For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கமிஷனர் ஜார்ஜ் என்ன, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்க்ரவர்த்தியா?... உயர்நீதிமன்றம் கண்டனம்

Google Oneindia Tamil News

George
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் என்பவர் ஒரு அரசு அதிகாரி, போலீஸ் அதிகாரி.மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியவர். அவர் ஒன்றும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி அல்ல என்று சென்னை உயர்நீதி்மன்றம் கடுமையாக சாடியுள்ளது. மேலும் இன்று கோர்ட்டில் அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் வரவில்லை.

சென்னை போலீஸ் கமிஷனரான ஜார்ஜ் சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. கூடங்குளம் விவகாரம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்கியது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் அவர் சிக்கினார். சில மாதங்களுக்கு முன்பு பெண் போலீஸ் அதிகாரியுடன் இணைத்தும் இவர் பேசப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளார் ஜார்ஜ்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீதர் என்பவர் ஒரு வழக்குப் போட்டுள்ளார். அதில், பாப்புலர் போர்ஜ் (மெட்ராஸ்) என்ற நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதாக கூறி, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ரூ.13 லட்சம் மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து கொடுத்த புகாரை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது என்று கூறி, 2 முறை முடித்து வைத்துவிட்டனர். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இடைக்கால உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்தார்.

அதில், பாப்புலர் போர்ஜ் (மெட்ராஸ்) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் எஸ்.ராஜாமணி. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக 4 ஆயிரத்து 800 சதுர அடி நிலம் சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ளது. இந்த நிலத்தை விற்பனை செய்ய, இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக கூறி, டி.ஸ்ரீதர் என்பவரிடம் இருந்து பல்வேறு தேதிகளில் ரூ.13 லட்சத்தை முன்பணமாக ராஜாமணி பெற்றுள்ளார்.

இதுசம்பந்தமாக 2 ஒப்பந்தங்கள் இருவருக்கு இடையே 25.1.2002 அன்று ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிலத்தை ஸ்ரீதர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து தரவில்லை. அதே நேரம், நிலத்தை விற்பனை செய்ய ராஜாமணிக்கு அதிகாரம் வழங்கவில்லை என்று பாப்புலர் போர்ஜ் நிறுவனம் சார்பில் ஸ்ரீதருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஸ்ரீதர் புகார் செய்தார். அந்த புகாரில், தான் கொடுத்த ரூ.13 லட்சத்துக்கான வங்கி காசோலைகள், பாப்புலர் போர்ஜ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட ராஜாமணியும், பாப்புலர் போர்ஜ் நிறுவனத்தின் இயக்குனர்களும் தன்னை மோசடி செய்கின்றனர் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், 9.5.2005 அன்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர், புகார்தாரர் ஸ்ரீதருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், வழக்கை முடித்து வைத்து, சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துவிட்டார்.

இந்த விவரம் தெரிந்தவுடன், தன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடக்கோரி கோர்ட்டில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், முடித்து வைக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு கமிஷனருக்கு 26.5.2008 அன்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், மற்றொரு இன்ஸ்பெக்டர் வழக்கை விசாரித்து, இது சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது என்று கூறி வழக்கை மீண்டும் முடித்து வைத்து 21.3.2011 அன்று அறிக்கையை சைதாப்பேட்டை கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை எதிர்த்தும் ஸ்ரீதர் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், இந்த வழக்கை தகுந்த அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு 10.11.2011 அன்று உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் (கந்துவட்டி பிரிவு) உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது போலீஸ் விசாரணைக்கு, ஸ்ரீதர் சார்பில் அவரது வக்கீல் கே.சம்பத்குமார் ஆஜராகி ஆதாரங்களை எல்லாம் கொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், இந்த வழக்கை உதவி கமிஷனர் உத்தரவின்படி மீண்டும் முடித்து வைக்கப் போவதாக கூறியுள்ளார். இதையடுத்து இந்த உயர்நீதி்மன்றத்தில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, கோர்ட் உத்தரவை மதித்து செயல்படும்படி போலீசாருக்கு எடுத்து கூறியும், அவர்கள் தொடர்ந்து இந்த வழக்கு சிவில் சம்பந்தப்பட்டது என்று கூறி 2 முறை வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர். ஆனால், இந்த வழக்கு சிவில் சம்பந்தப்பட்ட அல்ல என்று அரசு தரப்பு வக்கீல் தன் வாதத்தில் குறிப்பிட்டார்.

எது எப்படியோ, கோர்ட் உத்தரவை மதித்து நடக்கும்படி போலீசாருக்கு அரசு வக்கீல் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், நிலம் வாங்குவது குறித்த ஒப்பந்தம், பணம் கொடுத்த வங்கி காசோலை விபரம் உள்ளிட்ட எல்லா ஆதார ஆவணங்களையும் புகார்தாரர் சமர்பித்தும், இது சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது என்று கூறி வழக்கை போலீசார் முடித்து வைத்துள்ளனர்.

இந்த வழக்கின் தன்மை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, குற்றச்சாட்டுக்கு ஆதார ஆவணங்களை தாக்கல் செய்தும், கோர்ட் 2 முறை உத்தரவிட்டும் தொடர்ந்து சிவில் சம்பந்தப்பட்டது என்று கூறி போலீசார் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் முருகேசன் ஆகியோர் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக அரசுக்கும், சென்னை போலீசுக்கும் கரும்புள்ளியாக அமைந்து விட்டது.

போலீஸ் கமிஷனர் (ஜார்ஜ்) என்பவர் போலீஸ் கமிஷனர்தான். அவர் ஒன்றும் புனித ஜார்ஜ் கோட்டையின் சக்கரவர்த்தி இல்லை. ஒரு அரசு அதிகாரி என்ற விதத்தில், அவர் பொதுமக்களை சந்தித்து, புகாரை பெற்று, மக்களின் பிரச்சனை தீர்க்கும் விதமாக குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக புலன் விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவர் பாரபட்சம் இல்லாமல் செயல்படவேண்டும்.

பொதுமக்களின் குறைகளை கேட்க கமிஷனர் மறுப்பது நியாயம் இல்லை. பொதுமக்களின் குறைகளை கேட்டால்தான், ஒரு புகார் குறித்து புலன் விசாரணை மேற்கொண்டு தகுந்த முடிவினை மேற்கொள்ள முடியும். ஆனால், கமிஷனராக பதவி ஏற்ற நாள் முதல், கமிஷனர் ஜார்ஜ் பொதுமக்களை நேரில் சந்திக்காமல் இப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

எனவே, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து எடுத்துக்கூற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், வெள்ளிக்கிழமை இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கமிஷனர் வரவி்ல்லை

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கமிஷனர் ஜார்ஜ் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில், இணை கமிஷனர் சேஷசாயி ஆஜராகியிருந்தார். இதையடுத்து அட்வகேட் ஜெனரலிடம் ஏன் கமிஷனர் வரவில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். அதற்கு அட்வகேட் ஜெனரல், இன்று முக்கிய மீட்டிங்கில் கமிஷனர் பிசியாக உள்ளார். அதனால் ஆஜராகவில்லை என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அட்வகேட் ஜெனரல் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். வழக்கு விசாரணையை 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அன்றைய தினம் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டியது போலீஸ் அதிகாரியின் கடமையில் ஒன்றுதான். எனவே இதில் விலக்கு அளிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

English summary
Madras HC has comes down heavily on Chennai police commissioner George and ordered him to appear before the bench today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X