For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கும் அதிமுக ஆட்சி : கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: ஆடிப்பெருக்கு கொண்டாடக் கூட மேட்டூர் அணை திறந்து விடாததால் டெல்டா மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: அரசு அலுவலர்களுக்காக தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைவிட சிறந்த முறையில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வருவதாகச் சொல்லப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்னவாயிற்று?

பதில்: தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை அவசர மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள முடியும். அதற்காக ஒவ்வொரு அரசு அலுவலரிடமிருந்தும் தி.மு.க. ஆட்சியில் மாதந்தோறும் 25 ரூபாய் சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள். தற்போது ஜெயலலிதா ஆட்சியில் அரசு அலுவலர்கள் நான்கு லட்சம் ரூபாய் வரை அவசர மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள முடியும். ஆனால் அவர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் ரூ.150 பிடித்துக்கொள்ள 26.6.2012 அன்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் 2 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெறுவதை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருப்பது கழக ஆட்சியில் செய்ததைவிட வரவேற்புக்குரியது. ஆனால் அதற்காக அனைத்து அரசு அலுவலர்களும் மாதந்தோறும் 150 ரூபாய் தர வேண்டும் என்பது அநியாயம் அல்லவா?.

தமிழக அரசில் மொத்தம் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்கள் உள்ளார்கள். தலா 150 ரூபாய் வீதம் மொத்த அரசு அலுவலர்களிடமிருந்தும் மாதம் ஒன்றுக்கு அரசு வசூலிக்கும் தொகை 1,800 லட்சம் ரூபாயாகும். மாதம் ஒன்றுக்கு சராசரியாக 100 அரசு அலுவலர்களுக்கு, அரசு 4 லட்சம் ரூபாய் வீதம் உதவி அளித்தால் கூட 400 லட்சம் ரூபாய்தான் அரசுக்குச் செலவாகும். எனவே அரசாங்கம் உண்மையிலேயே அரசு அலுவலர்களுக்கு உதவி செய்கிறதா? பணத்தைப் பிடுங்குகிறதா? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

கேள்வி: ஆகஸ்டு 2ம் தேதி ஆகியும் மேட்டூர் அணை திறக்கப்படவில்லையே?

பதில்: மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, ஆடிப்பெருக்கு கொண்டாடக்கூட மேட்டூர் அணை திறந்துவிடப்படாமல் டெல்டா மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

கேள்வி: மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் தேர்விலும் அ.தி.மு.க. அரசு தாமதம் செய்கிறதாமே?

பதில்: 2.1.2012-ம் தேதியோடு ஏற்கனவே தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவராக தி.மு.க. ஆட்சியில் இருந்த கபிலன் பதவிக்காலம் முடிந்துவிட்டது. 3.1.2012 அன்றே புதிய தலைவர் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை யாரையும் நியமிக்கவில்லை. கடும் மின் பற்றாக்குறை, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் தமிழகம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மின் துறையை ஒழுங்குபடுத்த வேண்டிய ஆணையத் தலைவர் பதவிக்கு கடந்த ஆறு மாத காலமாக யாரையும் நியமிக்கப்படாத நிலை உள்ளது.

கேள்வி: சிவகங்கை நகராட்சியில் 20 பணிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில், ஏற்கனவே நடந்த பணிகளுக்கே மீண்டும் டெண்டர் கோரிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாமே?

பதில்: சிவகங்கை நகராட்சியில் 20 பணிகளுக்கான டெண்டர் 27.7.2012 அன்று நடக்குமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் சில பணிகள் ஏற்கனவே முடிந்து, அவற்றுக்கே மீண்டும் டெண்டர் நடப்பதாகவும் சோனைமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ஏற்கனவே முடிந்த பணிகளுக்கு உதாரணமாக சிமெண்ட் தளம் அமைத்தல், வாரச்சந்தை அமைத்தல், பள்ளங்களை சீரமைத்தல், மின் விளக்கு அமைத்தல் போன்ற பணிகளில் வேலைகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. உயர் நீதிமன்றத்தில் விசாரணை வந்தால் பிரச்சனை வரும் என்று கருதி, ஏற்கனவே நிறுவப்பட்ட 13 மின் கம்பங்களையெல்லாம் இரவோடு இரவாக அகற்றிவிட்டார்களாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மேலும் விலைவாசி குறித்து கேள்விக்கு, விலைவாசி குறித்து கவலைப்படுவோர் யார்? மக்கள் தான் சிரமப்படுகிறார்கள். சென்னை, மொத்த சந்தையில், சர்க்கரை விலை ஒரே மாதத்தில் மூட்டைக்கு 650 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாம். அதேபோல் பருப்பு மற்றும் எண்ணெய் வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாம். கடந்த மாதம், 2,950 ரூபாய்க்கு விற்ற 100 கிலோ சர்க்கரை மூட்டை தற்போது 3,600 ரூபாய்க்கு விற்பனையாகிறதாம். கடந்த மாதம் சில்லரை யில் ஒரு கிலோ 31 ரூபாய்க்கு விற்றது, சில நாட்களாக, 38 ரூபாய் வரை விற்கப்படுகிறதாம். இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ கேளாக் காதினராய் உறங்குகிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi has said, ADMK government is not bothered about the price rise and not hearing the peoples pains
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X