பள்ளி 'ஆக்டிவிட்டி'க்காக கையெறி குண்டுடன் வந்த மாணவி.. ஆஸி.யில் பரபரப்பு
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 11 வயது பள்ளி மாணவி தனது ஆக்டிவிட்டி வகுப்புக்கு, கையெறி குண்டுடன் வந்ததால் பெரும் பீதியும், பதட்டமும் ஏற்பட்டது. இதையடுத்து ஒட்டுமொத்த பள்ளியும் காலி செய்யப்பட்டு கையெறி குண்டு பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டது.
சிட்னி நகரில் உள்ள ஹன்டர் கிறிஸ்டியன் பள்ளியில் படித்து வரும் இந்த 11 வயது மாணவி, பள்ளிக்கு வழக்கமான நேரத்தில் வந்தார். வந்தவர் தனது ஸ்கூல் பேக்கில் வைத்திருந்த கையெறி குண்டை எடுத்து வகுப்பில் வைத்தார். இதைப் பார்த்த ஆசிரியை மற்றும் சக மாணவ, மாணவியர் பெரும் பீதியடைந்தனர்.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்தனர். மேலும் பள்ளியில் இருந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்பட்டனர். அதன்பின்னர் அந்த கையெறி குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அந்த கையெறி குண்டு 2ம் உலகப் போர் மற்றும் வியட்நாட் போரின்போது பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டின் வடிவில் இருந்தது.
இந்த கையெறி குண்டை தற்போது பாதுகாப்புப் படையினர் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
பெரும் பீதியை ஏற்படுத்திய அந்த மாணவி 5வது வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி லாசன் கூறுகையில், தான் கொண்டு வந்தது ஒரு மாதிரி கையெறி குண்டு என்றுதான் அந்த மாணவி நினைத்திருக்கிறாள். அவளது வீட்டில் இந்த கையெறி குண்டு இருந்ததாம். அந்த மாணவியின் குடும்பத்தார் அதை பல வருடங்களுக்கு முன்பு யாரிடமிருந்தோ வாங்கி வீட்டில் வைத்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications