For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசுக்கு ஆதரவளித்த கருணாநிதிக்கு கி. வீரமணி பாராட்டு

Google Oneindia Tamil News

சென்னை: மத்தியில் ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை திமுக எடுத்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குறியது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு மூலதன முதலாளிகளை அனுமதித்தால் நம் நாட்டு சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் காங்கிரஸ் மற்றும் ஒரு சிலர் தவிர எல்லோரும் எதிர்க்கிறார்கள். ஏனோ, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமை இதில் பிடிவாதம் காட்டுகிறது. மாநில அரசுகளுக்குச் சுதந்திரம் உண்டு. அனுமதிக்கவோ, மறுக்கவோ என்று கூறிடும் நிலையில் இதில் பிடிவாதம் காட்டுவது முரண்பட்ட ஒரு நிலைப்பாடு ஆகும்.

ஆனால் இதில் திமுக உறுதியாக இருப்பது பாராட்டத்தக்கது. வாக்கெடுப்பை வலியுறுத்தி பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே நாடாளுமன்றத்தை முடக்குவது நியாயமல்ல. இது மக்கள் விரோதப் போக்கு ஆகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சியினர் கேலிக் கூத்தாக்குகின்றனர்.

வாக்கெடுப்பு நடத்தினால் கூட இன்றுள்ள சூழ்நிலையில் பல எதிர்க்கட்சிகளே ஆட்சியைக் கவிழ்க்க அவசரப்படாத போது, தயாராக இல்லாத போது, இப்போது நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்வது எப்படி நியாயமானதாகும்?

இந்த நிலையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை உறுதியாக திமுக எதிர்த்துள்ளது.

மத்தியில் ஆட்சி கவிழ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், அதன் மூலம் பிற்போக்கு மதவாத சக்திகளுக்கு வலுவூட்டும் வகையில் காரணமாக அமைய மாட்டோம் என்ற நிலைப்பாட்டினை திமுக தலைவர் கலைஞர் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. திமுகவின் இந்த நிலைப்பாட்டை திராவிடர் கழகம் பாராட்டுகிறது.

பொறுப்புள்ள முற்போக்கு சிந்தனை உள்ள எதிர்க்கட்சிகளும் இதே நிலையை எடுப்பதன் மூலம் மதவெறிக் கட்சிகளின் கரங்களை மறைமுகமாக வலுப்படுத்தக் காரணமாகிவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DK chief K. Veeramani appreciates DMK supremo Karunanidhi for showing his hatred over FDI in retail and supporting the centre at the same time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X