கருப்பு சட்டையில் திமுக மத்திய அமைச்சர்-ராகுலை சந்தித்த காங். எம்பிக்கள், நாளை இலங்கை விவாதம்!
டெல்லி: தமிழக எம்.பிக்களின் வற்புறுத்தல் காரணமாக, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து லோக்சபாவில் நாளை (வியாழக்கிழமை) விவாதம் நடைபெறுகிறது.
பெரும் போர்க் குற்றங்களிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள இருக்கும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் வற்புறுத்தி வருகின்றன.
ஆனால், இதை ஆதரிக்க முடியாது என்று மத்திய அரசு திமிர்ப் பேச்சு பேசி வருகிறது.

இதனால் தமிழகத்தில் தங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவுத் தளமும் காணாமல் போய்விடும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸார் இடையே அச்சம் பரவியுள்ளது. இந்த விவகாரத்தைக் காரணமாக வைத்து திமுக, அதிமுக தங்களை கழற்றிவிட்டால் நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்படும் என்ற அச்சமும் அக் கட்சியினரிடம் உள்ளது.
இந் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மேலும் திமுக எம்பிக்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசை நெருக்க நேற்று கறுப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திரண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்தும், தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அக்கட்சியைச் சேர்ந்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவரும் கறுப்பு சட்டை அணிந்து அலுவலகத்துக்கு வந்தார்.
அதே போல நாடாளுமன்றத்திலும் திமுக, அதிமுக எம்பிக்கள் இலங்கைத் தமிழர் பிரச்சனையைக் கிளப்பினர்.
இப்படி பல வகைகளிலும் இந்த விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றன.
இதையடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் நாளை ஓட்டெடுப்பு இல்லாத குறுகிய விவாதம் நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்பு ராஜ்யசபாவில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விவாதம் நடைபெற்றது. அதேபோல் இப்போது லோக்சபாவிலும் விவாதம் நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications