For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணைகளில் நீர் இருந்தும் தண்ணீர் தர முடியாது என கர்நாடகம் பிடிவாதம்!

Google Oneindia Tamil News

Deve Gowda
பெங்களூர்: கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே உள்ள நான்கு அணைகளிலும், குறிப்பாக மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அமையில் போதிய நீர் இருந்தும் கூட தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக தலைவர்கள் கூறுகிறார்கள். ஜனவரி மாதம் வரை தமிழகத்தில் மழை இருக்கே, பிறகு ஏன் அவர்கள் அவசரப்படுகிறார்கள் என்று கேட்டுள்ளார் முன்னாள் பிரதமர் தேவெ கெளடா.

காங்கிரசைச் சேர்ந்த சித்தராமையா போன்ற தலைவர்களோ, சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசை மிரட்டலுடன் கோரி வருகின்றனர். கர்நாடக அரசியல் தலைவர்களின் இந்த பிடிவாதப் பேச்சால், அங்கு பெரும் போராட்டம் தமிழகத்திற்கு எதிராக வெடிக்கக் கூடிய சூழல் அதிகரித்துள்ளது.

கர்நாடகத்தில் உள்ள காவிரி அணைகளில் முக்கியமானது கிருஷ்ணராஜ சாகர் அணைதான். அதன் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். இங்கு தற்போது கிட்டத்தட்ட 99.06 அடி தண்ணீர் உள்ளது. அதே போல ஹாரங்கி, கபிணி, ஹேமாவதி அணைகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளது.

ஆனாலும் தமிழகத்திற்கு ஒரு சொட்டு கூட தண்ணீர் தர முடியாது, கூடாது என்று கர்நாடகம் பிடிவாதமாக கூறி வருகிறது.

கெளடாவின் பொறுப்பற்ற பேச்சு

விவசாயியான முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவே இந்த விவகாரத்தில் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார். தமிழகத்திற்கு ஜனவரி மாதம் வட கிழக்குப் பருவ மழை பெய்யும். எனவே அதுவரை தமிழகம் பொறுத்திருக்க வேண்டியதுதான் என்று கூறுகிறார் கெளடா.

உரிய நேரத்தில் தண்ணீர் கிடைத்தால்தானே பயிரைக் காக்க முடியும். விவசாயியான தேவெ கெளடாவுக்கு இது கூட தெரியாமல் போனது ஆச்சரியம்தான்.

சட்டம் ஒழுங்கு சீர்குலையும் - சித்தராமையா எச்சரிக்கை

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சித்தராமையாவோ கர்நாடக அரசை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தால் போராட்டங்கள் வெடிக்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என அவர் மிரட்டியுள்ளார்.

பெல்காமில் தொடங்கிய சட்டசபை குளிர்காலக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரை 5 நாள்களுக்கு திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, தமிழகத்துக்கு 5 டிஎம்சி திறந்துவிட நேரிடும். நம்மிடம் 37 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இதில், 5 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு அளித்துவிட்டால், கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கோடைக்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிடக் கூடாது. தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு, கர்நாடகத்தில் நிலவும் நீர்த் தேவையை எப்படி சமாளிக்க முடியும்?

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டால், கர்நாடகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்; போராட்டம் வெடிக்கும். சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் நிலைமை உருவாகும். ஏற்கெனவே போராட்டம் நடத்தி ஓய்ந்து போயிருக்கும் மக்கள் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க நேரிடும் என்றார் அவர்.

தண்ணீரே தரக் கூடாது- ரேவண்ணா

மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவரும், தேவெ கெளடாவின் மகனுமான ரேவண்ணா பேசுகையில், தமிழகத்திற்கு எந்தச் சூழ்நிலையிலும் தண்ணீர் தர முடியாது என்று ஒரே ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டையே முற்றிலும் அவமதிக்கும் வகையில் பேசினார்.

உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆனாலும் பரவாயில்லை தமிழகத்திற்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வர் அம்மாநில அரசை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் பெல்காமில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாக ஆனாலும் பரவாயில்லை கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது. கர்நாடகாவில் நிலவி வரும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய குழு ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விளக்கும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்சனை குறித்து பேச பெங்களூர் வந்தபோது இது குறித்து கர்நாடக அரசு எங்களை கலந்தாலோசிக்கவே இல்லை. இந்த விவகாரத்தில் அரசு எங்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றார்.

தமிழகத்திற்கு கர்நாடக அரசு தினமும் 10,000 கன அடி நீரை காவிரியில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஷெட்டர் என்ன சொல்கிறார்?

கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பேசுகையில், தண்ணீர் திறக்கப்படும் முன் சட்டசபை கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோரப்படும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாக படித்துப் பார்க்கப்படும் என்றார்.

English summary
Hours after the Supreme Court ordered Karnataka to release of 10,000 cusecs of Cauvery river water to Tamil Nadu, Opposition parties urged the government not to do so. "The government should take a firm stand on the issue and not release Cauvery water to Tamil Nadu as farmers in Karnataka are in distress," Opposition Leader in Assembly Siddaramaiah said in the House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X