For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள ரயில்வே மண்டலத்தில் தமிழக பகுதிகளை இணைக்க குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

கேரள ரயில்வே மண்டலத்தில் தமிழக பகுதிகளை இணைக்க குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

நாகர்கோவில்:

தமிழக ரயில் கோட்டம் மற்றும் வழித் தடங்களை உள்ளடக்கி கேரளாவுக்கு என தனியாக ரயில்வே மண்டலம் அமைக்கும் முயற்சிக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தெற்கு ரயில்வே(Railway Zone)1951ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மூன்று மாநில ரயில்வேக்களை இணைத்து உருவாக்கபட்டது. தற்போது சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் என தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்கள் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ரயில்வழித் தடங்கள் உள்ளன.

இதில் தமிழகத்தில் 3885 கி.மீ தூரமும், கேரளாவில் 1050 கி.மீ தூரமும், ஆந்திராவில் 121 கி.மீ தூரமும், கர்நாடகாவில் 37கி.மீ தூரமும், புதுச்சேரியில் 11கி.மீ தூரமும் என்று தற்போது 5104 கி.மீ ரயில் வழித் தடங்கள் உள்ளது. சென்னை கோட்டத்தில் 830கி.மீ, சேலம் கோட்டத்தில் 780கி.மீ, பாலக்காடு கோட்டத்தில் 575கி.மீ, திருவனந்தபுரம் கோட்டத்தில் 625கி.மீ, திருச்சி கோட்டத்தில் 993கி.மீ, மதுரை கோட்டத்தில் 1301 கி.மீ தூரம் ரயில் வழித் தடம் உள்ளது.

தற்போது சேலம் கோட்டத்தை உள்ளடக்கிய கேரளாவுக்கு என தனியாக ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என கேரளாவில் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதற்கு ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது..

குமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில் வழித் தடங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நிலையில் மலையாள அதிகாரிகளால் புறக்கணிக்கபட்டு வருகிறது. திருவனந்தபுரம் கோட்டத்தில் 625 கி.மீ தொலைவுக்கு வழித்தடங்கள் உள்ளன. இதில் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரி-திருவனந்தபுரம் வழித்தடம் 87 கி.மீட்டரும் மற்றும் நாகர்கோவில்-திருநெல்வேலி வழித்தடம் 74 கி.மீட்டரும் என மொத்தம் 161.கி.மீ தொலைவு உள்ளது.

திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் செயல்படுகின்ற 25 விழுக்காடு வழித்தடங்கள் நெல்லை மற்றும் குமரி மாவட்ட பகுதிகளில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-திருவனந்தபுரம் ரயில் பாதை 16-04-1979 அன்றும் நாகர்கோவில்-திருநெல்வேலி ரயில் பாதை இரண்டு வருடங்கள் கழித்து 08-4-1981 அன்றும் திறக்கப்பட்டன.

திருவனந்தபுரம் கோட்டம் 02-10-1979 அன்று முதல் செயல்படத் தொடங்கியது. குமரி மாவட்ட ரயில் தடங்கள் அமைக்கபட்டு சில மாதங்கள் வரை மதுரை கோட்டத்துடனே இருந்தது. அதன் பிறகு நாகர்கோவில்-திருநெல்வேலி மார்க்கம் ரயில் தடம் இல்லாத காரணத்தால் நிர்வாக வசதிக்காகவும், ரயில் இயக்கம் வசதிக்காகவும் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கபட்டது. இணைக்கபடும் போதே, நாகர்கோவில்-திருநெல்வேலி ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்ததும் மதுரை கோட்டத்துடன் இணைக்கபடும் என்று வாக்குறுதி அளிக்கபட்டது. ஆனால் இன்று வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றபடவில்லை.

குமரி மற்றும் நெல்லை மாவட்ட அரசியல் கட்சிகளும் சட்டமன்ற மற்றம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இதனால் திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள குமரி மற்றும் நெல்லை மாவட்ட ரயில் வழித் தடங்களையும் மற்றும் பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி-கிணத்துகடவு ரயில் வழித் தடங்களையும் மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம்-கொச்சி-சொர்ணூர் ரயில் வழித்தடங்கள் அனைத்தும் 1979 ஆண்டு வரை மதுரை கோட்டத்தில் தான் இருந்து வந்தது. 1979 ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி அன்று மதுரை கோட்டத்தில் உள்ள கேரளா பகுதிகளை பிரித்து திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய ரயில் கோட்டம் ஏற்படுத்தபட்டது. இதற்கு தமிழக மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் பகுதியை அவர்கள் பிரித்து கொண்டு செல்கின்றனர் என்ற விட்டுவிட்டனர்.

இதே போல் கேரளாவுக்கு என தனி ரயில் மண்டலத்துக்கு எப்போதுமே நாங்கள் எதிரி அல்ல. அவர்களுக்கு தனி மண்டலம் வேண்டும் என்றால் கேரளா கோட்டங்களையும், கேரளாவில் உள்ள ரயில் வழித் தடங்களையும் உள்ளடக்கி தனி மண்டலம் அமைத்துக் கொள்ளட்டும். ஆனால் தமிழக ரயில்வே கோட்டங்களான சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகியவற்றை எந்த மாற்றமும் செய்யாமல் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே கோட்டம் நீடிக்க வேண்டும்.

இதை போல் கேரளா கோட்டத்தில் உள்ள தமிழக ரயில் பகுதிகளான குமரி, நெல்லை மாவட்ட ரயில் வழித் தடங்களையும் மற்றும் பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி-கிணத்துகடவு ரயில் வழித்தடங்களையும் மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைத்துவிட்டு அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ளட்டும்.

ஒரு ரயில்வே மண்டலம் வேண்டும் என்றால் மூன்று கோட்டங்கள் தேவை. கேரளாவினர் அவர்கள் மாநிலத்துக்கு என தனியாக ரயில்வே மண்டலம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.

கேரளாவில் தற்போது 1050 கி.மீ தூரம் ரயில் வழித்தடம் மட்டுமே உள்ளது. ஆனால் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ரயில் கோட்டங்கள் உள்ள தமிழக ரயில் வழித் தடங்களை சேர்த்து மொத்தம் 1200 கி.மீ ரயில் வழித்தடங்கள் உள்ளன. இதனால் கேரளாவில் புதிய ரயில் வழித்தடங்கள் திட்டங்கள் புதிதாக செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மூன்றாவது கோட்டத்துக்கு சேலம் அல்லது மதுரை கோட்டத்தின் மீது கண் வைத்துள்ளனர். இந்த செயல் தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே இந்த கோரிக்கையை தமிழகத்தில் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி தமிழக நலன் காக்க ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Kanyakumari District Railway Passengers' Association has condemned the effort of Kerala to set up a separate railway zone comprising TN routes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X