For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமிர் பேச்சு: மத்திய அரசு இலங்கைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்- வைகோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை அமைச்சர் சம்பிக ரணவாக்கவின் ஆணவப் பேச்சுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை, பச்சிளம் குழந்தைகளை, நம் அன்னையரை, நம் சகோதரிகளை, ஆயுதம் ஏந்தாத நிராயுதபாணிகளை துடிக்கத் துடிக்க படுகொலை செய்த சிங்கள இனவாத ராஜபக்சே அரசின் அமைச்சர் சம்பிக ரணவாக்க ஒரு முள்ளிவாய்க்கால் போதாதா? இன்னும் பல நடத்துவோம் என்று கொக்கரித்தார். உடனே காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கும் இந்தியாவின் மன்மோகன் சிங் அரசு, சிங்கள அரசை கண்டனமோ, எச்சரிக்கையோ செய்யாமல் வேடிக்கை பார்த்தது. அதனால்தான் சிங்கள அமைச்சரின் மமதை மிக்க ஆணவப் பேச்சு மீண்டும் எழுகிறது.

தமிழ் ஈழத்தை ஆதரித்து எவரும் பேசக் கூடாது என்றும், தாய்த் தமிழகத்தில் அதற்கு குரல் கொடுக்கக் கூடாது என்றும், ஈழத் தமிழருக்கு பேரழிவு நேரும் என்றும், அதே சிங்கள அமைச்சரை கொலை பாதக ராஜபக்சே பேச வைக்கும் இந்த நிலைமைக்கு முழுக்க முழுக்க மத்திய காங்கிரஸ் அரசே காரணம்.

ஈழத் தமிழர்கள் வலிமையோடு இருந்தால் தெற்கே இந்தியாவிற்கு அது பாதுகாப்பு அரணாக அமையும் என்று இந்தியாவின் அரசியல் பூகோள நலன்களையும் கருதி இந்திரா காந்தி அம்மையார் ஈழப் பிரச்சினையை அணுகினார்.

2004ம் ஆண்டு முதல் சோனியா காந்தி இயக்கி வரும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈழத் தமிழர்களை அடியோடு அழிக்க முற்பட்டு, இனக்கொலை புரிந்த சிங்கள அரசுக்கு ஆயுதமும் அனைத்து உதவிகளும் வழங்கியது. இன்று சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் பலமாகக் காலூன்றி விட்டன. யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போடுவதுபோல் இந்திய அரசு தமிழ் இனத்துக்கும் துரோகம் செய்து, இந்தியாவின் மொத்த நலனுக்கும் கேடு தேடிக் கொண்டது.

சிங்கள அதிபர் ராஜபக்சே அரசு நடத்திய தமிழ் இனக்கொலைக்கு எல்லாம் உடந்தையாகச் செயல்பட்டு இந்தியாவுக்கு திரும்பத் திரும்ப அழைத்து விருந்தும், உபசாரமும் தந்து, ஊக்குவித்தது. ஈழத் தமிழர்களுக்கு இந்தியா எங்கே உதவிவிடுமோ என்று அஞ்சி வாலை மடக்கிக் கிடந்த சிங்கள அரசு இப்போது, ஈழத் தமிழர்களை இந்தியாவின் உதவியோடு ஒடுக்கிவிட்டோம். இனி இந்தியாவின் தயவு தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது. அதனால்தான் இந்திய அரசை சிங்கள ராஜபக்சே அரசு உதாசீனம் செய்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்புக்குப் போய் வந்து சொன்னதை உடனே மறுத்து இந்திய அரசின் முகத்தில் கரியைப் பூசியது.

சிவசங்கர மேனன்கள் தான் ஈழத் தமிழரை அழிக்க சிங்கள அரசின் கங்காணிகளாக செயல்பட்டவர்கள். இனி இந்திய அரசை ஏளனம் செய்யவும், எடுத்து எறிந்து, எதிர்த்து ஆணவமாக ராஜபக்சே பேசவுமான நிலைமை உருவாகி வருகிறது. இந்தக் கட்டத்திலாவது சிங்கள அரசின் கொட்டத்தை ஒடுக்கும் வகையில், இந்திய அரசு கடுமையான நிலையை மேற்கொள்ளாவிடில், இன்னும் இந்தியாவிற்கு எதிராக பாதகமான சூழ்நிலை உருவாகும். அதனால் ஏற்படக்கூடிய அனைத்து விளைவுகளுக்கும் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பழிக்கு ஆளாகிப் பொறுப்பேற்க வேண்டி வரும். எனவே, சிங்கள அமைச்சரின் அகம்பாவப் பேச்சுக்கு முடிவுகட்ட இந்திய அரசு உரிய கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko wants UPA government to condemn Sri Lanka for its minister Champika Ranawaka's speech about another Mullivaikal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X