பிளஸ்டூ மாணவி பாலியல் பலாத்காரம்: புதுவையில் வெடித்தது போராட்டம் -ஆங்காங்கே ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரியில் கடத்திச் செல்லப்பட்டு பிளஸ்டூ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும் ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அப்பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் திருபுவனை வழியாக வில்லியனூர் வரும் தனியார் பேருந்தில் தினமும் தனி வகுப்புக்காக வந்து சென்றுள்ளார். அப்போது பேருந்து நடத்துநர் முத்து என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். இதனிடையே நேற்று முன் தினம் தனது தோழியைப் பார்க்க அவர் வில்லியனூர் சென்றார். பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருபுவனை, வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், நேற்று தமது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அந்த மாணவி விழுப்புரம் அருகே தாம்இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, பெற்றோர் அங்கு சென்று மாணவியை மீட்டனர். மாணவியின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், அவரை புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்துதப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையின்போது, சம்பவத்தன்று நடத்துநர் முத்து, மாணவியின் தாயாருக்கு உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அவரை விழுப்புரத்தில் சேர்த்திருப்பதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய மாணவியும் நடத்துநருடன் சென்றுள்ளார். விழுப்புரத்தில் ஓரிடத்தில் பேருந்தில் இருந்து இறங்கி, அருகேயுள்ள வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த வெங்கடாசலபதி வந்ததாகவும், இருவரும் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாணவி போலீசில் புகார் கூறியுள்ளார்.
இதனால் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட டெல்லி சம்பவத்தைப் போலவே இந்த அக்கிரமும் நடந்திருப்பதால் புதுவை மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர். இருவர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் என்ஜீனியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அத்தனை பேரையும் கைது செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாகூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் இந்திராகாந்தி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.
புதுவை முழுவதும் ஆங்காங்கு பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் குதித்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications