For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது: விஜயகாந்த்

By Chakra
Google Oneindia Tamil News

Vijaykanth
சென்னை: தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது. சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா ஒரு மாதமாக கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

இன்று கோயம்பேட்டில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவரிடம், ‘சட்டசபையில் நீங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறீர்கள்...' என்று கேள்வியைத் தொடங்கியதுமே, அதற்கு விஜயகாந்த், ‘'எதிர்வரிசையில் இருப்பதால் நாங்கள் எதிர்க்கட்சி என்று சொல்லுகிறார் ஜெயலலிதா. பிரதான எதிர்க்கட்சி என்று ஜெயலலிதா சொல்ல வேண்டும். அவர் சொல்லவிலையென்றால் பத்திரிகைகளில் எழுதுங்கள்'' என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், என்னை ஒரு பிரதான எதிர்க்கட்சி தலைவராக முதல்வரும், அமைச்சர்களும் மதிக்கவில்லை. எனவே தான் மக்களை நேரில் சந்திக்கிறேன். மேலும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை மக்கள் பணி செய்வதற்காக ஒரு மாதம் தீவிர சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க உள்ளேன்.

திமுக நடத்தும் டெசோ மாநாடு தேவையற்றது. பிரபாகரன் உயிரோடு இருந்தபோது அவரை கருணாநிதி காப்பாற்றவில்லை. இன்று முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார்.

எனது ரிஷிவந்தியம் தொகுதியில் கால்வாய் தூர் வாருவதற்காக தமிழக அரசிடம் ரூ.14 கோடி கேட்டேன். ஆனால் தரவில்லை. சென்னையில் காலரா வாந்தி-பேதியால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆனால் இதை மேயர் ஏற்க மறுக்கிறார்.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது. நெல்லையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. ஆனால் ஜெயலலிதா ஒரு மாதமாக கொடநாட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அங்கிருந்து திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் ஒதுக்கீடு செய்வதாக அறிக்கை விடுகிறார். ஆனால் எந்த திட்டமும் செயல்பட்டதாக தெரியவில்லை.

ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தது எங்கள் விருப்பம். துணை ஜனாதிபதி தேர்தலையும் தேமுதிக புறக்கணிக்கும் என்றார் விஜய்காந்த்.

‘அதிமுக கூட்டணியில் இருந்தபோது சட்டசபைக்கு சென்றீர்களே? இப்போது ஏன் செல்லவில்லை?' என்ற கேள்விக்கு, அப்போது கூட்டணியில் இருந்தேன். அதனால் சட்டபைக்கு சென்றேன். இப்போது கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறேன். அதனால் செல்லவில்லை என்றார்.

''எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் நீங்கள் சட்டசபைக்கு செல்லாமல் இருக்கிறீர்களே?'' என்ற கேள்விக்கு, சட்டசபைக்கு சென்றால்தான் மக்கள் பிரச்சனையை பேசமுடியும் என்று இல்லை. சட்டசபைக்கு வெளியே இருந்துகொண்டும் மக்கள் பிரச்சனையை பேச முடியும். ஜெயலலிதா மட்டும் கொடநாட்டில் இருந்துகொண்டே அரசு வேலையை கவனிக்கிறார். எங்கிருந்தாலும் என் வேலையை செய்துகொண்டிருக்கிறேன் என்கிறார். அதே மாதிரிதான் நானும். அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா?'' என்றார் விஜய்காந்த்.

முன்னதாக எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு விஜயகாந்த் ரூ.50,000 நன்கொடை வழங்கினார்.

ரயில் விபத்து-நோக்கமே பாழாகி வருகிறது: விஜயகாந்த்

இந் நிலையில் விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ஆந்திர எல்லையில் விபத்துக்குள்ளானது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த ரயிலில் இணைக்கப்பட்ட பெட்டியில் திடீரென்று தீப்பிடித்ததால் ஒரு பெட்டியே எரிந்து நாசமாகியுள்ளது. இதில் இதுவரை 47 பேர் இறந்துள்ளதாகவும், பலர் தீக்காயம் அடைந்துள்ளதாகவும் அறிகிறேன்.

உண்மையான விவரங்கள் போகப் போகத்தான் தெரியும். இந்த விபத்துக்கு காரணம் மின் கசிவா? அல்லது சதி வேலையா? என்பது விசாரணையில்தான் தெரியவரும். இருப்பினும் ஊருக்கு போய் சேருவோம் என்று உயிரோடு பயணம் மேற்கொண்டவர்கள் பிணமாய் ஆகி விட்டார்கள் என்ற செய்தி அவரது உற்றார், உறவினர்களுக்கு எத்தகைய பேரதிர்ச்சியை தந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பொதுவாக போக்குவரத்து என்பது சீரான வேகத்தில் போதிய பாதுகாப்போடும், உரிய வசதிகளோடும் அமைய வேண்டும். இதனாலேயே மத்திய அரசு ரயில்வே துறையை தன்னுடைய பொறுப்பில் ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் அடிக்கடி ரயில் விபத்துக்களை பார்க்கிற பொழுது, எந்த நோக்கத்திற்காக இந்திய அரசு இந்த துறையை மேற்கொண்டு நடத்தி வருகிறதோ, அந்த நோக்கமே பாழாகி வருகிறது.

இந்திய அரசு முழு அக்கறையும், போதிய கவனமும் பயணிகளின் பாதுகாப்பில் செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை இழந்து துயருரும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறேன்.

மத்திய அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் வேலையும், போதிய இழப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிகிறேன் என்று கூறியுள்ளார்.

English summary
The TESO conference planned by DMK chief Karunanidhi is unnecessory, said DMDK leader Vijaykanth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X