மாணவர்கள் போராட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் பேரவை கலந்து கொள்ளும்: தலைவர் காளிமுத்து அறிவிப்பு
சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக நடக்கும் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மருத்துவர் பேரவையைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்று பேரவை தலைவர் காளிமுத்து அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவர் பேரவை மாநில தலைவர் காளிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா தான் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தை வலுசேர்க்கும் திருத்தங்களை கூட செய்ய மத்திய அரசு தயாராக இல்லை.
இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிராக சர்வேதேச பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கை தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் மாணவர் போரட்டத்தை ஆதரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மருத்துவர் பேரவையைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மாணவர் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ ஆதரவு:
எஸ்.டி.பி.ஐ. கட்சி கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக எவ்வளவோ நிர்பந்தம் கொடுத்தும் செவி சாய்க்காத நிலையில் தற்போது மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பை திமுக நிறைவேற்றியுள்ளதாக கருதுகிறேன். திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் இந்த முடிவை மக்கள் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையின் இனப்படுகொலைக்கு எதிராக சர்வேதேச பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கை தமிழர் பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறும் மாணவர் போரட்டத்தை ஆதரிக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications