For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிங்கள ராணுவத்தைப் போலவே ஈழத் தமிழரை துன்புறுத்துகிறது தமிழக போலீஸ்: சீமான் புகார்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மண்டபம் ஈழத் தமிழ் அகதிகள் முகாமிலுள்ள மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி புணர்ச்சிக்கு அழைத்ததாக தமிழக போலீசார் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழ்மக்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவத்துக்கு இணையாக தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செங்கல்பட்டு அகதிகள் போராட்டம்

அயல்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின்றி சிறையில் உள்ள தங்களை தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ளவர்களில் 14 பேர் கடந்த 15 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் 9 பேரின் உடல் நிலை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் செங்கல்பட்டு அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பற்றிப் பேச காவல்துறை உயர் அதிகாரிகளோ அல்லது தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையினரோ அல்லது மாவட்ட நிர்வாகமோ முன்வரவில்லை. மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளவர்களில் ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் உருவாகி ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றொருவர் முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பால் அடிக்கடி இழுப்பு ஏற்படுகிறது. இந்த இருவக்கு உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டியதுள்ளது, ஆனால் செய்யவில்லை.

செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு தொடர்ந்த வழக்குகளில் இருந்து அவர்கள் ஜாமீனில் விடுதலை பெற்றுள்ளனர். அவ்வாறு இருந்தும் அவர்களை அயல்நாட்டு சட்டத்தின் கீழ் காலவரையின்றி நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே தடுத்து வைத்துள்ளனர். சட்ட ரீதியாக தங்கள் மீதான வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் இப்படி நீண்ட காலமாக தடுத்து வைத்திருப்பதை எதிர்த்தும், தங்களை இதர முகாம்களில் வாழ்ந்து வரும் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்குமாறு கோரியும் இவர்கள் பல முறை பட்டிணிப் போராட்டம் நடத்தியுள்ளனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் போது எல்லாம், அரசுடன் பேசி விடுதலை செய்வோம் என ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் உறுதிமொழி அளிப்பார்கள். போராட்டம் முடிந்ததும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை தட்டிக் கழித்து வருகின்றனர். குடிநீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக எங்களை தடுத்து வைத்துள்ளீர்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதற்கும், உரிய பதிலை மாவட்ட நிர்வாகம் தரவில்லை.

சிங்களவருக்கு இணையாக தமிழக கியூ பிரிவு போலீசார்

தமிழ்நாட்டின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள ஈழத்து சொந்தங்களை மிரட்டவே இந்த சிறப்பு முகாம்களை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவினர் பயன்படுத்தி வருகின்றனர். மண்டபம் முகாமிலுள்ள முன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி, புணர்ச்சிக்கு அழைத்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய பிறகும் க்யூ பிரிவின் அச்சுறுத்தலும், அராஜகமும் தடையின்றி தொடர்கிறது. வன்னி முள்வேலி முகாம்களில் சிங்கள படையினர் நம் சொந்தங்களை எப்படி எல்லாம் துன்புறுத்துகிறார்களோ அதற்கு சற்றும் குறைவின்றி, இங்கு க்யூ பிரிவு காவலர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கேயே இருந்து செத்திருக்கலாம் என்று நொந்துபோய் கூறும் அளவிற்கு க்யூ பிரிவினரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.

ஈழத் தமிழர்கள் அரசியல் சம உரிமை பெறும் வரை போராடுவேன் என்று சட்டப் பேரவையிலேயே தமிழக முதல்வர் கூறினார். ஆனால், இங்குள்ள காவல் துறையினர் சிங்கள இராணுவத்தினருக்கு இணையாக அவர்களை துன்புறுத்துகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவே இந்த உண்மைகளைக் கூறுகிறோம்.

அகதிகளாக வந்தவர்களை அயல்நாட்டு சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பது மனித உரிமை பறிப்பல்லவா? சிங்கள அரசின் இனப் படுகொலையில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள அகதிகளாக வந்தவர்களை உரிய மரியாதையுடன் பாதுகாப்புடன் நடத்துவது நமது அரசின் கடமையல்லவா ? இந்த நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்த திபெத்தியர்களுக்கும், பர்மா அகதிகளுக்கும் வழங்கப்படும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு மறுக்கப்படுவது ஏன்? எனவே, இந்த உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்து, சிறப்பு முகாம்களில் உள்ளோர் அனைவரையும் விடுவித்து, மற்ற முகாம்களில் அவர்கள் வாழ அனுமதிக்க வேண்டும் .

நம் சொந்தங்களின் நியாயமான கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், சிறப்பு முகாம்களின் முன்னால் நாம் தமிழர் கட்சி மறியலில் ஈடுபடும் என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் ராயனூர் அகதி முகாமில் உள்ள ஒரு பெண்ணை வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய புகாரின் பேரில் 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Naam Thamizhar party leader Seeman has charged that Tamil Nadu police are harassing Lankan Tamils, particularly women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X