For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி: கூவிக்கூவி ஏலம் போட்டும் கிடைத்தது என்ன?- கி.வீரமணி

Google Oneindia Tamil News

சென்னை: 2ஜி அலைக்கற்றையை கூவிக்கூவி ஏலம்போட்டும் அரசுக்கு கிடைத்தது என்ன என்று தி.க. தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்று நாட்டின் குக்கிராமங்களில் கூட தொலைத்தொடர்பு வசதியை ஏழை, எளியவர்கள் கூட பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளித்த கொள்கை முடிவினை மிக வேகமாகச் செயல்படுத்தியும், திமுகவுக்கும் மத்திய அமைச்சரவைக்கும் பெருமை சேர்த்தவர் ஆ. ராசா. அத்துறையில் நிலவிய சில பெரு முதலாளிகளின் ஏகபோகத்தை உடைத்து, புதிதாக நுழைவோருக்கும் வாய்ப்பு என்பதை சிறப்பான வகையில் செயல்படுத்தியதால் தொலைபேசிக் கட்டணம் 30 காசுகளுக்குள்- உலகில் எங்கும் இவ்வளவு மலிவான கட்டணம் இல்லை என்ற சாதனைச் சரித்திரத்தை செய்தவர் அவர்!

அது மட்டுமல்ல இராணுவத் துறையினர் பயன்படுத்தாத அலைக்கற்றையையும் போராடி வாங்கி அதனை சாமான்ய மக்கள் பயன்படுத்தும் வகையில் மலிவுப் பதிப்பாக்கி, நுகர்வோருக்கு மிகப் பெரும் பயன் விளைவித்தவரும் அவரே. அதில் கூட முதலில் வருபவருக்கு முன்னுரிமை (First Come First served) என்ற கொள்கை கூட இவரால் உருவாக்கப்பட்டதல்ல.

ஏற்கனவே ஆண்ட பாஜக அரசினரால் உருவாக்கப்பட்டதாகும். இதை பாஜகவால் மறுக்க இயலாது. ஆ. ராசா இந்தக் கொள்கை முடிவினை சிறப்பான வகையில் செயல்படுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், குறிப்பாக திமுகவுக்கும் பெருமை சேர்த்தார்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெரு முதலாளிகள் சந்தர்ப்பம் தேடி காத்திருந்தனர். அமைச்சர் ராசாவின் சாதனை கண்டு சிலர் பொறாமையும் பட்டனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவனுக்கு இவ்வளவு பெருமையா? உயர் ஜாதி தலைவர்கள், ஊடகங்களுக்கும், சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் - எதிர்க்கட்சியினருக்கு அரசியல் நடத்த ஏதாவது தீனியைத் தேடினர். பத்திரிக்கை நடத்தும் பல பெருமுதலாளிகள் தொலை காட்சிகளையும் தங்கள் கையில் வைத்து, செய்திகளை மக்களுக்குத் தருவதற்குப் பதிலாக, செய்திகளை அவர்களே உருவாக்கித் தருவதும், இல்லாத ஒரு பிரச்சினையை பூதாகரமாக்கி ஊதி, குற்றம் சுமத்திடுவதோடு, அவ்வழக்கின் விசாரணையையும் அவாளே நடத்தியும் தீர்ப்பும் கூட எழுதிடும் போக்கும் அண்மைக் காலத்தில் மிகவும் மலிந்து வருகின்றன.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அமைச்சர் ராசாவைக் குற்றம் சுமத்தி, இதனால் ரூபாய் ரூ. 1.76 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டுவிட்டது என்ற ஒரு ஆதாரமில்லாத, ஒரு புகாரை சி.ஏ.ஜி. என ஒரு உயர் ஜாதி பார்ப்பனர் தணிக்கைக் குறிப்பில் எழுதியதோடு, அது அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே அச்செய்தியை (மீடியாவில்) ஊடகங்களில் கசிய விட்டு மிகப் பெரிய அளவில் பிரச்சாரத்தைச் செய்தனர்.

இதனைத் திட்டவட்டமாக மறுத்து, இது கொள்கை முடிவு, இதில் எந்தவித நடைமுறை இழப்பும் ஏற்படவில்லை. இந்த சி.ஏ.ஜி. தணிக்கை அதிகாரி கூறுவது அனுமான இழப்பே தவிர உண்மையான இழப்பு அல்ல. (Only Presumptive Loss - No actual Loss) உண்மையான இழப்பு பூஜ்யமே. (இப்படி கபில்சி பல் போன்ற அமைச்சர் கூட கூறியிருக்கும் நிலையிலும்) துணிந்து எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், பிளாக்மெயில் அரசியல் பேரக்காரர்கள் கூற்றுக்கள் என்பதையெல்லாம், திராணியுடனும், துணிவுடனும் மேற்கொண்டு, தமது அமைச்சரவையும், அதன் கூட்டணிக் கட்சி அமைச்சரவையும் பாதுகாப்பதில் உறுதியானதொரு நிலைப்பாட்டினை எடுக்கத் தவறி, கரடி வந்தவுடன் மரத்தில் ஏறி தன்னை மட்டும் காப்பாற்றிய இரு நண்பர்களில் ஒருவனைப் போல் மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் பிரச்சாரப் பெரும் புயலைச் சரியாகச் சந்திக்கத் தவறியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
அது நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்குழு முடிவைக்கூட, துவக்கத்திலேயே துணிந்து சரியான நடவடிக்கையை எடுக்கத் தவறி, உச்ச நீதிமன்றத்தின் ஆணை என்பதையே சாக்காக வைத்து ராசாவை பதவி விலக வைக்க திமுகவை வற்புறுத்தியது. திமுகவும் ஏற்றது; பிறகு அவரைக் கைது செய்து, ஓராண்டுக்கு மேல் டெல்லி சிறையில் வைத்தது. அதையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் உண்மையான தொடர்பு இல்லாத நிலையிலும் கூட கனிமொழியையும், சரத்குமார் என்பவரையும் கூட கைது செய்யப்பட்டு அவர்கள் திகார் சிறையில் பல மாதங்கள் கழித்தே ஜாமீனில் வந்தனர்.

வழக்குகள் நடைபெறுவதால் அதனுள் புக விரும்பவில்லை. பல்வேறு அம்சங்கள் முரண்பட்ட நியாய விரோத நிலைப்பாடாக இருந்த போதிலும் கூட
ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதையே ஏதோ மோசடி, சதியென்று கூறிய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் முறைகளையொட்டி மீண்டும் ஏலம் விடப்பட்டதே இரண்டு நாள்களுக்கு முன் - அதில் அரசுக்கு அதிக அளவில் லாபம் வரும் என்று பிரச்சாரம் ஊடகங்களால் செய்யப்பட்டதே. கிடைத்ததா?

கூவிக்கூவி ஏலம் போட்டும், கிடைத்தது 9,400 கோடி ரூபாய்கள் தான். இதையும்கூட வரவு என்று சொல்லிவிட முடியாது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்படாத நிறுவனங்கள், தாங்கள் ஏற்கனவே உரிமம் பெற்றபோது செலுத்திய முன் பணத்தை இப்போது கழித்துக் கொள்ள முடியும். ஆகவே இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் சுமார் ரூபாய் 5,000 கோடி தான்.

ஏலப்பாட்டுப் பாடி, ரூ. 1.76 லட்சம் கோடி நட்டம் என்ற இமாலயப் புளுகினைக் கட்டவிழ்த்துவிட்டு, காலந்தள்ளிய ஊடகங்களும் உத்தம ஊழல் ஒழிப்பு அவதாரங்களும் இப்போது, ஏலம் எடுப்போர் கூட்டுச் சேர்ந்து சதி செய்ததால் (Cartel) இப்படி ஏலம் குறைந்திருக்கலாம் என்று நாகூசாமல் மறுபடியும் பேசுகிறார்கள். முன்பே ஏலம் விட்டிருந்தால், ஏலம் எடுப்போர் கூட்டுச் சேர்ந்து குறைந்த ஏலம் கோராமல் இருந்திருக்க மாட்டார்களா? என்னே மழுப்பல்கள். எனவே சதி அல்ல இதன் பின்னணி சாதி! சாதி!! சாதி!!! திமுக வெறுப்பு-அவ்வளவு தான்!

நீதிமன்றங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது; தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளே உள்ளனவே! அதை அலட்சியம் செய்யலாமா?

எனவே 2ஜி அலைக்கற்றை வழக்கும் அது சம்பந்தமான பல்வேறு நடவடிக்கைகளும் மீண்டும் மத்திய அரசின் மறுபரிசீலனைக்குட்படுத்துவதே தவறிய நியாயத்தை, வழங்கிட வாய்ப்பை ஏற்படுத்தும்.

இது பற்றி நடுநிலையாளர்கள், நியாய உணர்வாளர்கள் சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பரிகாரம் தேடிட உரிமை உண்டே. வேலிகளே பயிர்களை மேயும் நிலையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DK leader K. Veeramani is of the opinion that 2G scam is not a scheme but it is the result of those who are jealous of former telecom minister A. Raja.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X