For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட தமிழகம்.. தனி மாநில கோரிக்கைக்காக 'மாநில பிரிப்பு மக்கள் இயக்கம்': இரா. அன்பரசு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து வட தமிழகம் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பதற்காக 'மாநில பிரிப்பு மக்கள் இயக்கம்' உருவாக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா. அன்பரசு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், மாநிலங்கள் பிரிக்கப்படுவதில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்பதில் அதீத நம்பிக்கைக்கொண்டவர் நேரு. அதனால் தான் 6 பெரிய மாநிலங்களும் 6 சிறிய மாநிலங்களும் மட்டுமே இருந்த இந்தியாவில் பெரிய மாநிலங்களை உடைத்து புதிய மாநிலங்களை உருவாக்கினார் அவர். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை மாகாணத்தை தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என நான்காக பிரித்ததால்தான் 4 மாநிலங்களும் பெருத்த வளர்ச்சியை கண்டது.

நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும். சிறிய மாநிலம்தான் சிறந்த நிர்வாகத்திற்கு அடிப்படை. அதனால்தான், 13 மாவட்டங்கள் இருந்த தமிழகத்தில் இன்றைக்கு 32 மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்ட பிரிப்புக்கு அரசாங்கம் என்ன காரணங்களைச் சொல்கிறதோ அதே காரணங்கள் மாநில பிரிப்புக்கும் பொருந்தாதா?

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தமிழகத்தின் தென்கோடியிலுள்ள மக்கள் வந்து போவதில் ஏற்படும் சிரமங்கள், குவிந்துகொண்டிருக்கும் வழக்குகளை விசாரிப்பதில் ஏற்படும் காலதாமதங்கள் போன்றவற்றை கணக்கிட்டுத்தான் தென் மாவட்ட மக்களுக்காக உயர்நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் திறந்திருக்கிறார்கள்.

அதேபோல, மக்கள் தொகையின் அடிப்படையில் பெரியதாக இருக்கும் தொகுதிகளை உடைத்து மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில்தான் பரந்து விரிந்து கிடக்கும் தமிழகத்தை இரண்டாக பிரியுங்கள் என்கிறேன்.

சென்னை தலைநகரமாக இருப்பதால் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தொழில் மற்றும் வேலை வாய்ப்பை முன்னிட்டு வட தமிழகத்தில் நெருக்கமாக குடியேறி விட்டார்கள். இதனால் விவசாய நிலங்கள் குடியிருப்புகளாக மாறி சுற்றுச்சூழல் பாதிப்பு, இட நெருக்கடி உள்பட நிறைய பாதிப்புகளை வட தமிழகம் சந்திக்கிறது.

அதேசமயம், ஒரு பக்கம் வளர்ச்சி, ஒரு பக்கம் தொய்வு... அதாவது "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது' என்கிற யதார்த்த நிலையும் தமிழகத்தில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை, சமமான வாய்ப்பு என்பது பறிபோகிறது. மேலும் வட தமிழகத்தில் மக்கள் பெருக்கத்தால் சட்டமன்ற தொகுதிகள் தென்மாவட்டங்களில் குறைவாகவும் வட மாவட்டங்களில் அதிகமாகவும் உருவாகியிருக்கிறது. இப்படி எத்தனையோ உதாரணங்களை பட்டியலிட முடியும். அதனால், தமிழகத்தை இரண்டாக பிரிப்பதன் மூலம் தனி நிதி, அதிக நிதி மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். அந்த நிதியைக் கொண்டு அந்த பகுதி மக்களின் வளர்ச்சிக்காக திட்டங்களை உருவாக்க முடியும்.

வட தமிழகத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருப்பதால்தான் இந்த பிரிப்பு விவகாரத்தை கையிலெடுத்திருப்பதாக சொல்வது தவறு. அப்படியே நான் எடுத்தேன் என்றாலும் அதில் தப்பில்லை என்பது என் வாதம். ஏனெனில், பெரும்பான்மை சமூகம் ஆள வேண்டும். சிறுபான்மை சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயகம். ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இல்லையே. பெரும்பான்மையை சிறுபான்மை ஆள்வது சர்வாதிகாரம். தமிழகத்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

வட தமிழகம் உருவாக வேண்டுமென்பது கிட்டத்தட்ட 60 ஆண்டு கால கோரிக்கை. அதனை உயிர்த்தெழ வைக்க நான் களமிறங்குகிறேன். அதற்காக அந்த கோரிக்கையை வலியுறுத்தி, "மாநில பிரிப்பு மக்கள் இயக்கம்' என்கிற புதிய அமைப்பை உருவாக்கி ஒத்த சிந்தனையுள்ளவர்களை ஒன்றிணைத்துப் போராட முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

English summary
Joining the growing chorus of demand for smaller states across the country, now announced the launch of a movement to press for the bifurcation of the Tamilnadu state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X