பொதிகை எக்ஸ்பிரஸில் திருமணம்.. ரகசிய குடித்தனம்.. எல்லாம் முடிந்ததும் 'எஸ்' ஆன காதலன்!
சென்னை: ஓடும் ரயிலில் பயணிகள் முன்பு தாலி கட்டி விட்டு, காதலியை கூட்டிக் கொண்டு தென்காசிக்குப் போய் அங்கு ரகசிய வாழ்க்கை வாழ்ந்து விட்டு பின்னர் தலைமறைவாகிப் போன மாணவனை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பூரிவாக்கத்தை சேர்ந்தவர் சுனில்ராஜ். இவர் பொன்னரி அரசு கல்லூரியில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் பி.ஏ.அரசியல் 3-ம் ஆண்டு படிக்கும் பெரியபாளையம் தண்டுமாநகரை சேர்ந்த ரூபினியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்ததால் அடிக்கடி சந்தித்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி சுனில்ராஜும் ரூபினியும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் தென்காசி சென்றனர்.
வழியில் ஓடும் ரயிலிலேயே சக பயணிகள் முன்னிலையில் ரூபினிக்குத் தாலி கட்டினார் சுனில்ராஜ். பின்னர் தென்காசி வந்து சேர்ந்ததும் அப்பகுதியில் காதலியுடன் சுற்றித் திரிந்தார். அறை எடுத்தும் தங்கியுள்ளனர். பின்னர் ஒரு வாரம் கழித்து பொன்னேரி திரும்பினர்.
பொன்னேரி வந்ததும் நீ வீட்டுக்குப் போ, நான் எனது வீட்டாருடன் வந்து பேசி உன்னை அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று கூறி ரூபினியை அனுப்பி வைத்தார். பின்னர் சுனில் ராஜ் போய் விட்டார். ஆனால் மறுபடியும் அவர் ரூபினியைப் பார்க்க வரவில்லை. செல்போனையும் எடுக்கவில்லை. அதேபோல கல்லூரிக்கும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபினி, சுனில்ராஜ் வீட்டுக்குப் போய் அங்கிருந்த சுனில்ராஜுடன் பேசினார். தன்னுடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வரவில்லை. மேலும் அவரது குடும்பத்தினர் 7 பேரும் சேர்ந்து ரூபினியை மிரட்டினர். அடித்து விரட்டி விட்டனர்.
இதையடுத்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ரூபினி. இதையடுத்து சுனில்ராஜ் உள்ளிட்ட 8 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications