For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகன் இறந்ததால் விஷம் குடித்ததில் தாய் சாவு, பிழைத்த தந்தை, மகள் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

திருவள்ளூர்: பாசப் போராட்டத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்தவர் திருப்பதி (40). அவரது மனைவி குமாரி (38). அவர்களுக்கு குணசுந்தரி (18) என்ற மகளும், குணசுந்தரம் (16) என்ற மகனும் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி தனது குடும்பத்தோடு திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் ஆதிவாசி காலனியில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். குழந்தைகளை படிக்க வைக்க அவர் மிகவும் கடினமாக உழைத்து வந்தார்.

குணசுந்தரி சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்தார். குணசுந்தரம் தண்ணீர்குளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்தார். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்த குணசுந்தரம் சுதந்திர தினத்தன்று நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கையால் பரிசு பெற்றார்.

கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி அவர் வீட்டுக்கு அருகில் இருந்த ஏரிக்கு குளிக்கச் சென்றார். நீச்சல் தெரியாத அவர் நீரில் மூழ்கி இறந்தார். இதனால் அவரது குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்தனர். குணசுந்தரத்தின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து கடந்த 15ம் தேதி அன்று டீயில் தூக்க மாத்திரைகளை கலந்து குடித்தனர்.

அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கையில் அங்கு வந்த உறவினர்கள் அவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமாரி சிகிச்சை பலனின்றி கடந்த 16ம் தேதி இறந்தார். மோசமான நிலையில் இருந்த திருப்பதியும், குணசுந்தரியும் சென்னை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்த அவர்கள் வீடு திரும்பினர்.

குணசுந்தரமும், குமாரியும் இறந்ததை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் எப்பொழுதும் கண்ணீருடன் இருந்தனர். இதையடுத்து இடம் மாறினால் மனம் மாறும் என்று ஊர் மக்கள் அவர்களை ஈரோட்டுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 10 நாட்களாக ஈரோட்டில் இருந்த அவர்கள் இருவரும் சோகத்தில் இருந்து மீளவேயில்லை.

இந்நிலையில் நேற்று காலை திருப்பதி மகளை அழைத்துக் கொண்டு ரயிலில் திருவள்ளூர் வந்தார். பின்னர் அங்கிருந்து மின்சார ரயிலில் காலை 6 மணிக்கு புட்லூர் ரயில் நிலையத்தில் இறங்கினார். அங்கு பிளாட்பாரத்தில் உடைமைகள், அடையாள அட்டைகளை விட்டுவிட்டு தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்தனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தந்தையும், மகளும் இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார் அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தண்ணீர்குளம் மக்கள் தந்தை, மகளின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். பிரியமானவர்களை விட்டு வாழ விரும்பாமல் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது தண்ணீர்குளத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

English summary
A +1 student got drowned near Tiruvallur. Unable to bear his loss, his father, mother and sister died one after another.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X