செக்ஸ் வைத்துக் கொள்ளும் வயதை 18 ஆக நிர்ணயிக்க மனு: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதை 18 ஆக நிர்ணயிக்க உத்தரவிடக் கோரும் மனுவிற்கு பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
குற்ற சட்டத் திருத்தம் 2013இன் படி 375ஆவது பிரிவில் சமீபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியின் ஒப்புதலுடன் அவரது கணவன் பாலுறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து "ஐதாட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது (பாலியல் பலாத்காரம்) பிரிவில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் விக்ரம் ஸ்ரீவாஸ்தவ் ஆஜரானார்.
மேஜர் என்பதற்கான வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மனைவி அல்லது காதலி ஒப்புதலுடன் பாலுறவு வைத்துக் கொள்வதற்கான வயதையும் 18ஆக நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என விக்ரம் கேட்டுக் கொண்டார்.
இந்த மனுவை விசாராணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications