For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடைக் கற்கள் உண்டெனிலும் தடந்தோள்கள் உண்டு - டெசோ தடை குறித்து கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: போலீசார் அனுமதி மறுத்தால், டெசோ மாநாடு நடைபெறுமா? என்பதற்கு, 'தடைக் கற்கள் உண்டெனிலும் தடந்தோள்கள் உண்டு என்று கருணாநிதி பதில் அளித்தார்.

மேலும் ஈழம் என்பது கற்பனை சொல் அல்ல; வரலாற்றில் இடம் பெற்ற ஒரு சொல் என்றும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

திட்டமிட்டபடி மாநாடு நடக்குமா?

கேள்வி: டெசோ மாநாட்டிற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில், தமிழக அரசு மாநாட்டிற்கு அனுமதி வழங்கிடக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள். ஆனால் நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். இந்த நிலையில் டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா?

பதில்: நடக்கும்.

ஈழம் என்ற வார்த்தை

கேள்வி: மத்திய அரசு "ஈழம்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களாமே?

பதில்: மத்திய அரசிடம் இருந்து அப்படி எந்த ஆணையும் அதிகாரபூர்வமாக உள்துறை அமைச்சரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ எதுவும் வரவில்லை. "ஈழம்'' என்று சொல்லக் கூடாது என்று யாரோ சொன்னதாக ஒரு சில பத்திரிகைகளில் செய்தி வந்து இருக்கிறது. அது உங்களுக்கு பெரிய தலைப்பாக ஆகியுள்ளது.

வரலாற்றில் இடம் பெற்ற சொல்

"ஈழம்'' என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களிலேயே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெற்று இருக்கிறது. "பட்டினப்பாலை'' என்ற இலக்கிய நூலில், "ஈழத்து உணவும், காழகத் தாக்கமும்'' என்று பூம்புகார் கடற்கரையில் வந்து நின்ற படகுகளில், கப்பல்களில் இறக்குமதி, ஏற்றுமதிக்காக வந்த பொருள்கள் என்ன என்பதைக் குறிக்க "ஈழத்து உணவும் காழகத் தாக்கமும்'' என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. எனவே "ஈழம்'' என்பது இல்லாத சொல் அல்ல, கற்பனை சொல் அல்ல. வரலாற்றிலேயே இடம் பெற்ற ஒரு சொல்.

காங்கிரஸ் தலைவர்கள்

கேள்வி: "டெசோ'' மாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன?

பதில்: அவைகளை எல்லாம் இப்போதே சொன்னால், மாநாட்டிற்கு பிறகு என்ன அவசியம்?

கேள்வி: காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்களே?

பதில்: அது அவர்களுடைய கருத்து.

விசா அனுமதி

கேள்வி: அவர்கள் சொன்னதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- நான் அதைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை. அவர்கள் அப்படி சொல்வார்கள் என்று தான் நாங்களும் நினைத்தோம்.

கேள்வி: அழைப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா?

பதில்: அழைப்பு எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் அழைப்பு கொடுத்து, விடுத்த வேண்டுகோளின் காரணமாகத்தான், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதின் காரணமாகத் தான் இங்கே வர விரும்பிய பல பேருக்கு விசா போன்ற அனுமதிகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

போலீஸ் கமிஷனர்

கேள்வி: "டெசோ'' மாநாட்டிற்காக போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: அமைதியான முறையில் மாநாடு நடக்க காவல் துறைக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை அவர்கள் தட்டிக் கழிக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். யாருடைய உத்தரவுக்காகவோ, யாருடைய கட்டளைக்காகவோ, யாருடைய கருத்துகளுக்காகவோ தேவையில்லாமல் ஒரு அவப்பெயரை அவர்கள் தேடிக் கொள்ள மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: மறுக்கும் பட்சத்தில் "டெசோ'' மாநாடு நடக்குமா?

பதில்: "தடைக் கற்கள் உண்டெனினும், தடந்தோள்கள் உண்டு'' என்று எங்கள் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக்கிறார்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

English summary
DMK president M Karunanidhi told that the TESO conference would be happened as per the plans, even the police denied permissions.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X