For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமநாதபுரம் - 2 விஸ்வரூபம் தியேட்டர்களில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Google Oneindia Tamil News

Petrol bomb
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விஸ்வரூபம் திரையிடப்பட்ட 2 தியேட்டர்களில் இன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஸ்வரூபம் படம் திரையிடப்படலாம் என்று நேற்றே உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டபோதிலும் தமிழக அரசின் திட்டமிட்ட செயல்பாடுகளால் எங்குமே படத்தை இன்று திரையிட முடியவில்லை. அத்தனை தியேட்டர்களும் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

மேலும் ஆங்காங்கே வன்முறையும் வெடித்துள்ளது. இதில் யார் ஈடுபடுகிறார்கள் என்பதும் தெரியவில்லை. ராமநாதபுரத்தில் டி-சினிமா என்ற தியேட்டரில் இன்று காலை விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்பட இருந்தது.

இந்நிலையில் படத்துக்கு மேலும் தடை நீடித்ததால், படம் திரையிடப்படவில்லை. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்தத் திரையரங்கின் இன்னொரு புறத்தில் ஜெகன் திரையரங்கம் உள்ளது. இரு திரையரங்குகளும் சகோதரர்களுக்குச் சொந்தமானது.

இந்நிலையில், இன்று பிற்பகல், போலீஸ் காவலையும் மீறி திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது. முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் இதுவரை கைதாகவில்லை.

திருச்சியில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்

திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள கலையரங்கம் தியேட்டரில் விஸ்வரூபம் படம் வெளியாக இருந்தது. இதற்காக நேற்று நள்ளிரவு முதலே அங்கு திரண்ட ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.

இன்று அதிகாலை கடுமையான பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் 100-க்கும் மேற் பட்ட ரசிகர்கள் டிக்கெட் கவுண்டர் முன்பு தயார் நிலையில் இருந்தனர்.

இதற்கிடையே காலை 10 மணி முதல் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படம் பார்க்க குவிந்தனர். தொடர்ந்து ரசிகர்மன்ற காட்சிக்காக அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை மன்ற நிர்வாகிகள் விநியோகித்தனர். ஆனால் காலை 11 மணி வரையிலும் படம் திரையிடப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர் முன்பு கோஷங்கள் எழுப்பினர். அப்போது பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் இங்கு கோஷம் போடக்கூடாது, கலைந்து செல்லுங்கள் என எச்சரித்தனர். உடனே ரசிகர்கள் படத்தை திரையிடுங்கள் அல்லது எங்களுக்கு வழங்கப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தாருங்கள் என்று கூறினர்.

ஆனால் தியேட்டர் நிர்வாகம் சார்பில் அரசு அனுமதி அளித்த பின்னரே படம் திரையிடப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்ற ரசிகர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலையரங்கம் தியேட்டர் வழியாக சத்திரம் செல்லும் பேருந்துகள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் பேருந்துகளை பெரியார் சிலை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

தென்காசி தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு

தென்காசி அருகே உள்ள சுரண்டையில் விஸ்வ ரூபம் திரைப்படம் காலையில் திரையிட பட்டு சுமார் ஒருமணி நேரம் படம் ஓடி கொண்டிருந்தது அப்போது திடீர் என மேலிடத்திலிருந்து தகவல் வந்ததை தொடர்ந்து படம் ஓடுவது நிறுத்தபட்டு படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்பட்டது .மேலும் தென்காசியில் தாய்பாலா, பீ.எஸ்.எஸ்.ஆகிய இரு தியேட்டர்களில் படம் திரையிடப்படும் என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அங்கு எராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் மேலும் அசம்பாவிதங்கள் நடக்காவண்ணம் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Petrol bombs hurled at two theatres in the Ramanathapuram district in Tamil Nadu that were scheduled to screen Kamal Haasan's 'Vishwaroopam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X