For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதியை இடிக்க நரசிம்ம ராவ் உடந்தையாக இருந்தார்: குல்தீப் நய்யார் சுயசரிதை

Google Oneindia Tamil News

டெல்லி: பாபர் மசூதி இடிப்புக்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் உடந்தையாக இருந்தார் என்று பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் எழுதியுள்ள புத்தகத்திலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் சிங் எழுதி, விரைவில் வெளியாகவுள்ள சுயசரிதையிலும் பாபர் மசூதி விவகாரத்தில் ராவ் மீது கடும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.

'A Grain of Sand in the Hourglass of Time' என்ற அந்தப் புத்தகத்தில், மசூதியை இடிக்கப் போகிறார்கள்.. நடவடிக்கை எடுங்கள் என்று நரசிம்ம ராவிடம் நேரடியாகவே சொன்னேன். அதை அவர் காதிலேயே வாங்கவில்லை என்று அர்ஜூன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தகவல் வந்தவுடன் அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் தனது வீட்டில் தன் அறைக்குள் போய் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப் பார்த்தபோது ரோம் நகரமே எரிந்து கொண்டிருக்கும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்த கதைதான் நினைவுக்கு வந்தது என்றும் அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.

இந் நிலையில் பிரபல மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் எழுதியுள்ள சுயசரிதையான Beyond the Lines என்ற புத்தகம் விரைவில் வெளியாகவுள்ளது. அதில் நரசிம்ம ராவ் மீது மேலும் அதிகமான புகார்கள் கூறப்பட்டுள்ளன.

மசூதியை இடிக்க நரசிம்ம ராவும் உடந்தையாக இருந்தார் என்று நேரடியாகவே குற்றம் சுமத்தியுள்ளார் நய்யார்.

அதில் நய்யார் கூறியிருப்பதாவது: பாபர் மசூதியை இடிக்க நரசிம்ம ராவும் முழு உடந்தையாக இருந்தார். கர சேவகர்கள் மசூதியை இடிக்க ஆரம்பித்தவுடன் அவர் பூஜையில் அமர்ந்துவிட்டார். மசூதி முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர், நரசிம்ம ராவின் அருகே சென்ற அவரது உதவியாளர், மசூதி தரைமட்டமாகிவிட்டது. இதையடுத்து தனது பூஜையையும் ராவ் உடனே முடித்துக் கொண்டார்.

இதை மூத்த சோசலிசத் தலைவர் மது லிமாயியே என்னிடம் தெரிவித்தார்.

மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் மதக் கலவரங்கள் வெடித்தபோது நான் உள்பட சில மூத்த பத்திரிக்கையாளர்களை நரசிம்ம ராவ் தனது வீட்டுக்கு அழைத்தார்.

மசூதி இடிப்பைத் தவிர்க்க தனது அரசு என்ன நடவடிக்கை எல்லாம் எடுத்தது என்று மிகவும் கஷ்டப்பட்டு விளக்கம் தந்தார். என்னை உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் ஏமாற்றிவிட்டார், நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார் என்றும் புகார் கூறினார்.

எப்படி சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரே இரவில் ஒரு கோவிலைக் கட்டி அங்கு கரசேவகர்களால் சிலையை நிறுவ முடிந்தது. இதை ஏன் மத்திய அரசு தடுக்கவில்லை என்று நாங்கள் கேட்டபோது, அதைத் தடுக்க சிஆர்பிஎப் படையினரை லக்னோவுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்ததாகவும், ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் இறங்க முடியாமல் போனதாகவும் கூறினார் ராவ்.

சரி, மசூதியின் பாதுகாப்பில் இருந்த மத்தியப் படைகள் என்ன செய்து கொண்டிருந்த என்று நான் கேட்டதற்கு நரசிம்ம ராவ் பதில் சொல்லவில்லை. மாறாக, அந்தக் கோவில் அங்கு நெடு நாட்களுக்கு இருக்காது என்றார்.

மசூதி இடிப்புக்கு நரசிம்ம ராவ் அரசு தான் முழுப் பொறுப்பு. மசூதி இடிக்கப்படவுள்ளது என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அதைத் தடுக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

மசூதி இடிக்கப்பட்டது, பட்டப்பகலில் நடந்த ஒரு மதசார்பின்மையின் படுகொலையாகும்.

நரசிம்ம ராவை சோனியாவுக்கு எப்போதுமே பிடித்ததில்லை. அவர் பிரதமர் பதவியோடு கட்சித் தலைவர் பதவியையும் ஆக்கிரமித்தபோது அதை சோனியாவால் தடுக்க முடியவில்லை. இதனால் கட்சி விவகாரங்களில் தலையிடுவதையே தவிர்த்து வந்தார்.

ஆனால், நாடு முழுவதுமே கட்சி பலமிழந்து வருவதை சோனியா கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சந்திக்கும் மூத்த தலைவர்கள் எல்லோருமே கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு கெஞ்சிக் கூத்தாடி வந்தனர்.

இவ்வாறு எழுதியுள்ளார் குல்தீப் நய்யார்.

நரசிம்ம ராவின் மகன் மறுப்பு:

நரசிம்ம ராவ் குறித்து குல்தீப் நய்யார் எழுதியுள்ள கருத்துக்களை அவரது மகன் பி.வி.ரங்காராவ் மறுத்துள்ளார்.

எனது தந்தை அப்படிப்பட்டவர் அல்ல. அவர் முஸ்லீம்களை நேசித்தார், அவர்களுக்காக குரல் கொடுத்தவர். மசூதி இடிக்கப்பட்டது குறித்து அவர் எங்களுடன் பலமுறை கவலையோடு பேசியுள்ளார். குல்தீப் நய்யார் போன்ற ஒரு மூத்த பத்திரிக்கையாளர் இவ்வாறு எழுதியிருப்பதை நம்பவே முடியவில்லை. இந்தத் தகவல்கள் நம்ப முடியாதவை மட்டுமல்ல அடிப்படையற்றவை என்றார்.

English summary
Yet another book has levelled an allegation that P.V. Narasimha Rao had connived at the demolition of Babri Masjid claiming that the late Prime Minister had sat in a puja when the kar sevaks began pulling it down and rose only when it was over. The charge relating to the demolition on Dec 6,1992 has been made by eminent journalist Kuldip Nayar in his soon-to-be released autobiography Beyond the Lines being brought out by Roli Books. "My information was that Rao had connived at the demolition. He sat at puja when the kar sevaks began pulling down the mosque and rose only when the last stone had been removed". "Madhu Limaye (late socialist leader) later told me that during the puja, Rao's aide whispered in his ears that the masjid had been demolished. Within seconds, the puja was over", he said in a chapter on "Narasimha Rao's Government" in the book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X