For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக மீது மட்டும் மார்க்சிஸ்டுக்கு வெறுப்பு ஏன்?: கருணாநிதி கேள்வி

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதற்காக மட்டுமின்றி, மக்கள் பிரச்சனைகளுக்காகவும் தான் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சிலர் நாட்டுக்கு, சமுதாயத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்வார்கள். இருந்தாலும் அவர்களைக் கண்டால் ஒரு சிலருக்கு ஓர் அலர்ஜி! அந்தச் சிலரில் ஒருவர் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன். அவருக்கு என்ன காரணத்தாலோ திமுக என்றால் பிடிக்காது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல திமு கழகமும் தற்போது ஒரு எதிர்க்கட்சி தான். ஆனால் ராமகிருஷ்ணனுக்கு ஆளுகின்ற கட்சியைக் குறை சொல்வதைவிட திமு கழகத்தின் மீது எரிச்சலைக் கக்குவது என்றால் எப்படித்தான் இனிக்குமோ, நமக்குத் தெரியவில்லை!

ஜனநாயக முறைப்படி மாற்றுக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தத் தாக்குதலுக்கும் பதிலளிக்க வேண்டியது கழகத்தின் கடமை என்ற உணர்வோடுதான் நான் விளக்கத்தை அளிக்க முன்வந்துள்ளேனே தவிர, ராமகிருஷ்ணனைப் பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் காலத்திலும் தவறான எண்ணம் கிடையாது.

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியது ஏன் என்று கேட்கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக கவலைப்படாமல் திமு கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு என்றதும் அதற்காக மட்டும் சிறை நிரப்பும் போராட்டத்தை திமுக அறிவித்து விடவில்லை.

திமுக முன்னணியினர் கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்கள் ஜாமீனில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகும், மீண்டும் அவர்கள் மீது ஏதோ பொய்ப் புகார்களைப் பெற்று வழக்கு தொடுத்தும், அதிலும் ஜாமீன் பெற்றால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பிறப்பித்து சிறையிலே அடைத்தும் தொடர்ந்து நடந்து வந்த பிறகு வேறு வழியில்லாமல் அத்தகைய பழி வாங்கும் போக்கினைக் கண்டிக்கும் வகையிலே மாத்திரமல்லாமல், அத்துடன் மக்கள் பிரச்சினைகளையும் இணைத்து திமுக தலைமைச் செயற்குழுவினைக் கூட்டி அதிலே ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதற்குப் பிறகுதான் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டு முறைப்படி நடைபெற்றுள்ளது.

75 வயதுக்கு மேலான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஒரு இதய நோயாளி என்பது தெரிந்திருந்தும், நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்த பிறகும், வேண்டுமென்றே வழக்குக்கு மேல் வழக்குப் பதிவு செய்வதும், ஜாமீனில் வெளியேவர முடியாமல் குண்டர் சட்டத்தைப் பிறப்பித்திருப்பதும், சேலம் சிறை, கோவை சிறை, புழல் சிறை, வேலூர் சிறை என்று அங்குமிங்கும் வேனிலேயே இழுத்தடிப்பதும் நியாயம் என்று அவருடைய கட்சியிலே மாவட்ட செயலாளர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்தால் எந்த அளவிற்கு கண்டன அறிக்கைகளைக் கொடுத்து, போராட்டம் நடத்துகிறார்கள்?

ஆனால் திமுக முன்னாள் அமைச்சர் மீது தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்கும் போது, அதற்காகப் போராட்டம் நடத்துவது தவறா? அப்படி போராட்டம் நடத்தும்போதுகூட, அதற்காக மட்டுமே போராட்டம் நடத்தாமல் மக்கள் பிரச்சினைகளையெல்லாம் இணைத்துக் கொண்டுதானே திமு கழகம் போராட்டம் நடத்தியது.

செயற்குழு தீர்மானத்திலேயே காவிரி டெல்டா பகுதிகளில் கனவாகிப் போன குறுவைச் சாகுபடி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களின் ஆரோக்கியமற்ற அணுகுமுறைகளினால் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டே வரும் நதி நீர்ப் பிரச்சினைகள், அரிசி விலை உயர்வு, மளிகைப் பொருள்கள்-காய்கறிகள் விலை உயர்வு,பேருந்துக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, இல்லாத மின்சாரத்திற்கு இதுவரை இல்லாத கழகச் செயல் வீரர்கள் கைது இதையெல்லாம் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதை ராமகிருஷ்ணன் மறைத்துவிட்டு அறிக்கை விட்டிருப்பது சரிதானா என்பதை அந்தக் கட்சியிலே உள்ள தோழர்களாவது எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் இத்தனை விளக்கங்களையும் தந்திருக்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has explained that DMK conducted jail bharo agitation not only for their partymen but also for the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X