For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சாட்சிகள் விசாரணை ரத்து!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பட்டப் பகலில் வகுப்பறையில் ஆசிரியர் உமா மகேஸ்வரி கொடூரமாக கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்ற மாஜிஸ்திரேட் நடத்திய சாட்சிகள் விசாரணை செல்லாது என்று அறிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனைப் பகுதியில் உள்ள செயின்மேரீஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி இவர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே வகுப்பு மாணவன் ஒருவன் ஆசிரியை உமாவை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்து விட்டான்.

நாட்டையே பெரும் பதைபதைப்பில் ஆழ்த்திய இந்த கொலை வழக்கை சிறார் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் சாட்சி விசாரணையை முழுவதுமாக ரத்து செய்தும், செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக சாட்சிகள் விசாரணையை ரத்து செய்யுமாறு கோரி மாணவர் சார்பில் அவரது வக்கீல்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை கோடை விடுமுறைகால நீதிபதி நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரித்து சாட்சிவிசாரணைக்கு தடை வித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முறையான நீதிபதி நாகமுத்து முன்னிலையில் வந்தது. அப்போது அவர் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அதன் முழு விவரம்:

வழக்கின் இறுதி அறிக்கையை போலீசார் கடந்த 17.5.12 அன்று தாக்கல் செய்தனர். அன்று சிறுவர் நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட் (12-வது கோர்ட் மாஜிஸ்திரேட்) விடுமுறை என்பதால், 12-வது கோர்ட்டின் பொறுப்பில் 20-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டார். அவர் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு மாணவனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்.

மே மாதம் 29, 30, 31-ந் தேதிகளில் 27 அரசுத் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மாணவன் வழக்கு தாக்கல் செய்து வழக்கு விசாரணைக்கு தடையாணை பெற்றார்.

வழக்கின் ஆவணங்களை பார்க்கும்போது, சிறுவர் நீதிமன்றத்தில் தலைமை மாஜிஸ்திரேட் நியமனமே தவறானது என்பது தெரிய வருகிறது. சிறுவர்கள் நீதி வாரியத்தின் சட்டப்படி, குழந்தைகள் மனோதத்துவம் தெரியாத அல்லது அதில் பயிற்சி பெறாதவர்கள் அந்த நீதிமன்றத்தின் முதன்மை மாஜிஸ்திரேட்களாக நியமிக்கப்படக் கூடாது.

12-வது கோர்ட்டின் பொறுப்புப் பணிக்கு வரும் மாஜிஸ்திரேட் எப்படி தலைமை மாஜிஸ்திரேட் பணியை செய்ய முடியும். தலைமை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்படாத அவர் தலைமை மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வழக்கின் சாட்சி விசாரணையை நடத்தியது தவறு.

எனவே 17.5.12 அன்றிலிருந்து 31.5.12 வரை தலைமை மாஜிஸ்திரேட் பதவியில் இருந்து கொண்டு 20-வது மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணை அனைத்தும் செல்லாது. கடுமையான கொலை குற்றச்சாட்டு வழக்கில் சாட்சி விசாரணையை நடத்திவிட்டு, அது வெறும் சாதாரண விசாரணைதான் என்று மாஜிஸ்திரேட் கூறுவதை ஏற்க முடியாது.

குறுக்கு விசாரணை நடத்துவதற்கு கால அவகாசம் தரப்படவில்லை என்பதால் குறுக்கு விசாரணை நடத்த முடியாமல் போய்விட்டது என்று மாணவன் தரப்பு வக்கீல் கூறுவதில் நியாயம் உள்ளது. 48 சாட்சிகள், 95 ஆவணங்களைக் கொண்ட இந்த வழக்கில், சிறுவனின் நலனை கருதாமல் அவசர அவசரமாக விசாரணை நடத்தியது தெரிகிறது.

சிறுவர்களை விசாரிப்பதற்காக புரசைவாக்கத்தில் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பயம் ஏற்படாதபடி, நட்பின் அடிப்படையில் விசாரிப்பதற்காகவே கோர்ட்டு அல்லாத தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றவர்களை விசாரிக்கும் 20-வது கோர்ட்டுக்கு கொண்டு வந்து, அங்கு சாட்சி விசாரணையை நடத்தியது தவறு.

மேலும் சிறுவர்களை கையாளும் தனி போலீஸ் பிரிவை வைத்துத்தான் அந்த வழக்குகளை நடத்தி இருக்க வேண்டும். மாணவன் வழக்கில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எத்தனையோ விஷயங்களை கூற முடியும் என்றாலும், மனுதாரரின் மனுவைத் தாண்டி வெளியே செல்ல விரும்பவில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுவர் நீதிமன்றங்களில் சிறப்பு அரசு வக்கீல்களை அரசு நியமிக்க வேண்டும். அந்தப் பதவியில் அவர்களுக்கு 10 ஆண்டுகள் அனுபவம் இருப்பதோடு, குழந்தைகள் நலன் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

எனவே மாணவன் வழக்கில் 20-வது மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை சிறுவர் நீதிமன்றத்துக்கு தகுதியான தலைமை மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட வேண்டும். இங்கு தகுதியான உறுப்பினர்களை நியமித்து பிறகு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மறுபடியும் புதிய நீதிபதி வந்து அதன் பிறகே சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்பதால் இந்த வழக்கு மேலும் தாமதமடையும் என்று தெரிகிறது.

தற்போது இந்த சாட்சிகள் விசாரணையை நடத்தியவர் 20வது பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madras HC has cancelled the witness trial in Teacher Uma Maheswari murder case. It has ordered to appoint a new magistrate to the juvenile court and conduct the trial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X