நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறை தண்டனை... ஆதரவும் எதிர்ப்பும்!
டெல்லி: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு உச்சநீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சஞ்சய்தத்துக்கு ஜெயில் தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தி திரைப்பட உலகினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சஞ்சய்தத்துக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பத்திரிகை கவுன்சில் தலைவருமான மார்கண்டே கட்ஜு மராட்டிய மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளார். மார்கண்டே கட்ஜுவின் கருத்துக்கு அமைச்சர்களிடமும், பாலிவுட் பிரபலங்களிடையேயும் ஆதரவு பெருகி உள்ளது.

ஆறுதல் சொன்ன ரன்பீர், வித்யாபாலன்
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை வித்யாபாலன் ஆகியோர் சஞ்சய் தத் வீட்டுக்கு நேரில் சென்று தங்களது அதிர்ச்சியை தெரிவித்து கொண்டதோடு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவை தெரிவித்தனர்.

சத்ருகன் சின்கா கருத்து
இதேபோல இந்தி நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சத்ருகன் சின்கா சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று தங்கள் வேண்டுகோளை தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி
சஞ்சய் தத்திற்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினால் அதிக அளவில் மகிழ்ச்சியடைவது நான்தான் என்று கூறியுள்ளார் சுற்றுலாத்துறை அமைச்சர் சிரஞ்சீவி

கவர்னரிடம் அதிகாரம் உள்ளது
சஞ்சய்தத்துக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் டி.பி. திரிபாதி, குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய்தத்துக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் சட்டவிரோத ஆயுதம் வைத்து இருந்ததாக தான் கைது செய்யப்பட்டார். அவருக்கு கவர்னர் நிச்சயம் கருணை காட்ட வேண்டும். இதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது என்றார்.

சஞ்சய் தத் அப்பீல் செய்யலாம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், ‘‘இந்த பிரச்சினையில் நடிகர் சஞ்சய்தத் கவர்னரிடம் அப்பீல் செய்தால், அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்துவார். மன்னிப்பு வழங்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு. இதுபற்றி நாங்கள் விமர்சிக்க கூடாது. சஞ்சய் தத் அப்பீல் செய்யும் பட்சத்தில், அரசு உரிய முடிவை எடுக்கும்'' என்றார்.

உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டீல்
அதேசமயம் சஞ்சய்தத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது பற்றி எந்த விண்ணப்பமும் இதுவரை பெறப்படவில்லை என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர். ஆர் பட்டீல் கருத்து தெரிவித்துள்ளார். இது அனைத்து மத்திய அரசு தொடர்புடையது. இதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் முழுவதுமாக வாசிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதே சமயம் மகாராஷ்டிரா முதல்வர் பிரிதிவிராஜ் சவான் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டார்.

பா.ஜ.க, சிவசேனா எதிர்ப்பு
பொது மன்னிப்பு வழங்கும் விவகாரத்தில் பா.ஜனதா, சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
சிவசேனா எம்.பி. அனில் தேசாய், "நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படுவதாக சஞ்சய்தத்தே கூறியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கூறும் நிலையில், குண்டுவெடிப்பின் போது உயிரிழந்தவர்களை நினைத்து பார்க்க வேண்டும்" என்றார்.
பா.ஜனதா எம்.பி. பால்பிர் புஞ்ச் கூறுகையில், ‘‘மார்க்கண்டே கட்ஜு நீதிபதியாக நீடிக்கவில்லை என்பதை மறந்து விட்டார். அவர் தற்போது பத்திரிகை கவுன்சில் தலைவராக இருக்கிறார். சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் முடிவு எடுத்து உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏழைகளுக்கு ஒரு சட்டம், பிரபலமானவர்களுக்கு ஒரு சட்டம் என தவறான கருத்து ஏற்பட்டு விடும்'' என்றார்.












Click it and Unblock the Notifications