23 தமிழக மீனவர்கள் இன்று விடுதலையாகலாம்: எஸ்.எம். கிருஷ்ணா நம்பிக்கை
டெல்லி: இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 23 பேர் இன்று விடுவிக்கப்படலாம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை தாக்கி சேதப்படுத்தி அவர்களை நிலை குலைய வைத்து பின்னர் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர் இலங்கை மீனவர்கள். 23 மீனவர்களை கைது செய்து அழைத்துச் சென்றதோடு அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து கொண்டு சென்றது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் வைத்து நேற்று மாலை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு எஸ்.எம். கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டக் கூடாது. மீனவர்கள் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றியிருந்தால் இது போன்ற நிலைமை வந்திருக்காது. கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்படுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications