பாஜக, இடதுசாரிகளி்ன் பாரத் பந்த்: புறக்கணித்த ஜெயா, மமதா, மாயா - ஆதரித்த திமுக!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Bharath Bandh
சென்னை: பாஜக, இடதுசாரிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் அழைப்பை இந்தியாவின் முக்கியக் கட்சிகளும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளுமான அதிமுக, திரினமூல் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை நிராகரித்து விட்டன, ஏற்கவில்லை. அதேசமயம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக இந்த பந்த்தை ஆதரித்துள்ளன.

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது ஆகிய மத்திய அரசின் சமீபத்திய முடிவுகளை கடுமையாக கண்டித்து பாஜக, இடதுசாரிகள் ஆகியவை இன்று பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுத்தன.

வழக்கமாக இதுபோன்ற பந்த் அறிவிப்புகளுக்கு பெரும்பாலும் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆதரவு தருவது வழக்கம். ஆனால் இந்த பாரத் பந்த்துக்கு வித்தியாசமான முறையில் ஆதரவும், எதிர்ப்பும் வந்து சேர்ந்துள்ளது.

பந்த்தில் பங்கேற்காமல் பம்மிய அதிமுக

பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ள முக்கியக் கட்சி அதிமுக. பாஜக தலைவர்களுடன் நல்லுறவோடு இருந்து வரும் ஜெயலலிதா, நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் கிட்டத்தட்ட இணைந்தே தனது கட்சியை செயல்படுத்தி வருகிறார். பல முக்கியப் பிரச்சினைகளில் குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவுடன் இணைந்தே செயல்பட்டு வருகிறது அதிமுக.

ஆனால் பாஜக அறிவித்த இந்த பாரத் பந்த்தில் ஜெயலலிதா எந்தக் கருத்தையும் இந்த நொடி வரை தெரிவிக்கவில்லை. பந்த்தை ஆதரித்தோ அல்லது அதிருப்தி தெரிவித்தோ அவர் எதையும் பேசவில்லை.

ஆனால் பந்த் நாளன்று தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக ஜெயலலிதா அரசு அறிவித்தது. ஆனால் கடைசி நேரத்தில் திமுக, இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்ததால் அந்த அறிவிப்பையும் கூட ரத்து செய்து விட்டது தமிழக அரசு.

பந்த்தில் அதிமுக பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மமதாவும் ஒதுங்கினார்

டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை கடுமையாக எதிர்த்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் விலகுவதாக மமதா பானர்ஜி அறிவித்தபோதே, அவரும் பந்த்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பந்த் அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, இதனால் ஒரு பலனும் ஏற்படாது என்று தடாலடியாக கூறி விட்டார் மமதா. இதனால் பாஜகவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் வாய்ப்பு பறி போய் விட்டது.

ஆனால் பாஜக நடத்தும் பந்த்தில் குறிப்பாக இடதுசாரிகள் ஆதரவு தரும் பந்த்தில் பங்கேற்க மமதா விரும்பவில்லை என்பதே உண்மையாகும். இவர்களோடு சேர்ந்தால் எதிர்காலத்தில் பல குழப்பங்களை தான் சந்திக்க நேரிடும் என்பதால்தான் இந்த பந்த்தை அவர் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த பந்த் முடிந்த பிறகு திரினமூல் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து சுயேச்சையாக ஒரு பிரமாண்ட போராட்டத்தை அவர் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாயாவதியும் பங்கேற்கவில்லை

இந்திய அரசியலின் இன்னொரு முக்கிய அரசியல் பெண் தலைவரான மாயாவதியும் கூட இந்த பந்த்தில் கலந்து கொள்ளவில்லை. தன்னைத் தேடி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆதரவு நாடி வாசல் படியில் உட்கார்ந்திருக்கும் நிலையில் பந்த்துக்கு ஆதரவு தருவதை மாயாவதி விரும்பவில்லை என்று தெரிகிறது.

பந்த்துக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்பதை மாயாவதி தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பந்த்தில் அவரது கட்சி பங்கேற்காமல் அழைப்பை நிராகரித்து விட்டது.

திமுகவின் திடீர் ஆர்வம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இதுவரை 3வது முக்கியக் கட்சியாக இருந்து வந்த திமுக திரினமூ்லின் விலகலால் மேலும் ஒரு படி முன்னேறி 2வது முக்கியக் கட்சியாக மாறியுள்ளது.

ஆனால் காங்கிரஸ் மட்டுமல்லாமல் திமுகவினரே கூட எதிர்பார்க்காத வகையில் பாரத் பந்த்தில் பங்கேற்பதாக திமுக தலைவர் அறிவித்தபோது அனைவருமே ஆச்சரியப்பட்டனர். சரி, மமதா பாணியில் திமுகவும் கூட்டணியை விட்டு விலகப் போகிறது போல என்ற எதிர்பார்ப்புகளும், செய்திகளும் வெளியாக ஆரம்பித்தன.

உடனே சுதாரித்த திமுக தலைமை, டிகேஎஸ் இளங்கோவனை விட்டு, கூட்டணியை விட்டு விலகுவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி யோசிப்பதாக வந்துள்ள செய்திகள் கற்பனையானவை. கூட்டணியை விட்டு விலகுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மிகவும் கஷ்டமானது என்று சமாளிப்பாக பேசி வைத்தார்.

ஆனால் பாஜக, இடதுசாரிகள் விடுத்துள்ள பந்த் அழைப்பை ஏற்று திமுகவும் அதில் கலந்து கொண்டது காங்கிரஸுக்கு நிச்சயம் ஒரு எச்சரிக்கையாகவே அமையும் என்று கருதப்படுகிறது.

மதிமுக, பாமகவும் பங்கேற்கவில்லை

இன்றைய பந்த்தில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான மதிமுக, பாமக ஆகியவையும் கூட கலந்து கொள்ளவில்லை. எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தவில்லை.

மொத்தத்தில் முக்கியத் தலைவர்களின் இந்த திடீர் கொள்கை மாற்றங்கள் எதிர்காலத்தில் தேசிய அளவில் புதிய கூட்டணிகளுக்கான அச்சாரமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Prominent political leaders of the country, Jayalalitha, Mayawati and Mamata Banerjee have boycotted the Bharath Bandh sponsored by BJP and Left parties. But a key UPA ally DMK has participated in the bandh.
Please Wait while comments are loading...