For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை சென்னை ஐ.நா. அலுவலகம், மார்ச் 4ல் இலங்கை தூதரகம் முற்றுகை: வைகோ அறிவிப்பு

Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: இலங்கையில் தமிழர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று குவித்த சிங்கள அரசை எதிர்த்து அறப்போர் நடைபெற உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12ம் நாள், லண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர்.

நெஞ்சைப் பிளக்கும் ஈழத் தமிழர் படுகொலை அவலக் காட்சிகள் காணொளிகளாக, உள்ளத்தை உருக்கும் புகைப்படங்களாக மக்கள் விழிகளையும் உள்ளங்களையும் கண்ணீரோடு ஈர்க்கும் வகையில் பரப்புரை செய்கின்றனர். பிரெஞ்சு தேசம், பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து நாடுகளின் 54 நகரங்களில் ஈழ விடியலுக்கான கருத்துப் பரப்புரை செய்தவாறு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவுக்குச் செல்கின்றனர்.

இனப் படுகொலை செய்த ராஜபக்சே கொடியோர் கூட்டத்தை, அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தவும், சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பினை அனைத்துலக நாடுகள் நடத்திடவும், அந்த வாக்கெடுப்பில் புலம்பெயர் ஈழத் தமிழ் மக்கள் அந்தந்த நாடுகளில் பங்கேற்கவும், அதற்கு முன்னதாக சிங்களக் குடியேற்றங்களும், சிங்கள போலீசும், ராணுவமும் தமிழ் ஈழத் தாயகத்திலிருந்து வெளியேற்றப்படவும் இலக்காகக் கொண்டு தமிழ் ஈழ மக்களும் உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்களும் ஒருசேரக் குரல் எழுப்ப வேண்டியது தமிழ்க் குலத்தின் தலையாய கடமையாகும்.

எனவே, தியாகி முருகதாசன் நினைவு நாளில் பிப்ரவரி 12ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில், அண்ணல் காந்தியார் சிலை அருகில், ஈழத் தோழமைச் சுடர் ஏந்திட தமிழ் ஈழ விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், தீக்குளித்து உயிர்களை ஈகம் செய்த தியாகிகளுக்கும், சிங்களவன் நடத்திய இனக்கொலையால் பலியான தமிழ் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தவும் கடல் அலைகளில் மலர்களைத் தூவவும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும், தமிழ்ப் பெருங்குடி மக்களும் கடமையாற்ற வாரீர்! என உங்கள் சகோதரன் வைகோ பணிவுடன் அழைக்கிறேன்.

அதே 12ம் தேதி அன்று சென்னையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை ஈழத்தமிழர்களைக் காக்க தவறியதைக் கண்டித்தும், வரும் நாட்களில் ராஜபக்சே அரசின் மீது சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரியும், முற்றுகையிடும் போராட்டம் காலை 11 மணி அளவில் நடத்திட, மே 17 இயக்கம் அறிவித்துள்ளமையால், அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் அதில் பங்கேற்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். அந்த அறப்போரிலும் பங்கேற்க தோழர்களை அழைக்கிறேன்.

ஜெனீவாவில், ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மார்ச் 4ம் தேதி அன்று மாபெரும் மக்கள் கூடல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. அதில் லட்சக்கணக்கான தமிழர்கள் திரள இருக்கிறார்கள்.

அதே நாளில், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் சிங்கள கொலைபாதக அரசை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி அறப்போர் நடத்தவும், அதே நாளில் தலைநகர் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் அறப்போரை நடத்தவும், கடந்த பிப்ரவரி 2ம் தேதி அன்று மக்கள் நல்வாழ்வு இயக்கம் அறிவித்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திடவும், கட்சிகளின் அடையாளங்கள் இன்றி கருப்புக் கொடிகளை ஏந்திடவும் தமிழ்ப் பெருமக்களை, இளம் தலைமுறையினரை அன்போடு வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கு: கைதான 3 பேரில் தூக்கு கயிறு அறுத்து எரியப்படும்

இந் நிலையில் திருச்சியில் நிருபர்களிடம் பேசிய வைகோ, மரண தண்டனை என்பது கூடாது என்று நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் அப்சல் குருவை தூக்கிலிட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒன்றரை மாதத்தில் வரும் என எதிர்பார்க்கிறோம். இதில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். 3 பேரின் தூக்கு கயிறு அறுத்து எறியப்படும் என்றார்.

English summary
MDMK chief Vaiko has invited the people of Tamil Nadu to join him in seiging UN office and Sri Lankan embassy in Chennai on february 12 and march 4 respectively condemning Rajapakse government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X