பெரியாரின் பாராட்டு மனதில் இருக்கையில் சிலரின் அநாகரிகப் பேச்சு எப்படி பெரிதாகப்படும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karuananidhi
சென்னை: கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத்தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்ததில் சிறந்தவர் என்றெல்லாம் பெரியார் தன்னைப் பாராட்டிய சொற்கள் கல் மேல் எழுதப்பட்ட மணிமொழிகளாக தன் மனதிலே தோன்றும்போது சிலர் தன்னைப் பற்றியும், தன் தன்மானத்தைப் பற்றியும் அநாகரிகமாக பேசுவது எப்படி தனக்குப் பெரிதாக தோன்றும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இன்று தந்தை பெரியாரின் 134ம் ஆண்டு பிறந்த நாள் விழா. நேற்றைய தினம் விழுப்புரத்தில் அண்ணனின் 104ம் ஆண்டு பிறந்த நாள் விழா-பெரியார் பிறந்த நாள் விழா-கழகம் பிறந்த நாள் விழா என தமிழர் வரலாற்றில் மிகச் சிறப்புக்குரிய மூன்று நிகழ்வுகளையும் ஆண்டு தோறும் நாம் முப்பெரும் விழா கொண்டாடுவதைப்போல; இந்த ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்று முடிந்த மகிழ்ச்சியோடு அமர்ந்துள்ளேன்.

விழாவினை இரவு 10.15 மணியளவில் முடித்துவிட்டு, சென்னை புறப்பட்டோம். வழியில் திண்டிவனத்தில் 11 மணியளவில் இரவு சாப்பாடு என்ற ஒன்றை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விடியற்காலை 3 மணிக்குத்தான் சென்னை திரும்பி உறங்கச் சென்றேன். அந்த எண்ணங்களோடு காலையில் எழுந்தவுடன் நாளை பெரியாரின் 134வது பிறந்த நாள் விழாவினையொட்டி, அவரோடு பழகிய நிகழ்வுகள் எல்லாம் என் நினைவுகளில் அலை அலையாக எழுந்தது.

புதுவையில் பெரியார், அண்ணா, தளபதி அழகிரிசாமி போன்ற தலைவர்களையெல்லாம் அழைத்து மாநாடு ஒன்றினை நடத்தினோம். ஆனால் எங்களுக்கு எதிர்ப்பாளர்கள் "திராவிடத் தலைவர்களே, திரும்பிப் போங்கள்'' என்று கூச்சலிட்டனர். "வா என்றழைப்பது தான் தமிழர் பண்பு, போ என்று கூற காரணம் யாதோ என்று தன் பேச்சைத் தொடங்கி அண்ணா அரியதோர் உரையாற்றினார். அந்த உரையினைத் தொடர்ந்து கழகக் கொடியை ஏற்றி வைத்தார். கொடி ஏற்றப்பட்ட அடுத்த வினாடியே கொடி மரத்தை வீழ்த்திவிட்டார்கள் எதிரிகள்! அவ்வளவு தான், அமளி தொடங்கிவிட்டது. பெரியாரையும், அண்ணாவையும் பத்திரமாக ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, நானும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும், காஞ்சி கல்யாண சுந்தரமும் நடந்து வந்து கொண்டிருந்தோம். ஒரு பெருங்கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டது. அந்தக் குழப்பத்தில் ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து விட்டோம். அடி, அடி, அடி என்று அடித்தார்கள்.

என் மீது விழுந்த அடிகள் சிலவற்றை திருவாரூர் அண்ணன் ராசகோபால் வாங்கிக் கொண்டார். என் சட்டையில் மாட்டப்பட்டிருந்த "பெரியார் பேட்ஜை'' பறிப்பதற்காக ஒருவன் என் சட்டையைக் கிழித்தான். நான் அந்த பேட்ஜை விடாமல் என் கையால் பற்றியவாறு ஓட முயற்சித்தேன். அன்றைக்கு என் சட்டையோடு சேர்த்து பெரியாரின் பேட்ஜை பிடித்திருந்த நான் இன்று வரை அந்த நினைவுகளையும் விடாமல் பிடித்துக் கொண்டு தான் உள்ளேன். அந்தப் பெரியாருக்குத் தான் இன்று பிறந்த நாள் விழா.

அடித்தவர்கள் களைத்துப் போய், நானும் செத்திருப்பேன் என்று எண்ணிக் கொண்டு சாக்கடையோரத்தில் என்னைத் தூக்கி வீசிவிட்டு போய் விட்டார்கள். "ஐயோ, யார் பெற்ற பிள்ளையோ? இப்படிச் சாகக் கிடக்கிறதே?'' என்று சொல்லிக் கொண்டே ஒரு மூதாட்டி தன் வீட்டிற்குள் என்னைக் கொண்டு போய் காப்பாற்றினார். என் நிலைமை என்னவாயிற்று என்று தெரியாமல் பெரியாரும், அண்ணாவும் ஊர் முழுவதும் தேடச் சொல்லி பிறகு விடியற்காலை 4 மணியளவில் என்னைக் கண்டுபிடித்து, மீண்டும் கலகக்காரர்கள் தாக்குவார்களோ என்றஞ்சி, கைலி, நீண்ட ஜிப்பா, தலையில் குல்லாய் அணிவித்து பெரியாரிடம் அழைத்துச் சென்றார்கள்.

என்னைக் கண்டதும், அதுவரை கண்ணுறங்காமல் காத்திருந்த பெரியார், என்னைத் தழுவிக் கொண்டு "சுகமாக இருக்கிறாயா?'' என்று தழுதழுத்தக் குரலில் கேட்டார். அவரே என் காயங்களுக்கெல்லாம் மருந்திட்டார். என்னுடன் ஈரோட்டுக்கு வா, போகலாம் என்று ஆணையிட்டார்.

24-12-1973 அன்று தான் பெரியார், தமிழகத்தையும், நம்மையும் தவிக்க விட்டுவிட்டு மறைந்தார். பெரியார் மறைந்தாலும், அவர் நமக்கு அளித்த போதனைகள் மறையவே இல்லை. அண்ணா முதல்வராக இருந்த போதே பெரியாருக்கு அளிக்கும் முதல் காணிக்கையாக சுயமரியாதை திருமணச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அண்ணா மறைந்த பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற நான் பெரியார் மனதில் முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த மற்றொரு கொள்கையான அர்ச்சகர் சட்டத்தைக் கொண்டு வந்து 2-12-1970 அன்று நிறைவேற்றினோம். பெரியாரோடு பழகி, அவரின் கொள்கைகளையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டு வந்த காரணத்தால்தான், தந்தை பெரியார் "பொது மக்களுக்காக பொதுத் தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல், பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களை பாராட்ட, பெருமைப்படுத்த பொதுமக்கள் முயற்சிப்பது இயற்கையே ஆகும்.

கலைஞர் கருணாநிதி விஷயத்தில் பாராட்டத்தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன. கலைஞர் தனது பள்ளி மாணவப் பருவத்தில் இருந்து பொதுத்தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக்கிறார். இவ்வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சியை ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து அந்தக் கட்சியை நல்ல வண்ணம் உருவாக்கி அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கிய முக்கியஸ்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார். கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத்தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்ததில் சிறந்தவர்'' என்றெல்லாம் என்னைப் பாராட்டிய சொற்கள் கல் மேல் எழுதப்பட்ட மணிமொழிகளாக என் மனதிலே தோன்றும்போது சிலர் என்னைப் பற்றியும், என் தன்மானத்தைப் பற்றியும் அநாகரிகமாக பேசுவது எப்படி எனக்குப் பெரிதாக தோன்றும். அதை நினையுங்கள், இதை மறந்துவிடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+