சென்று விசாரணை நடத்தி அகற்றி இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, இந்த தீண்டாமை சுவரை உடனே அகற்ற மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முன் வர வேண்டும். இல்லை எனில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இதற்கும் அரசு அசைந்து கொடுக்கவில்லை எனில் தலித் மக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக சென்னை தலைமைச் செயலகம் (கோட்டை ) நோக்கி பேரணி நடத்துவோம். தொடர் அறப்போராட்டங்களில் ஈடுபடுவோம். இது தவிர இந்த விவகாரம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும், தேசிய எஸ்.சி.எஸ்.டி.பிரிவு ஆணையத்திற்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications