For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக மேடைகளில் இனி நாஞ்சில் சம்பத் எப்படிப் பேசுவார்? இதைப் படியுங்கள்

By Mathi
Google Oneindia Tamil News

Nanjil Sampath
சென்னை: அதிமுகவுக்கு தாவிய முதல் நாளியேலே கொடுத்த பேட்டிகளிலெல்லாம், "நேற்று வரை நான் பேசியது வேறு.. இனி பேசப் போவது வேறு" என்று கொஞ்சமும் சலனப்படாமல் கொள்கை என்பதே கிடையாது என்று பிரகடனம் செய்திருக்கிறார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய கொள்கை பரப்பு துணைச் செயலாளரான நாஞ்சில் சம்பத்.

''கடல் அலைகளுக்கு உத்தரவிடுபவன் எவனோ, புயலுக்குக் கூட கடிவாளம் போட்ட தலைவன் யாரோ, நிலவைப் பிழிந்து ஜூஸ் போட்டு ஸ்ட்ரா போடாமலேயே குடித்த மாபெரும் வீரன் யாரோ.. அவர் தான் என் தலைவர் வைகோ''... இப்படியெல்லாம் வைகோவை இமயமலையின் நுனி வரை தூக்கிப் பேசியவர் தான் நாஞ்சில் சம்பத்.

இனி வைகோ என்பதற்கு பதிலாக அந்த இடத்தில் முதல்வர் ஜெயலலிதா என்று மட்டும் மாற்றிப் பேசப் போகிறார். அவரது பேச்சுக்களில் இருந்த 'வைகோ' என்ற வார்த்தையைத் தூக்கிவிட்டு 'முதலமைச்சர் ஜெயலலிதா' என்று மட்டும் மாற்றி எழுதி விட்டால் போதும். அந்த வகையில், இனி நாஞ்சில் சம்பத் அதிமுக மேடைகளில் இப்படித்தான் பேசுவார்...

இது ஒரு கற்பனைதான்.....

எனக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணாமல் என் தாய்த் தமிழகத்திற்கு என்ன கிடைக்கும் என்று ஏங்குகிற தலைவர் மாண்பமை தமிழக முதலமைச்சர் அவர்கள்!

தன் குடும்பம், தன் பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவுகளுக்கென வாழும் தலைவர்களுக்கு மத்தியில் தத்தளிக்கும் தமிழ்க் குடும்பங்களைக் கரைசேர்க்க தனியொரு ராணுவமாக களமாடுகிறவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள்...

ஆபத்துக்களைத் துச்சமெனக் கருதி ஆட்கொண்ட அண்ணா, அமரர் புரட்சித் தலைவரின் இலட்சியங்களை வென்றெடுக்க வியூகம் வகுப்பதோடு நில்லாமல் வினையாற்ற வியர்வைப் பாசனமும் செய்கிற வியப்புறு தலைவி எங்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்!

ஆசாபாசங்களுக்கு அடி பணியாமலும், ஆகாயத்தைப்போல் அழுக்கு படியாமலும் இருக்கிற இந்தியாவின் வாழும் அதிசயம் அம்மா அவர்கள்!.

அரசியல் என்றால் தப்பு தான் நடக்கும், தவறுகள் தான் தாண்டவமாடும், கோலம் அலங்கோலமாகும், சீலம் சிதைக்குத்தான் செல்லும். இது தான் இக்காலம் என்று எண்ணுகிற வேளையில் புதிய பூக்கோலம் போடுகிற அன்னை தெரசாதான் எங்கள் தலைவி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்!.

உப்புக் கடலில் தான் உயிர் வாழ்கிறது மீன். ஆனால், அந்த மீனுக்குள் உப்பு ஊடுருவுவது இல்லை. உப்புக் கடலில் உயிர் வாழ்கிற மீனைச் சமைக்க வேண்டுமானால் உப்பிட்டுத்தான் சமைக்கிறோம், சாப்பிடுகிறோம். உப்புக் கடலில் உயிர் வாழ்ந்தாலும், உப்பு ஒட்டாத மீனைப் போல் தப்பு நடக்கிற அரசியலில் ஆட்காட்டி விரல் நீட்டி துளி குற்றமும் சாட்ட முடியாத அளவிற்குத் தப்பற்றவராய் தலை நிமிர்ந்து நிற்கிற தலைவர் எங்கள் தலைவி!.

அம்மாவின் ஒளியை, ஆற்றலை, ஓம்பா ஈகையை பெருமையை, நுண்மாண் நுழை புலத்தை, நோக்கரிய நோக்கை, நுணுக்கரிய நுண்ணுணர்வை, விரிந்த புகழை, பரந்த செல்வாக்கை, அவரைத் தகைசால் தலைவர்கள் வியந்த தன்மையை, ஐ.நா. மன்றமே போற்றிய வரலாற்றை.. அரிய அவரது மானுடப்பற்றை, விவாதத் திறமையை, பன்மொழிப் புலமையை மதிப்புறு மாண்பை விரித்தால் பெருகும். தொகுத்தால் எஞ்சும்.

கீதம் இனிய குயிலே! கேட்டியேல் எங்கள் பெருமான்.
பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக்கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை
ஆதி குணம் ஒன்றும் இலான் அந்தமிலான் வரக்கயவாய் !

என்று வழிபாட்டிர்க்குரிய சிவன் பெருமையை குயிலிடம் சிலாகித்துப் பேசுவான் மாணிக்கவாசகன்.

அதைப்போல் எங்கள் அம்மாவின் வானளாவிய பெருமையை சொல்லச் சொல்ல பக்கங்கள் விரியும், பொழுதுகள் சரியும்.

ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையையும் உலர்ந்து போகாத உணர்ச்சியையும் கலந்து பேசுகிற ஈடற்ற இணையற்ற பன்மொழிப் புலவர்களின் வரிசையில் எங்கள் தங்கத் தாரகைக்கு நீங்கா நிரந்த இடமிருக்கிறது!

இரண்டாவது உலகமகா யுத்தத்தில் நாஜிப் படையின் நாசத் தாக்குதலுக்கு இலண்டன் ஆளான போது இலண்டனை மீட்கப் பேசிய இங்கிலாந்தின் சிங்கம் வின்சென்ட் சர்ச்சில், அமெரிக்காவில் கெட்டிஸ்பர்க்கில் ஜனநாயகத்தின் மான்புரைத்த ஆபிரகாம் லிங்கன், ஐரோப்பாவில் போர் முனையில் முழக்கம் செய்த மாவீரன் நெப்போலியன், போல்ஷ்விக் புரட்சியில் பேசிய ட்ராட்ஸ்கீ வரிசையில் வைத்து மதிக்கப்படுகிறவர் எங்கள் மாண்பமை புரட்சித் தலைவி அவர்கள்!

ஊமைகளைப் பேச வைத்த பிருந்தாவனம்! சாமானியர்களுக்கு சாரம் அமைத்துக் கொடுத்து வான் தொடு கோபுரத்து கலசங்களாக அலங்கரிக்கிறவர்! ஓலைக் குடிசையில் ஒண்டுக் குடித்தனத்தில் மொண்டு குடித்த நீரை வயிற்றில் நிரப்பி வாழியவே வாழியவே என முழக்கமிடுகிற அந்தக் கடைக்கோடித் தொண்டனுக்கும் நம்பிக்கையை விதைத்து வைத்திருக்கும் விருட்சம் எங்கள் தெய்வம்!

யமுனைக் கரையில் சரித்திரப் புகழ் வாய்ந்த இந்திய நாடாளுமன்றத்தில் இவர் பேச இந்தியாவே வாய் பிளந்து பார்த்தது!

விடிகின்ற வானத்தில் வெற்றிச் சிறகுகளை விரிக்க வேண்டும் என்பதை மட்டுமே இலட்சியமாகக் கொள்ளாமல் மடிகின்ற இருளில் வெற்றிப் பூக்களை மலர வைப்பதற்கும், பச்சையம் இழந்த தமிழ் மனிதத் தாவரங்களுக்கு ஒளிச் சேர்க்கை செய்யவும் தன்னை வருத்திக் கொண்ட தன்னலம் பாராது இன நலத்திற்கு இமை மூடாமல் உழைத்த உத்தமனை, உறுதி குலையாத, ஏழைகளின் உள்ளம் கவர்ந்த இவரைப் பற்றி எழுதப் போனால் எத்தனையோ இரவுகளைப் பகலாக்கினால் மட்டும்தான் முடியும்.

எங்கள் அம்மாவால் மட்டும் தான் பொழுது விடியும் என்று நம்பிக்கை தமிழ்ச் சமூகத்தில் வேர்பிடித்து நிற்கும் காலமிது!

எங்கு மனத்திலே அச்சமின்றி மக்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்களோ, where the mind is without fear and head is held high

எங்கு சிந்தனைச் சுதந்திரமாக செயல்படுகிறதோ, where the knowledge is free.

எங்கு உலகம் குறுக்குச் சுவர்களால் பிரிந்து சிதையாமல் ஒன்றி இருக்கிறதோ, where the world has been broken up into fragments by narrow domestic walls

எங்கு உண்மை என்ற அடித்தளத்தில் இருந்து சொற்கள் பிறக்கின்றனவோ, where words come out from the depth of truth

எங்கு ஓய்வற்ற முயற்சி உயர்வை எட்டுகிறதோ, where tireless striving strecthes its arms towards perfection

எங்கு பகுத்தறிவு என்ற ஒளி பாழான பழக்கங்கள் என்ற இருளில் மறைந்து விடவில்லையோ, where the clear stream of reason has not lost its way into the dreary desert send of dead habit

எங்கு சிந்தனையும் செயலும் பரந்து விரிந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றனவோ, where the mind is led forward by the into ever widening thought and action

அங்கு அடைதல் வேண்டும் எனது நாடு, அந்த விடுதலை எய்தல் வேண்டும், into the heaven of freedom my father let my country awake

என்ற கீதாஞ்சலி தந்த தாகூரின் காலத்தில் அழியாத கவிதை வரிகளுக்கு இந்திய அரசியலில் இரத்த சாட்சியாக இருக்கிற ஒரே தலைவர் எங்கள் மாண்புமிகு புரட்சித் தலைவி தங்கத் தாரகை முதலமைச்சர் அவர்கள்தான் என்பதை மத்தளம் கொட்டி வரிச்சங்கு நின்றூதி எளியவன் என்னால் எந்த மன்றத்திலும் சொல்ல முடியும்.

எங்கள் புரட்சித் தாயின் திருவிடமாம் திராவிடத்து புரட்சிச் செல்வியின் சமூகப் பரக்ஞாயும், தான் சார்ந்த இனம் தலைநிமிர வேண்டும் என்ற வேட்கையும், இந்த மண்ணும் மக்களும் பயனுற வேண்டும் என்ற அவரது தாகமும் தான் அவரைக் குடிலர்களின் அவமானங்களுக்கு மத்தியில், அடுக்கடுக்காக முற்றுகையிட்ட சோதனைகளுக்கு மத்தியில் இன்னும் அவரை இயக்கிக் கொண்டிருக்கிறது.

அக்டோபஸ் கரம் கொண்ட ஆதிக்க சக்திகளின் அசுரத் தாக்குதல்களை எதிர் கொண்டு சிதைத்துக் கொண்டு இருக்கிற சிம்மாசனங்களில் இருப்பவர்கள் அல்ல. பணக்காரர்களின் மடியில் இருந்தும் பிடியில் இருந்தும் திராவிட இயக்கத்தை பாமரர்களிடம் கொண்டு வந்து சேர்த்த வரலாறு பெரியாருக்குச் சொந்தம். பாமரர்களிடம் இருந்து இயக்கத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு வந்து ஆட்சித் தகுதிக்குரிய இயக்கமாக மாற்றிய வரலாற்றுக்கு அறிஞர் அண்ணா சொந்தம். அந்த இயக்கத்தை உலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு நில்லாமல் கோரமான கொடூரமான ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்கிற வரலாற்றுக்கு எங்கள் அம்மாவே சொந்தம்!

வானுக்கு, மண்ணுக்கு, வளிக்கு, ஒளிக்கு, ஊனுக்கு, உயிருக்கு, உண்மைக்கு, இன்மைக்கு, ஓசைக்கு, ஒலிக்கு, வாசம லருக்கு எல்லாம் பரம் பொருளை உவமித்துப் பாடியும் நிறைவு காணாத திருநாவுக்கரசர் பேசப் பெரிதும் இனியவன் ஆனாய் நீயே என்று பாடி பரவசப்பட்டார். எங்களுக்கும் எங்கள் பாட்டுடைத் தலைவவி பேசப் பெரிதும் இனியவர்தான்! பேசப் பேச இனியவர் தான்!.
அவருக்கு நான் அடிமை என்பதில் அவருக்கு தொண்டரடிப்பொடி என்பதில் அவரின் சுட்டு விரலுக்கு கட்டுப்பட்டு காலடியில் வீழ்ந்து கிடக்கிற இந்த நாஞ்சில் சம்பத்துக்கு இப்போதும் பெருமை! எப்போதும் பெருமை!

என் உயிர் மரித்துப் போகிற நேரத்திலும் மரண முகட்டின் கடைசி முனகலின் போதும்கூட எங்கள் இதய தெய்வம் அம்மாவின் கடாட்சமும் காலடியும்தான் எங்கள் கண்ணுக்குத் தெரியும்! என்பதை மரண சாசனமாகவே தமிழ் மண்ணுக்கு விட்டுச் செல்வான் இந்த ஏழைப் பேச்சாளன் நாஞ்சில் சம்பத்!

(இது அவர் அடுத்த கட்சிக்கு போகும் வரை மட்டுமே!)

English summary
How Nanjil Sampath speaks in ADMK stages? May be this is one of Nanjil Sampath's in ADMK stages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X