For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகம் கேட்பது 2 டிஎம்சி.. கர்நாடகம் தருவது 1 டிஎம்சிக்கும் குறைவான காவிரி நீர்!

By Chakra
Google Oneindia Tamil News

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13 நாட்களில் 3.64 அடி அதிகரித்துள்ளது. இதையடுத்து, நீர்மட்டம் 80 அடியை நெருங்கி வருகிறது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி வருவதையடுத்து அங்கிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ம் தேதி மாலை 76.28 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (செப்டம்பர் 10) மாலை 79.92 அடியாக உயர்ந்தது. 13 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3.64 அடி உயர்ந்துள்ளது.

தமிழகத்துக்கு கூடுதலாக வினாடிக்கு 2,500 கன அடி நீர்:

இந் நிலையில் காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்குத் தற்போது கிடைத்து வரும் வினாடிக்கு 7,500 கன அடி நீருடன் கூடுதலாக நாள்தோறும் வினாடிக்கு 2,500 கன அடி நீரை செப்டம்பர் 12 முதல் 20ம் தேதி வரை திறந்து விட உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகம் ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடிக்காக காவிரி நதியில் இருந்து தினமும் 2 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதன் மீதான விசாரணை நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகுர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் திவான், ஏற்கெனவே காவிரியில் இருந்து நாள்தோறும் வினாடிக்கு 7,500 கன அடி நீர் தமிழகத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் தலைமையிலான ஆணையம் கூடுவதற்கு எட்டு நாள்களே உள்ளன. இந்த நிலையில், தமிழக அரசு மனு மீது நீதிமன்றம் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்றார்.

ஆனால், தமிழக அரசின் வழக்கறிஞர் தொடர்ந்து தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை வலியுறுத்தியதோடு, கூடுதல் நீரை விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

இதையடுத்து கர்நாடக அரசு வழக்கறிஞர், நல்லெண்ண அடிப்படையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக வினாடிக்கு 2,500 கன அடி நீரை செப்டம்பர் 12ம் தேதி முதல் 20ம் தேதிவரைத் திறந்து விடுகிறோம் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் 12ம் தேதி முதல் 20ம் தேதிவரை நாள்தோறும் வினாடிக்கு 10,000 கன அடி நீரைத் கர்நாடகம் தர வேண்டும் என்றனர்.

அதே நேரத்தில், 20ம் தேதி வரையிலான இடைக்கால ஏற்பாடுதான் இது என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள், மத்திய நதி நீர் ஆணையம் கூட்டப்படவிட்டாலோ அல்லது, கூடியும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாவிட்டாலோ, இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், கர்நாடகத்தில் பில்லிக்குண்டில் இருந்து தமிழகத்துக்கு வறட்சிக் காலத்தில் இதுவரை திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு பற்றிய அறிக்கையை திங்கட்கிழமைக்குள் (நேற்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு சார்பில் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தப்பட்டது. ஆனால், வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தற்போது சம்மதம் தெரிவித்து இருக்கிறது. ஆனால், இந்த தண்ணீர் அளவை கணக்கிட்டால் 1 டி.எம்.சிக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In a goodwill gesture, the Karnataka government on Monday agreed before the Supreme Court to release 10,000 cusecs of water from Cauvery river to Tamil Nadu till September 20. In wake of Karnataka’s gesture, a bench of justices D.K. Jain and Madan Lokur refused to pass any order on Tamil Nadu’s plea for direction to its neighbouring state to release 2 TMC of water. The bench hoped the Cauvery River Authority (CRA) headed by the Prime Minister would be able to find an “amicable” solution to the river water dispute. The court also disposed of Karnataka’s plea, saying if it is kept pending, the authority might not find a solution to the dispute and will be ultimately left to it to decide it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X