For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துப்பாக்கி படக் காட்சிகள் நீக்கம்... முதல்வரை நேரில் சந்தித்து இஸ்லாமிய அமைப்புகள் நன்றி

Google Oneindia Tamil News

சென்னை: துப்பாக்கி படத்தில் இடம் பெற்ற இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சையான காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுத்தமைக்காக இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து நன்றி தெரிவித்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மதச்சார்பற்ற கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மையினரின் நலன் காத்திடும் வகையிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் தீபாவளித் திருநாளில், நடிகர் விஜய் நடிப்பில் தமிழகத்தில் வெளியான துப்பாக்கி என்னும் திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இக்காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் இஸ்லாமிய அமைப்புகள் கோரின.

இதனை அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக அரசின் உள்துறை செயலாளருக்கு அளித்த உத்தரவினையடுத்து, அரசு உள்துறை செயலாளர், திரைப்படத்தின் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகரன் ஆகியோரை 15.11.2012 அன்று அழைத்து, திரைப்படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களின் மனம் புண்படும்படி உள்ள காட்சிகளை தவிர்க்கும்படியும், இது சம்பந்தமாக இஸ்லாமிய சமூக அமைப்புகளை சார்ந்தவர்களுடன் பேசும்படியும் அறிவுறுத்தினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடனடி நடவடிக்கையினால் துப்பாக்கி படக்குழுவினர், இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் விவாதித்து, திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, முதல்வர் எடுத்த விரைவு நடவடிக்கையினால், இஸ்லாமிய சமுதாயத்தை பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு, தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அ. முஹம்மத்ஜான், தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலர் அப்துல் சமது, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மொகமது ஹனீபா, தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி, ஜமாத்தே இஸ்லாமி ஹந்த் பொதுச் செயலாளர் முஹம்மது அனிபா மன்பயி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பாக்கர், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா தலைவர் சிக்கந்தர், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் நிஜாம், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் தலைவர் உமர்பாரூக், தமிழ்நாடு முஸ்லீம் தொண்டு இயக்கம் தலைவர் முகம்மது மன்சூர், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாஸர், இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் பொதுச் செயலாளர் தர்வேஷ் ரஷாத், ஜம்மிபத்துல் உலமாயே ஹிந்த் (மஹ்மூத் மதனி) பொதுச்செயலர் முஹம்மது மன்சூர், ஆல் இந்தியா மில் கவுன்சில் சார்பில் முனீர் மற்றும் ஐக்கிய சமாதானப் பேரவை பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா கூறுகையில், சமீபத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இடம் பெற்றிருந்த சில காட்சிகளை நீக்குமாறு நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதில் உடனடியாக அரசு தலையிட்டு அந்த காட்சிகளை நீக்க துரித நடவடிக்கை மேற்கொண்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம்.

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கு அமுல்படுத்த வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும். முஸ்லிம்களின் கட்டாய திருமண பதிவை தளர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். எங்களின் மற்ற கோரிக்கைகளையும் அவர் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

English summary
Representatives of various Muslim outftis including MMK, Indian national league and TMMK have thanked Chief Minister Jayalalitha for sorting out the 'Thuppakki' movie issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X