For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில்தான் தலித்கள் அதிகம்: ஜெயலலிதா தகவல்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில்தான் தலித்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர் என்று சட்டசபையில் முதல்வசர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் உள்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறைகள் மீதான விவாதம் நடந்தபோது பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), தமிழ்நாட்டில் 1,740 காவல் நிலையங்கள் உள்ளன. காவல் நிலையங்களில் தலைமை பொறுப்பில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பதவிகளில் ஆதி திராவிடர் வகுப்பினர் 10 சதவீதம்கூட இல்லை என்றார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு பேசுகையில், இந்தியாவிலேயே தமிழக காவல்துறையில்தான் ஆதிதிராவிடர் வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக தேசிய அளவில் பார்த்தால் இந்த எண்ணிக்கை 10.46 சதவீதமாகும். ஆனால் தமிழக காவல்துறையில் ஆதி திராவிடர் வகுப்பினர்களின் எண்ணிக்கை 16.69 சதவீதம் ஆக உள்ளது.

இதர மாநிலங்களில் காவல்துறையில் பணிபுரியும் ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

மேற்கு வங்கம் - 13.91

கர்நாடகம் - 13.38 சதவீதம்

குஜராத் - 13.3 சதவீதம்

பீகார் - 12.32 சதவீதம்

ஆந்திரா - 9.78 சதவீதம்

மகாராஷ்டிரம் - 9.62

உத்தரப் பிரதேசம் - 8.17

இதனால் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களை விட தமிழ்நாட்டில் காவல்துறையில் ஆதி திராவிடர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்றார் ஜெயலலிதா.

தமிழகத்தில் நக்ஸல்கள் காலூன்ற முடியவில்லை:

முன்னதாக ஜெயலலிதா தாக்கல் செய்த காவல் துறை மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழக மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விரும்புவதால், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்குகிறது. எங்கு ஒழுங்கு நிலை பாதுகாக்கப்படுகின்ற சூழ்நிலை உள்ளதோ அந்த மாநிலமே அமைதியின் உறைவிடமாகும்.நாட்டில் பல மாநிலங்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இனக்கலவரங்கள் மற்றும் மோதல்கள் தமிழகத்தில் இல்லை.
ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும் அக்கறையுடனும், கருணையுடனும் இந்த அரசு அணுகுவதால், தமிழகத்தில் இடதுசாரி தீவிரவாத சக்திகள் காலூன்ற முடியவில்லை.

கூடங்குளம், முல்லைப் பெரியாறு, விஸ்வரூபம் விவகாரங்கள்...

அரசு திறமையுடன் கையாண்ட நடைமுறை செயல்பாடுகளால், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை, கூடங்குளம் அணு உலை திறப்பு, இலங்கை அரசுக்கு எதிராக ஏற்பட்ட உணர்வு பொங்கிய எழுச்சி போன்ற நிகழ்வுகள், டேம் 999 மற்றும் விஸ்வரூபம் திரைப்படம் போன்ற பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் எழுந்த கொந்தளிப்பான சூழ்நிலைகளை சுமுகமாக தீர்க்க உதவியுள்ளது.

யாதும் ஊரே யாவரும் கேளீர்...

தொன்மைவாய்ந்த ஒரு மாபெரும் கலாசாரத்துக்கு சொந்தக்காரர்களாக விளங்கும் நாம், அமைதிக்கும், பொது ஒழுங்கிற்கும் பங்கம் விளைவிப்பது பொருளாதார முன்னேற்றத்துக்கு தடையாக விளங்கும் என்பதை உணர்வோம்.

வரலாற்றை உற்று நோக்கும்போது, இந்தியாவில் சண்டை, சச்சரவுகளும், கலவரங்களும் மிகக் குறைவாக காணப்படும் இடம் எது என்று தேடினால், அது தமிழகம்தான் என்பது தெரியும்.

மாநில நிர்வாகத்தை வழிநடத்துவதிலும், முக்கியமாக காவல்துறையை நிர்வகிப்பதிலும் நான் கனிவும் கண்டிப்பும் கலந்த ஒரு நடைமுறையைப் பின்பற்றி வருகிறேன். இயற்கை அன்னையே என்னுடைய ஆசானாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறாள். அதனால்தான் வலிமையும், திறமையும் கட்டுப்பாடும், மனித நேயமும் கொண்ட நம்முடைய காவல்துறை கனிவுடனும் அதே சமயத்தில் கண்டிப்புடனும் பணியாற்றுகிறது.

இன்று மாநிலத்தில் அமைதியும், பொது ஒழுங்கும் ஸ்திரத்தன்மையும் காணப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. தொழில் முதலீடுகள் பெருமளவில் வந்த வண்ணம் உள்ளன. தொழிலாளர்கள் கொந்தளிப்பு எதுவுமில்லை. விவசாயிகள் பாதுகாப்புடன் நலமாக உள்ளதை உணர்கின்றனர்.

வேலைவாய்ப்பு, மேற்படிப்பு மற்றும் மருத்துவ வசதிகளைத் தேடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர்.

ஆகவேதான், உலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், தமிழன் தலைநிமிர்ந்து நிற்க முடிகிறது. உண்மையிலேயே, அடிக்கடி மேற்கொளிட்டு கூறப்படும் தொன்மை வாய்ந்த சங்ககால கவிதை வரியான ‘‘யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்ற பொன்மொழிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக தமிழகம் ஒளிரத் தொடங்கி இருக்கிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

English summary
Tamil Nadu chief minister J Jayalalithaa announced in the assembly the formation of a new university for policing and internal security. Jayalalithaa, who is also the home minister, unveiled new housing projects for the police, hiked allowances and unveiled new measures for upping security in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X